சிறீலங்காவின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து தமிழ்க் கூட்டமைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை யாழ்.நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் அளுத்கமவில் முஸ்லிம் இனத்தினருக்கு எதிராக நடாத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைகளில் மூன்று பேர் கொல்லப்பட்டும் அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் ஏராளம் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் மானுடத்துக்கு எதிரான மோசமான கொடுரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் சட்டம் நீதி என்பன கானல் நீராகியுள்ளன. மக்கள் அச்சத்துடனேயே வாழும் சூழலுக்குள் முழுநாடும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2014.06.20) யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்த உள்ளதாக பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மானுட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க கட்சிகள் ஒன்று திரளவேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment