மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப்
பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கெல்வின் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி இதே மாதம் 23-ம் தேதி கொல்லப்பட்டார்!
''2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துகொள்ள புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறிவிட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான்
பிறப்பால் அமெரிக்கர். ஆனால், லண்டனில்தான் அதிகமாக வாழ்ந்தார். நியூயார்க் யுனைடெட் பிரஸ் இன்டர்நேஷனலில் போலீஸ் நிருபராக 1978-ல் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து சண்டே டைம்ஸில் வேலை பார்க்க பிரிட்டன் வருகிறார். மத்தியக் கிழக்கு நாடுகளின் சிறப்பு நிருபர் பணி இவருக்குத் தரப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் உலகச் செய்திகள் அனைத்தையும் கவனிப்பதற்கான பெரும் பொறுப்பு இவருக்குக் கிடைக்கிறது. லிபியா அதிபர் கடாபிதான் இவர் முதன் முதலாகச் சந்தித்த நாட்டின் அதிபர். கடாபி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் சந்தித்தவர் மேரி கெல்வின். கொசாவா, ஜிம்பாப்வே, கிழக்கு தைமூர்... என எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கெல்வின் சென்றுவிடுவார். அதனாலேயே 'போர்ச் செய்தியாளர்' என்ற பட்டம் தாங்கினார். பொதுவாக, பெரும் பத்திரிகைகளில் 'வார் ரிப்போர்ட்டர்' என்று இருப்பார்கள். ராணுவம் எத்தகைய ஆயுதங்களை வைத்துள்ளது, என்ன மாதிரியான வெடிகுண்டுகள் வைத்திருக்கிறார்கள், ஒரு குண்டு எத்தனை கி.மீ. தாண்டிப் போய் வெடிக்கும், ராணுவத் தளபதிகளின் சாகசம் என்ன என்று எழுதி 'வார் ரிப்போர்ட்டர்' ஆனவர்கள்தான் அதிகம். ஆனால், மேரி கெல்வின் வித்தியாசமானவர். போர்ச் சூழலில் பலியாகும் பெண்கள், குழந்தைகள் படும் அவஸ்தைகள் மூலமாக ஆயுதங்களின் கோரத்தை எழுதுவதன் மூலமாக 'அமைதி நிருபராக' இருந்தவர். 1999ம் ஆண்டு கிழக்கு தைமூர் போர்ச்சூழலில் 1,500 பெண்கள் தங்களது பிஞ்சுக் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்டபோது ஐ.நா. அமைப்புடன் பேசி அவர்களை மீட்கத் துடித்தவர் கெல்வின். கடைசியில், அவர்கள் அத்தனை பேரையும் காப்பாற்றவும் செய்தார்.
2000-ம் ஆண்டில்தான் அவரது பார்வை இலங்கைப் பக்கமாகவும் திரும்பியது. நேரடியாக ஈழம் வந்தார். அப்போது, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்தான் அவரது இடது கண்ணின் பார்வை முழுமையாகப் பறிபோனது. அன்று முதல், கருப்புத் துணியைக் கண்ணில் கட்டிக் கொண்டு நடமாடினார். இந்தத் தாக்குதலை புலிகள் கண்டித்ததால், இவரை 'புலி ஆதரவாளர்' என்று இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் தமிழர் பிரச்னையை எழுதுவதில் தொடர்ந்து ஆர்வமாக இருந்தார். நான்காம் கட்ட ஈழப் போர் என்று அழைக்கப்படும் 'முள்ளிவாய்க்கால் படுகொலை' நேரத்தில் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை, ஐ.நா. அமைப்புக்கும் புலிகளுக்கும் நடந்தபோது இணைப்பாளராக இருந்தவர் மேரி கெல்வின்தான். வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களான நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மேரி கெல்வினின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்துத்தான் வெளியே வந்தார்கள். ஆனால், கோத்தபய ராஜபக்ஷே - சரத் ஃபொன்சேகா கூட்டணி, வாக்குறுதியை மீறி அந்த இருவரின் உயிரைக் குடித்தது.
''அது ஓர் அவசரமான அழைப்பு. ஆனால், சில மணிநேரத்தில் இறக்கப்போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை.....'' என்று தொடங்கி மேரி கெல்வின் எழுதிய கட்டுரை இன்றைக்கும் போர்க் குற்றத்தின் சாட்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதன்பிறகும், அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அவர் பொருட்படுத்தவில்லை. இலங்கையைப் போலவே சிரியாவும் அவரை மிரட்டியது. இந்த நாட்டுக்குள் வரக்கூடாது என்று சொன்னது. மீறித்தான் மேரி கெல்வின் சென்றார். தன்னுடன் பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ரெமி ஒச்லிக் என்பவரையும் அழைத்துச் சென்றார். ஹோம்ஸ் நகரத்தில் இருந்த 'அரசு எதிர்ப்பாளர்கள் ஊடக மையம்' என்ற இடத்தில் தங்கி இருந்தார். அந்த வீட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி காலையில் ஒரு ஷெல் வந்து விழுந்தது. கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. அந்த இடத்திலேயே மேரி கெல்வினும் ரெமி ஒச்லிக்கும் மரணம் அடைந்தார்கள்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிரிய அதிபர் ஆசாத்துக்கு எதிராக கெல்வின் கொடுத்த ஆவேசப் பேட்டி, சேனல் - 4ல் ஒளிபரப்பானது. ராஜபக்ஷேவுக்கு எதிரான கட்டுரை ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ள இவர், ஆசாத்துக்கு எதிரான வீடியோவையும் விட்டுச் சென்றுள்ளார். எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்துபோன கெல்வினின் வாழ்க்கை, நம் அனைவருக்குமான தூண்டுதல்!
- ப. திருமாவேலன்
No comments:
Post a Comment