February 22, 2015

இனப்படுகொலைக்கான நீதியும் முட்டுக்கட்டை போடும் மோடியும்!

சகோதரி தமிழிசை ஏற்கெனவே டாக்டர். அவரது தமிழுக்காக கூடுதலாக இன்னொரு டாக்டர் பட்டத்தையும் கொடுக்கலாம் போலிருக்கிறது.
வார்த்தைகள் வந்து விழுகிற வேகத்தில் நடப்பு வரலாற்றைக் கூட மோடிமறைத்துவிட்டு...... மன்னிக்கவும்...... மூடி மறைத்துவிட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் விரைகிறது தமிழிசையின் தமிழ்.

இலங்கையில் கைது செய்யப்பட்டு தூக்குக்கயிற்றுக்கு மிக அருகில் இருந்த தமிழக மீனவர்களை 'தாயுள்ளத்துடன்' மீட்டெடுத்தாராம் மோடி. சுருக்கமான தமிழில் உருக்கமாக நினைவுபடுத்துகிறார் தமிழிசை. அவரது அறிக்கை வெளியான தினத்திலேயே, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீமான் நரேந்திரமோடி தான் அஸ்திவாரம் என்பது அம்பலமாகியிருக்கிறது. நம்மை மட்டும் தூக்குக்கயிறுக்கு மிக அருகில் சென்ற பிறகுதான் காப்பாற்றுவார்களாம்...... ராஜபக்சே என்றால் மட்டும், எஃப்.ஐ.ஆர். கூட போட விடமாட்டார்களாம்! நல்லாயிருக்குல்ல நியாயம்!

எங்கள் உறவுகளைக் காப்பாற்றுங்கள் - என்று ராமேஸ்வரம் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழகமும் நடுத்தெருவுக்கு வந்து நின்றபிறகுதான், இலங்கையுடன் பேசியது மோடி அரசு. அதற்குள், தமிழிசை சொல்வதைப் போன்றே, தூக்குக்கயிற்றுக்கு மிக அருகில் அந்த மீனவச் சகோதரர்கள் கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். இறப்பச்சத்தை முற்றுமுதலாக உணரும் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அந்த மன உளைச்சலால் நடைப்பிணமான பிறகுதான் அவர்கள் 'தாயுள்ளத்துடன்' மீட்கப்பட்டனர். இந்த வரலாற்றை இயல் - இசை - நாடகம் என்று எந்தத் தமிழாலும் மூடிமறைத்துவிட முடியாது.

அப்போது நடத்தப்பட்டது இந்திய - இலங்கை கூட்டுத் தயாரிப்பில் அரங்கேற்றப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த திகில் நாடகம் என்பதும், சு.சுவாமி தான் அந்த நாடகத்தின் 'பிராம்ப்டர்' என்பதும் அப்போதே அம்பலமாகிவிட்டது. அந்த நேரத்தில் சின்மயா நகரில் செய்தித்தாள் கடைகளையெல்லாம் மூடிவிட்டார்களோ என்னவோ.... சகோதரி தமிழிசைக்கு அந்த நயவஞ்சக வரலாறு தெரியாமலேயே போய்விட்டிருக்கிறது.

நடத்தப்பட்டது நாடகம் என்பது இந்தியாவுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஒட்டுமொத்த கதை வசனமும் சு.சு.வுக்கு முன்கூட்டியே தெரியும்.

மீன்பிடிக்கப் போன மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாகப் பொய்வழக்கு போடுகிறது, இலங்கை அரசு....

அந்த பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என்று ஈவிரக்கமில்லாமல் அறிவிக்கிறது....

தூக்குமேடையை அவர்கள் நெருங்குகிறவரை மோடியின் தர்பார் மௌனம் சாதிக்கிறது....

கிளைமாக்ஸ் காட்சியில், மோடியின் வேண்டுகோளை ஏற்று மனிதப் புனிதர் மகிந்த ராஜபக்சேவின் அரசு அந்த மீனவர்களை விடுவிக்கிறது....

இந்த நாடகத்துக்கு இணையான ஒரு நாடகத்தை உலக அரங்கில் வேறு எவராவது நடத்திவிட முடியுமா?

ராஜபக்சேவின் ஏஜென்ட் சு.சு., இந்த நாடகத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்தார். 1. தமிழருக்கு ஒன்றென்றால் நரேந்திர மோடிஜிக்கு பாதாதிகேசமும் பதறிவிடும் என்று காட்டுவது.. 2. மகிந்த ராஜபக்சே என்பது மனித மிருகம் இல்லை, அது மனித நேய மாமணி - என்று நிறுவுவது!

(சு.சு. என்றோ சுவாமி என்றோ அவரை நான் அழைப்பது, அரசியல் அனாதைகளுக்கு அடையாளம் கொடுத்துவிடக் கூடாது என்கிற அடிப்படைக் கொள்கையால்தான்! சு.சு.வின் காமெடி கூத்துகளுக்குப் பயந்து அல்ல!)

தூக்குக்கயிற்றின் அருகில் இருந்த மீனவர்களைத் தாயுள்ளத்துடன் தான் மோடி மீட்டெடுத்தார் - என்றே வைத்துக் கொண்டாலும், அதுதொடர்பான கேள்வியொன்று எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மோடி விடுத்த வேண்டுகோள் மட்டும்தான் மீனவர்கள் விடுதலைக்குக் காரணமா? அல்லது, போதைப்பொருள் கடத்தினார்கள் என்கிற பொய்க்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டார்களா?

தாயுள்ளத்துடன் - என்று தமிழிசை குறிப்பிட்டிருப்பதாலேயே இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

நேர்மையோடும் துணிவோடும் கடல்தொழிலில் ஈடுபடுகிற எங்கள் மீனவ உறவுகள் மீது, 'போதைப் பொருள் கடத்தினார்கள்' என்கிற கேவலமான குற்றச்சாட்டைச் சுமத்தி பொய்வழக்கு போட்டதற்காக இலங்கையை மோடியின் இந்தியா ஒரே ஒரு வார்த்தையாவது கண்டித்ததா இல்லையா? எங்கள் குடிமக்களை எப்படி நீ இழிவுபடுத்தலாம் என்று கோபத்துடன் கேட்டதா இல்லையா?

முடிந்து போய்விட்ட விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள் - என்று முகஞ்சுளிக்கக் கூடாது தமிழிசை. 'தாயுள்ளம்' என்றெல்லாம் 'பில்ட் அப்' கொடுப்பதால்தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது டாக்டரிடம்!

இலக்கியங்களை ஆழ்ந்து படித்த ஒரு மெய்யான தமிழறிஞனின் மகள், டாக்டர் தமிழிசை. கோவலன் கொல்லப்பட்டு விட்டான் - என்பதை அறிந்த கண்ணகி அடைக்கலம் புகுந்திருந்த வீட்டின் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கவில்லை. கொல்லப்பட்ட கணவன் நிரபராதி என்பதை நிரூபித்தாக வேண்டும் என்கிற வெறியோடு, கட்டுக்காவலை எல்லாம் உடைத்துக்கொண்டு, பாண்டியனின் அரசவைக்குள் நுழைந்தாள் கண்ணகி. 'தேரா மன்னா' என்று கோபம் கொப்பளிக்க அழைத்தாள். அந்த வார்த்தையிலேயே பாதி செத்துவிட்டான் பாண்டியன். ஒற்றைச் சிலம்பை உடைத்து எறிந்து, கணவன் குற்றமற்றவன் என்பதையும், பாண்டியன் தான் குற்றவாளி என்பதையும் உலகுக்கு உணர்த்தினாள் எங்கள் மூதாதை கண்ணகி. இதெல்லாம் தெரியாதா ஒரு தமிழறிஞரின் மகளுக்கு?

கொல்லப்பட்ட கணவன் குற்றவாளியில்லை - என்பதை நிரூபித்த கண்ணகி எம் இனத்தின் அடையாளம் என்றால், தூக்கு மேடையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட எங்கள் மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தவறிய நரேந்திர மோடியின் தர்பார், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவமானம்.... தமிழிசையால் இதை மறுக்க முடியுமா? எம் மீதான களங்கத்தைத் துடைத்தெறியாமல், உயிர்ப்பிச்சை போடுகிறார்களாமா? மகிந்த ராஜபக்சே என்கிற மிருகத்தின் மீது எஃப்.ஐ.ஆர். கூட போட்டுவிடக் கூடாது - என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு, இதற்கான தகுதி இருக்கிறதா?

தூக்கில் கூட அல்ல, குற்றவாளிக் கூண்டில் கூட மகிந்த ராஜபக்சே ஏற்றப்பட்டுவிடக் கூடாது - என்று கருதும் மோடி அரசின் உள்ளத்தை 'தாயுள்ளம்' என்றழைத்தால், ஒரு பொய்வழக்கில் கூண்டில் நிறுத்தப்பட்ட எங்கள் மீனவ உறவுகள் 'தூக்குக் கயிற்றுக்கு மிக அருகில்' கொண்டுசெல்லப்பட்ட பிறகே விழித்துக்கொண்ட மோடி சர்க்காரின் உள்ளம் 'மாற்றாந் தாயுள்ளம்' அல்லாமல் வேறென்ன?

ஒரு மனித மிருகம் கூண்டில் ஏற்றப்படுவதைத் தவிர்க்க, உடுக்கை இழந்தவன் கைபோல அசுர கதியில் செயல்படுவார்களாம்...... எங்கள் மீனவர்கள் உயிரென்றால் மட்டும் அசமந்தம் போல கிடப்பார்களாம்.... கமலாலயத்து நியாயம் இதுதானா சகோதரி? வேண்டுமென்றால், 'மாற்றாந் தாயுள்ளத்துடனாவது எங்கள் மீனவர்களை மீட்டெடுத்தார் மோடிஜி' என்று அறிக்கை விட்டுக் கொள்ளுங்கள். அதில் ஓரளவாவது உண்மை இருக்கும். அதை விட்டுவிட்டு, 'தாயுள்ளம்' என்று கூசாமல் பேச எப்படி முடிகிறது உங்களால்?

அந்த 'தூக்குக் கயிறு' நாடகத்தை நடத்திய சு.சு. ஒருவர் தான் இந்தியத் துணைக்கண்டத்திலேயே ராஜபக்சேவின் நேரடி ஏஜென்ட். "மூளை முழுக்க சிந்தனை, அந்த சிந்தனையெல்லாம் வஞ்சனை" என்கிற வசனத்துக்கு அவர்தான் வார்த்தைக்கு வார்த்தை அத்தாரிட்டி! அலரி மாளிகையின் அடிமையாக இருந்துகொண்டே கமலாலயத்தின் எஜமானராகத் திகழ்வது எப்படி - என்று ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு சு.சு. ஒரு அதிமேதாவி என்கிற மேலதிகத் தகவலையும் சகோதரி தமிழிசைக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகிறது.

(ராஜபக்சேவின் மறைமுக ஏஜென்ட் ஒருவரும் இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறார். 'வைகோ, வீட்டுக்குத் திரும்பமுடியாது' என்று உதார் விட்டாரே, அந்த வெத்துவேட்டு மகாராஜா. வேலுநாச்சியார் ஆண்ட சிவகங்கை மண்ணில் இப்படிப்பட்டவர்கள் எப்படி நடமாடுகிறார்கள் என்பது இன்றுவரை எவருக்கும் புரியாத சிதம்பர ரகசியம்!)

கமலாலயத்தில் அடிக்கிற காற்றே ஏஜென்டுகளால் களங்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அதுதான், விவரம் தெரியாமல் பேசவைக்கிறது தமிழிசையை!

இனப்படுகொலை செய்த ராஜபக்சே அரசு மீதான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரித்த ஐ.நா., அந்த விசாரணை அறிக்கையை மார்ச்சில் வெளியிட இருந்தது. அந்த விசாரணையையே நடக்க விடாமல் தடுக்க அன்னை சோனியாவின் தயவுடன் ராஜபக்சே அரசு முயன்றதெல்லாம் பழைய கதை. தாயுள்ளம் கொண்ட மோடிஜியின் ஆசியுடன் அந்த விசாரணை அறிக்கை வெளியாவதையே இலங்கை நிறுத்தியிருப்பதுதான் லேட்டஸ்ட்!

கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழருக்கு நீதி கிடைக்க மார்ச் அறிக்கை அடிப்படையாக அமையும் என்று ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆவலுடன் காத்திருந்த நிலையில்தான், மோடி அரசின் ஆசீர்வாதத்துடன், அறிக்கை வெளியாவது தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நிதி தொடர்பாக பாரதீய ஜனதா தெரிவித்த அயோக்கியத்தனமான குற்றச்சாட்டைப் போன்றதல்ல இது. நடந்தது என்ன என்பதை விலாவாரியாக விளக்கியிருக்கிறது இலங்கையின் முன்னணி ஆங்கில நாளேடான டெய்லி மிர்ரர். மகிந்த ராஜபக்சே அரசைப் போல் இல்லாமல், மைத்திரி அரசு மிகுந்த ராஜதந்திரத்துடன் நடந்துகொள்வதாக தனது தலையங்கத்திலேயே அது பாராட்டியிருக்கிறது.

'ஆட்சிக்கு வந்த ஐந்தே வாரத்தில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.வுடனான உறவுகளை மைத்திரி அரசு மேம்படுத்தியிருக்கிறது. மைத்திரியின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம், இந்தியப் பயணம். ஐ.நாவின் விசாரணை அறிக்கையைத் தள்ளிப்போட உதவ வேண்டும் - என்ற அவரது வேண்டுகோளுக்கு இந்தியத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்த பிறகே, அமெரிக்காவுக்குச் சென்றார் சமரவீர. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியைச் சந்தித்தார். கெர்ரியின் சம்மதத்தையும் பெற்றபிறகு, பான் கீ மூனைச் சந்தித்தார். அறிக்கை வெளியீட்டை ஒத்திப்போட உத்தரவாதம் கிடைத்தது. மைத்திரி பதவிக்கு வந்தால், மகிந்த ராஜபக்சேவை சர்வதேச மின்சார நாற்காலியில் உட்காரவைத்துவிடுவார் என்கிற அச்சம் பொய்த்துவிட்டது.....' - இப்படித் தொடர்கிறது டெய்லி மிர்ரர் தலையங்கம்.

அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜான் கெர்ரி, வியட்நாமில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஒரு போர்க் குற்றவாளி என்பதும், அமெரிக்கா வாரம் ஒரு வேஷம் போடும் என்பதும் நாம் அறியாததல்ல! அன்னை சோனியாவைப் போலவே மோடியாரும் இனப்படுகொலைக் குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர். போடவே முட்டுக்கட்டையாக இருப்பது ஏன் என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

ஆட்சி மாற்றத்தைக் காரணமாகக் காட்டி போர்க்குற்ற விசாரணையைத் தள்ளிப் போட வைப்பதென்று மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் ஒரு 'டீல்' இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதே பாணியில், சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் ஏதாவது டீல் இருக்கிறதா? அப்படியொரு டீலுக்குப் பின்னால், ஜனவரி 8ம் தேதிக்குப் பின் காணாமல் போய்விட்ட சு.சு. இருக்கிறாரா? இந்த சந்தேகங்களையெல்லாம் எழுப்புகிறது அந்தத் தலையங்கம்.

கொல்லப்பட்ட எம் ஒன்றரை லட்சம் உறவுகளை இந்தியா காப்பாற்றவில்லை. கொலையாளிகளைக் காப்பாற்ற மட்டும், காங்கிரஸ் அரசு போலவே பாரதீய ஜனதா அரசும் 'தாயுள்ளத்துடன்' உதவுகிறது. இந்தக் கொடுமையான உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்பது இந்திராகாந்திக்குத் தெரிந்ததும், அதை வெளிப்படையாகக் கண்டித்தார். இந்திராவின் மருமகளுக்கு அது தெரிந்திருந்தும், அதை மூடி மறைக்க முயன்றார். நரேந்திர மோடியோ, இனப்படுகொலை என்பது தெரிந்தும் தெரியாதவர் போல நடிக்கிறார்.

இந்தியாவின் மற்ற மாநில மக்கள் எப்படியோ, தமிழகத்தைப் பொருத்தவரை இந்த மண்ணின் மைந்தனான எம் சிவாஜியின் அபார நடிப்பைப் பார்த்துப் பார்த்து, நடிப்பின் நுணுக்கங்களைத் தெரிந்துவைத்திருக்கிறோம். மோடியார் எப்படியெல்லாம் நடிக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதற்கு சிவாஜியன்றி வேறெவர் காரணம்?

அண்மையில் மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'சிவாஜியால்தான் அப்பரைத் தெரிந்துகொண்டேன், கப்பலோட்டிய தமிழனைத் தெரிந்துகொண்டேன், கட்டபொம்மனைத் தெரிந்துகொண்டேன்' என்று அடுக்கிக்கொண்டே போனார். 'நான் மோடியைப் புரிந்து கொள்வது சிவாஜியால்தான்' என்பதை சுதாங்கனைச் சந்திக்கும்போது சொல்லியாக வேண்டும். என்னா நடிப்புடா சாமி!

இந்த நடிப்புத்திறனைப் புரிந்துகொள்ளாமலா, 'தாயுள்ளத்துடன் மீனவர்களை மீட்டெடுத்தார்' என்று கஜோலிங் செய்யப் பார்க்கிறார் தமிழிசை!

நரேந்திர மோடியின் நடிப்புத் திறனையும், தமிழிசையின் தமிழ்த் திறனையும் பார்த்து ஏமாந்துவிட்டால், கொல்லப்பட்ட நம் ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது. இப்போதுதான் நாம் உரக்கப் பேசியாகவேண்டும். அதற்கான நாள்தான் பிப்ரவரி இருபத்து நான்கு. 24ம் தேதி, இனப்படுகொலைக்கு நீதிகேட்டும், ஐ.நா. விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஆசிரியர் சமூகம் போராட இருக்கிறது. நமது குரலும் அவர்கள் குரலுடன் கலந்து ஓங்கி ஒலித்தால்தான் உலகின் கவனம் நம் பக்கம் திரும்பும்.

புகழேந்தி தங்கராஜ்

No comments:

Post a Comment