July 27, 2015

தேர்தல் கடமைகளை செய்யத்தவறிய செல்வம் அடைக்கலநாதன்! – வன்னி மாவட்ட சுயேட்சைக்குழு கிண்டல்!

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுக்கின்ற பிரதான கட்சிகள் முதல் சுயேட்சைக்குழுக்கள் வரையிலும், அவை அனைத்தும் மாவட்ட வாரியாக தத்தமது கட்சிகளுக்கென்று முதன்மை வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கு என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பால் முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ‘ரெலோ’ செல்வம் அடைக்கலநாதன், முதன்மை வேட்பாளருக்குரிய தேர்தல் கடமைகளை செய்யத்தவறியுள்ளதாக வவுனியா மாவட்ட சுயேட்சை குழு ஒன்று கிண்டலாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
வவுனியா கச்சேரியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், ‘தேர்தல் ஒழுங்கு விதிகள் – சட்ட திட்டங்கள் தொடர்பில்’ மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரி, மாவட்ட பொலிஸ் அதிகாரி, அரசாங்க அதிபர் ஆகியோர் விளக்கமளிக்கும் கூட்டத்தில், சுயேட்சை குழுக்களின் முதன்மை வேட்பாளர்கள் கூட கலந்துகொண்டிருந்த நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளது.
இதனை மெய்ப்பிப்பதுபோல் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடைய வாக்காளர்களின் பெயர் விவரத்தை ஏனைய கட்சிகள் அனைத்தும் வவுனியா மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டுள்ள நிலையில், செல்வம் அடைக்கலநாதன் இன்றுவரை அந்த தபால் மூல வாக்காளர்கள் பெயர் விவரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.
மேலும் ஒவ்வொரு கட்சியினதும் முதன்மை வேட்பாளர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தத்தமது கட்சியின் ஏனையவர்களுக்கும் கடிதம் மூலம் உறுதிப்படுத்தி பகிர்ந்தளிக்கும் போதே, அவர்கள் பிரதேச ரீதியாக, மாவட்ட ரீதியாக தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதற்கும், அக்கூட்டங்களில் ஒலிபெருக்கிகளைப் பாவிப்பதற்கும் பொலிஸ் அனுமதியைப் பெறமுடியும். ஆனால் செல்வம் அடைக்கலநாதன் இன்றுவரை அந்த அதிகாரத்தை கூட்டமைப்பின் ஏனையவர்களுக்கு பகிர்ந்தளிக்காமையினால் கூட்டமைப்பின் ஏனைய வேட்பாளர்கள் பிரசார கூட்டங்களை நடத்த முடியாமல் அவதியுறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார பணிகள் முடங்கி மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன.
மக்களால் நன்கு அறியப்படாத சுயேட்சை குழுக்கள் கூட மேற்குறித்த விதிமுறைகளை அறிந்து, அவற்றில் அக்கறையுடன் செயற்பட்டு தமது கடமைகளை ஆற்றிவரும் நிலையில், வன்னி மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அக்கறையற்று செயற்பட்டு வருகின்றமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒன்பது வேட்பாளர்களின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளவர், தனது பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்யாமல் தனது வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றமை மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அன்றைய கூட்டத்திற்கு சமுகமளிக்காத செல்வம் அடைக்கலநாதனுக்காக நீண்ட நேரம் காத்திருந்த தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், அவர் வருவாரா? வரமாட்டாரா? என்பதை அறிந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிப்பதற்காக அவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்றும் அறிய கிடைக்கின்றது. அந்நேரத்தில் அவர் தனது தொகுதியில் தனது விருப்பு வாக்குகளை மட்டும் இலக்காகக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
-வீரதீரன்-

No comments:

Post a Comment