September 8, 2015

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற விடுதலை முரசம் நிகழ்வு!(படங்கள் இணைப்பு)

தாயகத்தில் தொடர்துன்பத்திற்கும் பொருளாதார இடர்களுக்கும் மத்தியில்  இன்னலுக்குட்பட்டுள்ள எமது இன மக்களுக்கு உதவும் முகமாக பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் பிரான்சு தமிழர்
விளையாட்டுத்துறையினர் முதற் தடவையாக முன்னெடுத்த 'விடுதலைமுரசம்" நிகழ்வு 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரான்சு செந்தனிப் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 07.03.2008 அன்று மன்னாரில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் தமிழ்பிரியாவின் சகோதரன் ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை தமிழகத்தில் இருந்து வருகைதந்த தமிழின உணர்வாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் செலுத்தினார்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழீழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்களின் இசைக்குழுவினரின் இசை நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

தொடர்ந்து ஆசிரியை திருமதி தில்லைரூபன் மோகனரூபி அவர்களின் மாணவிகளின் 'தமிழீழத் தலைவீரம்" மற்றும் 'எமது பழமைசொல்லும் கதை" ஆகிய நடனங்கள், ஆசிரியை திருமதி றொனி செல்வராஜா அவர்களின் மாணவிகளின் நடனம், 'தமிழீழத்தின் விடியல் இளைஞர்கள் கையிலா ஆரசியல்வாதிகளின் கையிலா" என்னும் தலைப்பிலான பட்டிமன்றம், கலைஞர் திரு.செல்வகுமார் அவர்களின் 'மகிந்தவின் ஆட்சியும் வீழ்ச்சியும்" எனும் குறுநாடகம்,  'இருப்பவர்கள் இருந்திருந்தால்"  எனும் தனிநடிப்பு, ஆசிரியை திருமதி தனுஷாமதி அவர்களின் மாணவிகளின் நடனம், ஐரோப்பாவின் புகழ்பூத்த கலைஞர்கள் இணைந்து வழங்கிய 'நல்லவர்கள்" சிறப்பு நாடகம், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்புரை மற்றும் தமிழின உணர்வாளர் கொளத்தூர்மணி அவர்களின் காணொளி உரை என அனைத்து அம்சங்களும் மிகவும் சிறப்பாய் அமைந்திருந்தன.

தொடர்ந்து சிறப்பு நிகழ்வாக நடனக் கலைஞர் பிரேம்கோபால் குழுவினர் வழங்கிய எழுச்சி நடனம் இடம்பெற்றது. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இளம் பாடகர்கள், நாடக, நடன, இசை கலைஞர்கள் வருகைதந்து நிகழ்வுக்கு மேலும் அழகுசேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலைஞர்கள், வீரர்கள், நடன ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள் என பலரும்  கௌரவிக்கப்பட்டனர். பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை செயலாளரினால் அறிக்கையும் வாசித்தளிக்கப்பட்டது.
 

பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் தனது சிறப்புரையில், தமிழர்களின் முகவரி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே, நாம் ஒவ்வொருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிள்ளைகளே. எந்த இலட்சியத்திற்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் போராட்ட களத்தில் குதித்தாரோ, அதே இலட்சியத்திற்காக தனது குடும்பத்தினரையும் இணைத்தவர். விடுதலைப்புலிகளுக்கு நிகராக எங்கும் இருந்ததில்லை.
வன்னியில் நடந்ததுபோன்ற ஒருகொடுமையை நான் எங்கும் அறிந்திருக்கவில்லை. இம்மாதம் ஜெனிவாவில் நாம் ஒன்று திரண்டு  எமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், விரைவில் தமிழீழம் மலரும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழின உணர்வாளர் கொளத்தூர்மணி அவர்கள் தனது காணொளி உரையில், விடுதலை முரசம் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள புறப்பட்ட எனது பயணம் கைகூடாமல்போய்விட்டது. அதற்கு நான் வருந்துகின்றேன். இவ்வாறான நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது.
 
சிறிலங்காவில் புதிதாக உருவாகியுள்ள அரசு, தமிழ் மக்களுக்கு எதுவும் செய்துவிடப்போவதில்லை. புலம்பெயர் மக்களின் எழுச்சியே தமிழர்களுக்கு விடிவைத்தரும். தொடர்ச்சியாக நாம் போராடவேண்டும். ஜெனிவாவில் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடவேண்டும் - என்றார். 
 
நிகழ்வில் தமிழீழத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள், பேராசிரியர், திரு.கல்யாணசுந்தரம் அவர்களால் மதிப்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இ;ந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள், நிகழ்வின் நிறைவுவரைக்கும் ஆர்வத்துடன் இருந்து நிகழ்வுகளை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் அரங்கில் ஒலிக்க அனைவரும் எழுந்து நின்று கைகளைத்தட்டியதுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.   
ஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.      






















  

No comments:

Post a Comment