இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவினால்
நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டையின் போது பெறப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அலுவலர் பிரதீப் வகிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3மணிக்கு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமி ழர் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த தமி ழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் பிரதிநிதி சிரேஷ்ட சட்டத்தரணி புவிதரன் மற்றும் சிவில் சமுகத்தின் பிரதிநிதி ஆகியோர் அக்கையெழுத்துப் பிரதிகளை சமர்ப்பித்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இம்மாதம் 4ஆம் திகதி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.அதனைத்தொடர்ந்து அச்செயற்பாட்டுக்குழு கடந்த ஒன்பதாம் திகதி யாழ். மாவட்டத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டையை ஆரம்பித்தது.
அதனைத்தொடர்ந்து வடகிக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கையெழுத்து வேட்டை நகர்ந்தது. தொடர்ச்சியாக பத்து தினங்கள் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்பாட்டில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமாக கையெழுத்துக்கள் பெறப்பட்டன. ஆப்பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மேலும் 25ஆயிரம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகளும் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அக்குழுவினர் தெரிவித்ததோடு குறித்த பிர திகள் ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளதாக மனித உரிமை அலுவலர் தெரி வித்ததாகவும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment