August 4, 2015

பாராளுமன்றத் தேர்தலும், தமிழர்கள் ஆதரிக்கவேண்டிய கட்சியும்! -அரவிந்தை!

ஆயுத பலத்தால் தமிழினத்தை அடக்கி ஆளவேண்டுமென்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலையே தமிழர்கள் ஆயுதமேந்த
மூலகாரனமாகும். தமிழர்களது இருப்பைப் பாதுகாக்கவும், அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குமாக ஆயுதவழியில் போராட்டத்தை முன்னெடுக்க தமிழர் தரப்பு நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் அமைதிவழியில் தீர்வுகாண கிட்டிய சந்தர்ப்பங்களை தமிழீழத் தேசியத் தலைமை ஒருபோதும் புறக்கணித்திருந்ததில்லை.

படை பல ரீதியில் பலம்பெற்று இராணுவச் சமநிலையில் மேலோங்கியிருந்த  புறச்சூழலில் எமது மக்களின், மண்ணின் விடிவிற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் நியாயப்பாட்டினை அரசியல் ரீதியாக சிங்கள சமூகத்திற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவுபடுத்தும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் விதத்தில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துக் கொண்ட மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் தமிழர்கள் இதே போன்றதொரு பாராளுமன்றத் தேர்தலை அன்றும் எதிர்நோக்கியிருந்தார்கள்.

சிறிலங்கா அரசியலமைப்பின் தமிழர்விரோதப் போக்கும் சிங்கள அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இனவாதம் நீடித்துவருவதும் தமிழர்கள் தனித்தேசமாக பிரிந்து செல்வதே ஒரே வழியாகும் என்ற கையறு நிலையைத் தோற்றுவித்திருந்தது. இந்த வரலாற்று புறநிலையில் தனித் தமிழீழ சோசலிச குடியரசை நோக்கிய தமிழர்களது விடுதலைப் போராட்டம் ஆயுதவழிப் போராட்டமாக கருக்கொண்டதுடன் தமிழ் மக்களின் பங்கேற்புடன் மக்கள் போராட்டமாகப் பலம்பெற்று வளர்ச்சிகண்டது.

இராணுவச் சமநிலையில் சிங்கள அரசபடைகளைவிட மேலோங்கியிருந்த நிலையிலும் ஒருதலைப் பட்சமான போர்நிறுத்த அறிவிப்பினை வெளியிட்டு சமாதானவழிமுறையில் தீர்வுகாண தமிழீழத் தேசியத் தலைமை அமைதிக்கான கதவைத் திறந்திருந்தது.

போர் மீது நாட்டம் கொண்டிருந்த சந்திரிக்கா அரசு அமைதிக்கான வாய்ப்பினை மறுத்து ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டதுன் பாரிய இராணுவ நடவடிக்கையினையும் தமிழர் தேசத்தில் மேற்கொண்டிருந்தது.

'அக்கினிச் சுவாலை' யாக தமிழர் தேசத்தை எரித்து அழித்துவிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை முறியடித்ததன் மூலம் இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாத சக்தியென்பதை மீண்டும் சிங்கள தேசத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்தியதோடு தொடர்ந்தும் அமைதிக்கான முயற்சியில் தமிழீழத் தேசியத் தலைமை ஈடுபட்டது.

1- தமிழ் மக்களின் ஏகபிரதிநிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே.

2- தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை சிறிலங்கா அரசு ஏற்று அதனடிப்படையில் அரசியல் தீர்வினைக்காண முன்வரவேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதனை ஏற்றுக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. வட-கிழக்குப் பகுதி மக்கள் இதனை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தார்கள். 3,48,164 வாக்குகளின் அடிப்படையில் 15 பாராளுமன்ற ஆசனங்கள் த.தே.கூட்டமைப்பு பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரத்தையும், தமிழர்களின் விடுதலை இயக்கத்திற்கு பயங்கரவாத முத்திரைகுத்திய சர்வதேச நாடுகளின் அயோக்கியத்தனத்தையும் மறுதலித்து தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு பேராதரவினை வழங்கியிருந்தார்கள்.

'தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை ஏகோபித்து வெளிப்படுத்துவதாக நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் ஒரே தலைமை, ஒரே கொள்கை என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஒருமித்து நின்றதுபோல் இந்தத் தேர்தலிலும் அமையவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.' இவ்வாறு 14-02-2004 அன்று சுவிட்சர்லாந்து தலைநகர் சூரிச்சில் இருந்தவாறு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிவிபொன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் 2004 இல் நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலில் வட-கிழக்குப் பகுதிகளில் த.தே.கூட்டமைப்பிற்கு 6,33,654 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் 22 பாராளுனன்ற ஆசனங்கள் தமிழர் வசமாகியது.

2001 மற்றும் 2004 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ் மக்கள் தமது பங்கேற்பின் மூலம் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனையும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பனவற்றின் அடிப்படையிலேயே தீர்வுகாண வேண்டும் என்பதனையும் அறுதியிட்டு தெரியப்படுத்தியிருந்தார்கள்.

சனநாயக வெளியில் தமிழர்கள் வழங்கியிருந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் அரசியல் தளத்தில் தமிழர்களது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஆரம்பம் முதல் இன்றுவரை அந்தப் பாதையைத் தவிர்த்து 13 வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தீர்வினைக்காண முயன்றுவருகின்றது.

'தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாகத் தாம் வாழ்ந்துவந்த தாயகமண்ணில், நிம்மதியாக, சமாதானமாக, கௌரவத்துடன் வாழ விரும்புகிறார்கள். அவர்களது அரசியற் பொருளாதார வாழ்வை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள விரும்புகிறார்கள். தம்மை நிம்மதியாகத் தம்பாட்டில் வாழ்விடுமாறு கேட்கிறார்கள். இதுதான் தமிழர்களது அடிப்படையான அரசியல் அபிலாசை. இது பிரிவினைவாதமோ, பயங்கரவாதமோ அல்ல. தமிழர்களது இக்கோரிக்கை சிங்கள மக்களுக்கு எந்தவகையிலும் ஓர் அச்சுறுத்தலாக அமையவில்லை. சிங்கள மக்களது அரசியற் சுதந்திரங்களையோ அல்லது அவர்களது சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வையோ இக்கோரிக்கையானது எவ்வகையிலும் பாதிக்கவில்லை. தமது சொந்த நிலத்தில், தம்மைத் தாமே ஆளும் ஆட்சியுரிமையோடு வாழ வழிவகுக்கும் ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியற் தீர்வு அமைய வேண்டுமென அவர்கள் வலியுறுத்துவதும் இதனைத்தான்.' இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியதை சிங்கள சகோதரர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் கொண்டுசேர்க்கும் வரலாற்றுப் பணியில் கண்துஞ்சாது செயலாற்றியவர்கள் இன்று நம்முடன் இல்லை.

மாமனிதர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு, சிவநேசன் ஆகியோர் மேற்கொண்ட பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடரத்தவறியது மட்டுமல்லாது அவர்களது படுகொலைக்கு நீதி கேட்கவோ அதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முகத்திரையை கிழித்து அம்பலப்படுத்தவோ முயற்சித்திருக்கவுமில்லை.

தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தி தமிழர்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க அயராது பாடுபட்ட இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாமனிதர்களான 'தராக்கி' சிவராம், நிமல்ராஜன், நடேசன் ஆகிய பத்திரிகையாளர்களுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதம் கொடுத்த பரிசு 'மரணம்'.

இவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாத அரசு திட்டமிட்டு மேற்கொண்ட படுகொலைகளுக்கான நீதியென்பது இலங்கைத் தீவின் உண்மை முகத்தை வெட்டவெளிச்சமாக்கும் சக்திமிக்க ஆயுதமாகும். அதனைப் பயன்படுத்தி தமிழர்களது உரிமைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை சிங்கள சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்தும் முயற்சியல் த.தே.கூட்டமைப்பு இன்றுவரை ஈடுபடவில்லை.

அதுமட்டுமல்லாது தமிழ்த் தேசியத்தின் வழியில் நின்று தமிழர்களது உரிமைப் போராட்டத்தினை அரசியல் தளத்தில் முன்னெடுத்து வந்தவர்களையும் இந்திய மற்றும் உலக வல்லாதிக்க நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

தமிழர்களது அரசியல் அபிலாசைகளின் வெளிப்பாடாக அரசியல் சக்தியாகப் பலம்பெற்று வளர்ச்சியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பிராந்திய உலக வல்லாதிக்க சக்திகளின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகவர் அமைப்பாக மாற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்தின் வழிநின்று தமிழர்களது உரிமைப் போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுத்துவருபவர்களை இனம்கண்டு பலப்படுத்த வேண்டிய தேவையும் கடமையும் எமக்கு உண்டு.

பிராந்திய உலக வல்லாதிக்க நாடுகளின் விருப்பினடிப்படையில் த.தே.கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ்த் தேசியவாதிகளை ஒருங்கிணைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே மாற்று அரசியல் சக்தியாக தமிழர் தாயகத்தில் செயலாற்றிவருகின்றது.

அரசியல் ரீதியாக பலம்பெற்றிருக்காவிடினும் தமிழர்களது உரிமைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றிவருகின்றார்கள் தமிழ்த் தேசிய மக்க்கள் முன்னணியினர்.

எமது தாயகத்தை ஆக்கிரமித்து எமது அடையாளங்களை சிதைத்து எமது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை நிர்மூலமாக்கி குடிப்பரம்பலில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிரான போராட்டங்களில் உறுதியுடன் போராடிவருகின்றமை.

இன அழிப்புப் போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் துணைநின்று வருகின்றமை.

போரின் போதும் அதன் பின்னரும் சிங்கள இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்ட, சரணடைந்த தமிழ் இளைஞர் யுவதிகளின் விடுதலைக்கும், சட்டவிரோத தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அரசியல் போராளிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துவருவது.

இன அழிப்புப் போரில் கணவன்மாரை இழந்து விதவைகளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் வாழ்வை மேம்படுத்த துணைநிற்பது.

தமிழர்கள் மீது சிங்கள அரச படைகளால் நடத்தப்பட்டது, நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலைதான் என்பதை உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் தெரிவித்துவருவதுடன் அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் பணியில் அயராது ஈடுபட்டுவருவது.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் எமது மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கு எதிராக மக்களோடு மக்களாக நின்று போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கீழ்காணும் விடையங்களிலும் ஒத்திசைவாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வருகின்றது.

நீடித்துவரும் தமிழர்களது இனப் பிரச்சினைக்கு தனித் தமிழீழ தேசம் அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்திவருவது.

சிங்கள பௌத்த பேரினவாத அரச படைகளால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு சர்வதேச சுயாதீன விசாரனை வேண்டும் என்பதை வலியுறுத்துவது.

சிங்கள இராணுவத்தால் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திவருவது.

சிங்கள தேசத்துடன் இணைந்து வாழ்வதா இல்லை தனித் தேசமாக பிரிந்து செல்வதா என்பதனை தமிழர்களே தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பை நடத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்துவருவது.

இவ்வாறு, அதிகாரம் ஏதுமற்ற நிலையிலும் சமரசமின்றி தமிழர்களின் உரிமைக்காக அரசியல் ரீதியாக செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்துப் பலப்படுத்துவது ஒன்றே தமிழர்களது உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பதனை நாம் உறுதியாக நம்புகின்றோம்.

சிங்களத் தரப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பி., ஜனநாயகக் கட்சி என பிரிந்து நின்று தேர்தலை எதிர்நோக்கியிருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன்னிறுத்தியே அவை சிங்கள வாக்குகளைக் குறிவைத்துள்ளன.

இந்நிலையில் தமிழர்களது அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி பெரும் அரசியல் சக்தியாக தமிழர்தரப்பை பலப்படுத்தியிருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் பிராந்திய உலக வல்லாதிக்க சக்திகளின் எடுபிடியாக மாறியுள்ளதுடன் அடிபணிவு அரசியல் மூலம் தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பெரும் பின்னடைவிற்கு இட்டுச் சென்றுள்ளார்கள்.

லடசக்கணக்கிலான தமிழ் மக்களின் தியாகத்தாலும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது அர்ப்பணிப்பாலும் பலம்பெற்றுள்ள தமிழர்களது உரிமைப் போராட்டத்தை எக்காரணம் கொண்டும் தீயசக்திகளிடம் விட்டுக்கொடுத்துவிட முடியாது.

'வட–கிழக்கில் திட்டமிட்ட கட்ட­மைப்பு சார் இன அழிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்துள்ளது. இச்செயற்பாட்டை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளோம். மக்கள் தமிழ்த் தேசியத்தின் பால் நின்று எமக்கான ஆணையை நிச்சயம் வழங்குவார்கள்.' என்ற கஜேந்திரகுமார் பொன்­னம்பலம் அவர்களின் வாக்குறுதியை ஏற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நாம் ஆதரிக்கின்றோம்.

-அரவிந்தை

No comments:

Post a Comment