April 6, 2015

இன்னுமாடா உலகம் உன்னை நம்பிக் கொண்டு இருக்குது - அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இப்புடி என்றால்?

அடி கொடுத்த கைப்புள்ளேக்கே இப்புடிக் காயம் என்றால் அடி வாங்கினவன் உயிரோட இருப்பானோ?’ இது வின்னர் படத்தில் வடிவேலுவைப் பார்த்து ஊர்ச்சனம் சொன்ன செய்தி.... அதுக்கு ’உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்கிட்டாங்களே’ என வடிவேலு அழுது கொண்டு ’இன்னுமாடா உலகம்
என்னை நம்பிக்கொண்டு இருக்குது’ என்று சொல்லுறது சிரிப்பான விடயமாக இருந்தாலும் அதற்குள் கன அர்த்தம் பொதிந்திருக்குது
மாவை சேனாதிராஜாவையும் அவருடைய பேச்சுகளையும் கதைகளையும்  இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் யாருக்கும் சிரிப்புத்தான் வரும்.

அந்த அளவுக்கு மாவை சொன்னது எதுவுமே நடந்ததில்லை. அப்படி மாவை சொன்னவற்றில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால், அதை யாராவது குறிப்பிட்டுக் காட்டலாம். அல்லது மாவை சேனாதிராஜாவே அதை எடுத்துக் காட்டலாம்.

1970 களில் அரசியலில் இறங்கிய மாவை, அந்தக் காலத்திலிருந்தே மேடைகளில் முழங்கி வருகிறார்.

ஆண்ட தமிழினம் மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன? என்று தொடங்கி, தமிழினம் தலைநிமிர்ந்து வாழும்வரை போராட்டமும் ஓயாது, நாங்களும் ஓய மாட்டோம் என்பது வரை மாவை விட்டுக்கொண்டிருக்கும் புலுடாக்கள் கொஞ்சநஞ்சமில்லை.

இதற்கிடையில் வலிவடக்கு மக்களின் மீள் குடியேற்றம் நடக்க வேணும். வலி வடக்கிலிருந்து படையினர் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறா விட்டால் அறப்போர், மறப்போர் எல்லாம் நடக்கும்.... எண்ட கதைகளையும் மாவை அவிட்டு விட்டிருந்தார்.
மாவையின் இந்த அறிவிப்புகளையும் மாவை சொன்ன இந்தக் கதைகளையும் தொடக்கத்தில் அப்படியே நம்பியவர்களும் உண்டு. இது முழுச் சுத்துமாத்து என்று சொன்னவர்களும் உண்டு.

ஆனால், மாவையின் புலுடாக்களைத் தலைப்புச் செய்திகளாக்கி, கொட்டை எழுத்தில் போடும் பத்திரிகைகளில் இருக்கின்ற இளவல்களுக்கு மாவை போன்றோரின் நாற்பது ஆண்டுகாலச் சுத்துமாத்துகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால், அவர்கள் மாவை சொல்வதெல்லாம் பெரிய வேதம் என்று எண்ணிக் கொண்டு பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளைத் தேடிப்போடுகிறார்கள்.

இதை இன்றைய பொதுவெளியில் உள்ள இளவல்கள் அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு பெரிய மூடர் கூடம் மாவையும் மாவையைப் போன்றோரும் உருவாக்கி, வளர்த்துப் பராமரித்து வருகிறது.

ஆனால், இவர்கள் ஒரு போதும் தங்கள் தலைவர் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறதா? என்று சிந்திப்பதில்லை. அல்லது தங்கள் தலைவர் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அந்தச் சொற்களுக்கு செயல்வடிவம் கொடுத்து போராட வேண்டும். அந்தப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பான செயற்பாட்டிற்காக எந்த மாதிரியான விலைகளையும் கொடுக்க வேண்டும். அப்படித் தியாகம் செய்து தங்கள் தலைவரின் மானத்தையும் அவர் சொன்ன சொற்களின் உண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்று கருதவில்லை.
அப்படி இவர்கள் - இந்த மூடர் கூடத்தினர் கருதவும் மாட்டார்கள். ஏனென்றால், இவர்களும் தங்கள் தலைவரைப்போல, மாவையைப் போல, பொய்யிலே பிழைப்பவர்கள்.

இந்தத் தலைவர் - மாவை சேனாதிராஜா - பொய்யைச் சொல்லிச் சொல்லியே இத்தனை ஆண்டுகாலமாக அரசியலில் தளைத்தோங்கி வளர்ந்திருக்கிறார் என்றால், பொய்களைச் சொல்லிச் சொல்லியே தலைவராகியிருக்கிறார் என்றால். தாங்களும் அப்படிப் பொய்களைச் சொல்லி வளர முடியும்தானே, தலைவராக முடியும்தானே! என்று நம்புவதில் தப்பென்ன?

தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்ற மாதிரி மாவையின் பின்னால், அவருடைய வழியில் ஒரு கூட்டம் உருவாகியுள்ளது.

இந்தக் கூட்டம் இப்பொழுது பிரதேச சபைகளிலும் மாகாணசபையிலும் நகர சபைகளிலும் உறுப்பினர்களாகியுள்ளது. மிஞ்சியோர் அப்படி பதவிகளைப் பிடிப்பதற்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டம் மாவையைப் போல, இனமானத்தைச் சொல்லியும் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டும் நாடகமாடித் தங்களின் சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்கிறது. இதுதான் அடுத்த தலைமுறையின் தலைவர்களாக வளரவும் போகிறது.

இந்த இடத்தில்தான் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

மாவையும் மாவையின் அணியினரும் சொன்னதில் என்ன நடந்திருக்கிறது? இவ்வளவு காலமாக அரசியலிலும் அரசியல் அதிகாரத்திலும் தலைமைப்பதவிகளிலும் இருந்து கொண்டு எதைச் சாதித்திருக்கிறார்கள்?

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறார்களா? தனிநாட்டைக் கண்டிருக்கிறார்களா? குறைந்த பட்சம் மாவை தலைமையேற்று நடத்தி, வெற்றி பெற்ற மறப்போர் என்ன? அறப்போர் என்ன?

ஆகக்குறைந்தது வலி வடக்கையாவது மாவை மீட்பதற்காகப் போராடினா? அதில் வெற்றியடைந்தாரா?

இதைப்பற்றி மாவை வாயே திறக்கமாட்டார் என்பது தெரியும். மாவையின் வாரிசுகளும் ஆதரவுக்கொழுந்துகளும் கூட வாய் திறக்கமாட்டார்களா? அல்லது தலைவன் வழியில் நாங்களும் வாய் திறக்கமாட்டோம் என்று சொந்த நலனிலும் சுய வாழ்விலும் நாட்டம் கொண்டிருக்கப்போகிறார்களா?

விழிப்படையுங்கள் அன்பான மக்களே.... எதிரிகள் வேறு எங்கும் இல்லை. உங்கள் நம்பிக்கைக்குள்ளேதான் உள்ளனர்.

No comments:

Post a Comment