February 12, 2015

செயற்திறனற்ற அமைச்சர்களால் பிரயோசனமில்லை! ஜங்கரநேசன் சத்தியலிங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி!

குடிநீரில் கலந்துள்ள கழிவு ஓயில் தொடர்பிலான பிரச்சினை நாள் தோறும் பூதாகர நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தூயநீருக்கான விசேட செயலணி  வினைத்திறனற்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களது நலன்களிற்காக போராடும் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் அவ்வமைப்பு இன்று வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.சந்திப்பில் இது பற்றி கருத்து வெளியிட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போதைய பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கான தற்காலிக குடிநீர் விநியோக ஏற்பாடுகள் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளினை முன்வைத்திருந்ததாகவும் ஆனால் அவற்றினை முன்னெடுப்பதில் தூயநீருக்கான விசேட செயலணி போதிய பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கவில்லையெனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தூயநீருக்கான விசேட செயலணியின் இணைத்தலைவர்களாக வடமாகாண அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரேயுள்ளனர்.வடமாகாணசபை தன்னால் இயன்றவற்றினை செய்து வழங்க கூட முயற்சிக்கவில்லை.சீரற்ற குடிநீர் விநியோகம் தொடர்கின்றது.பாதிக்கப்பட்ட பகுதிகளினில் 550 முதல் 600 வரையிலான குடிநீர் தாங்கிகளை வைத்து மக்களிற்கு குடிநீர் வழங்க கோரினோம்.அதனை செய்யக்கூட மாகாணசபையால் முடியாதுள்ளது.

இத்தகைய நிலையினில் தொடர்ந்தும் தூயநீருக்கான விசேட செயலணியினில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையினில் நாமிருப்பது பொருத்தமற்றதொன்றாகும்.

எமது 15 அம்ச கோரிக்கைகளினை நிறைவேற்ற எதிர்வரும் 20ம் திகதி வரை காலக்கெடு வழங்கியுள்ளோம்.அக்காலப்பகுதியினுள் எதனையும் செய்யாவிட்டால் நாம் தூயநீருக்கான விசேட செயலணியிலிருந்து வெளியேறிவிடுவோம்.ஒப்புக்கு அமைக்கப்பட்ட அமைப்பொன்றிலிருந்து எமது மக்களிற்கு துரோகமிழைக்க நாம் விரும்பவில்லை.

ஆனாலும் நாம் மக்களை அணிதிரட்டி அடுத்த கட்டப்போராட்டங்களில் குதிக்க திட்டமிட்டுள்ளோம்.அவ்வகையில் பாதிக்கப்பட்ட கிராம அமைப்புகளை ஒன்று சேர்த்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டமொன்றை நடத்தவுள்ளோம்.அதன் மூலம் மக்களது கருத்துக்களை பெற்று அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள் இப்போராட்டத்தை மக்கள் மயப்படுத்த ஊடகங்கள் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர்.






No comments:

Post a Comment