பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் 2 குழந்தைகளின் தந்தைக்கு திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் மனைவியான விபரீதம் நடந்துள்ளது. இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவரை பொலிசார் தற்போது வலைவீசிதேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் சித்ரா (வயது 28). நாமக்கல் திருச்செங்கோடு தாலுகா நாராயணப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் பழனிச்சாமி (29). இவரும் சித்ராவும் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள். இதில், அவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தியதோடு, இருவரும் காதல் வயப்பட்டனர். பின்பு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவ்வப்போது, நேரிலும் சந்தித்து காதலை வளர்த்தனர்.
இதற்கிடையே, சித்ராவின் பெற்றோரை நேரில் சந்தித்த முருகன், தங்களின் காதலை பற்றி கூறினார். பின்பு, தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதாகவும், அதனால் சித்ராவை உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கேட்டார். இதற்கு சித்ராவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13–ந்தேதி திருமணம் நடந்தது.
அதன்பின்பு, கள்ளிப்பட்டி சத்யாநகரில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினார்கள். 6 மாதங்கள் 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தனர். பின்பு, சித்ராவை அழைத்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு அருகே உள்ள வரப்பாளையத்துக்கு பழனிச்சாமி குடிபெயர்ந்தார். அவ்வப்போது தன்னுடைய பெற்றோரை பார்த்து வருவதாக சித்ராவிடம் கூறிவிட்டு நாராயணப்பாளையத்துக்கு சென்றுவந்தார்.
திடீரென 2 வாரமாக பழனிச்சாமி வீட்டுக்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சித்ரா, பழனிச்சாமியின் சொந்த ஊருக்கு சென்று விசாரித்ததில், அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. அதோடு, அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா, இது குறித்து பழனிச்சாமியிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர் சித்ராவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா, தன்னுடைய கணவர் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் அனைத்து மகளிர் பொலிசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் பேரில், விசாரணை நடத்திய சப்–இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ச்செல்வி புகார் கூறப்பட்ட பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்தார். தற்போது, அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை பொலிசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
No comments:
Post a Comment