September 28, 2015

அகதிகளுக்கு உதவிய பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றிய அதிகாரிகள்: ஜேர்மனியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியில் குடியேறும் அகதிகள் தங்குவதற்காக அந்நாட்டை சேர்ந்த செவிலிய பெண் ஒருவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறபித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள 8 கோடியே 10 லட்சம் மக்களில் சுமார் 50 சதவிகிதத்தினர் வாடகை வீடுகளில் மட்டுமே வசித்து வருகின்றனர்.
சுமார் 6,000 மக்கள் தொகை கொண்ட Nieheim என்ற நகரில் வசிக்கும் மக்களுக்கும் இதே நிலை தான். இதே நகரில், பெட்டினா ஹல்பே என்ற 51 வயதான செவிலிய பெண் ஒருவர் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார்.
3 அடுக்குமாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் உள்ள 90 சதுர அடி அளவுள்ள ஒரு வீட்டில் 16 வருடங்களாக வசித்து வருகிறார்.
இரக்கம் குணம் கொண்ட அந்த செவிலிய பெண்மணி தனது வீட்டிற்கு அருகே உள்ள அகதிகள் பலருக்கும் உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் அவருக்கு வீட்டு உரிமையாளர் மற்றும் உள்ளூர் நகராட்சி நிர்வாகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், ஜேர்மனிற்கு வந்துள்ள புலம்பெயர்ந்தவர்களை தங்க வைக்க உள்ளதால் தங்களுடைய வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி, அகதிகளுக்கு உதவி வந்த தன்னையே இவர்கள் வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள் என வேதனை அடைந்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், அவர்களை காப்பதற்காக தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம்?
மேலும், அகதிகளுக்காக அரசு 2 பில்லியன் யூரோ கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி அவர்களுக்கு தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்நகர மேயரான ரைனர் விடால், புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிதாக வீடுகளை கட்டித்தர நகராட்சிக்கு சுமார் 30 ஆயிரம் யூரோ தேவைப்படும்.
ஆனால், நீண்டகாலமாக வசித்து வரும் இதுபோன்ற வாடகைதாரர்களின் வீட்டை காலி செய்தால் எந்த செலவும் ஏற்படாது என பதில் கூறியுள்ளார்.
ஜேர்மனி நாட்டு சட்டப்படி, வாடகை வீட்டில் வசித்து வரும் ஒரு குடியிருப்புவாசி தன்னுடைய சொந்த காரணங்களுக்காக மட்டுமே அவராகவே வீட்டை காலி செய்யும் உரிமை உள்ளது.
இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு குடியிருப்புவாசியை வற்புறுத்தி வெளியேற்ற முயற்சிப்பது சட்டப்படி குற்றமாகும்.
ஆனால், செவிலிய பெண்ணின் கேள்விகளுக்கு செவி சாய்க்காத நகராட்சி நிர்வாகம் எதிர்வரும் 2016ம் ஆண்டு மே மாதம் வரை வீட்டை விட்டு வெளியேற அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment