September 8, 2015

மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை-சம்பந்தன்!

மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. அதனால் தான் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள். அவர்கள் சர்வதேச விசாரணையை கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு என்று தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், ஊடகவியலாளர் சந்திப்பும் அவரது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.இக் கலந்துரையாடல் நிகழ்வில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் இரா.சம்பந்தன் பதிலளித்தார்.
உள்ளக விசாரணை தேவையில்லை, சர்வதேச விசாரணையே அவசியம் என முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சம்பந்தன், ‘திருகோணமலை – மூதூரில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தில் சேவையாற்றிய 17 பேர் மற்றும் கடற்கரையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் விடயம் தொடர்பாக விசாரணை செய்ய சர்வதேச நிபுணர்களை நியமித்தார்கள் என்ன நடந்தது? அவர்கள் கூறியது என்ன? இலங்கை அரசுக்கு சர்வதேச விசாரணை செய்ய விருப்பம் இல்லை எனக்கூறி நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
அதற்கு பிறகு விசாரணைகள் ஒருவாறாக இடம்பெற்று அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை எங்கே? அந்த அறிக்கை வெளிவரவில்லை. இவ்விதமான ஒரு சூழலில் உள்ளக விசாரணை மீது நம்பிக்கை வைக்கும் படி மக்களிடம் எப்படி நாங்கள் கேட்பது. மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. அதனால் தான் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள். சர்வதேச விசாரணையை கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு.
ஆனால் தற்போழுது சர்வதேச விசாரணை 2014 பங்குனி மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெற்று சில நாட்களில் அது வெளிவர இருக்கின்றது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகு இவ்வாறான பல கேள்விகளுக்கு முடிவு வரும் என நான் நினைக்கின்றேன்’ என இரா.சம்பந்தன் பதிலளித்தார்.

No comments:

Post a Comment