May 25, 2014

தமிழ் இளைஞர்களின் கைகளில் மீண்டும் ஆயுதம் ஏறுவதை எந்தவொரு நாட்டினராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்


தமிழ் மக்கள் தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதாயின் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழர் தாயகத்தில்
எவருக்கும் அஞ்சாமல் வாழ்வதற்கான நிலைமையை உருவாக்குவதற்கு மீண்டும் களமாடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது. யுத்தம் ஒன்றைத் தமிழர்கள் விரைவில் ஆரம்பிக்கவேண்டும் என்ற உண்மை முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (18.05.2014) தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
சிறீலங்காப் படையினர் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நேற்று முன்தினம் தமிழர் தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டது. இதனைத் தடுப்பதற்கு படையினரின் முழுப் பலமும் பயன்படுத்தப்பட்டதில் இருந்து தமிழரின் விடுதலை வேண்டிய தாகம் மேலும் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றது. தெற்கே யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை, வடக்கே உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாதவாறு படைக்குவிப்பும் அச்ச சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டமையானது மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்கள் ஆலயங்களுக்கு செல்ல முடியவில்லை. ஆலயங்களைச் சுற்றிப் படைக்குவிப்பு. திருவிழாக்கள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த ஆலய பரிபாலன சபைகளிடம் சென்ற படையினர் இந்த திருவிழாவை யார் செய்யச் சொன்னது? யாருக்காகச் செய்கின்றீர்கள்? யாரைக் கேட்டுச் செய்கின்றீர்கள்? இன்று முழுநாளும் மணி ஒலி எழுப்பக்கூடாது, விசேட பூசைகள் செய்யக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். முக்கியமாக கீரிமலை நகுலேஸ்வரம், நல்லூர் கந்தசுவாமி கோயில், சட்டநாதர் கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போன்ற குடாநாட்டிலுள்ள முக்கியமான ஆலயங்கள் அனைத்தும் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தன. சாதாரண மக்கள் பூசைப் பொருட்களைக் கூடப் படையினரிடம் காட்டிவிட்டு ஏன் பூசை செய்யச் செல்கின்றோம் என்று கூறியே உட்புக முடிந்தது. அதிலும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு மக்களோ அரசியல்வாதிகளோ உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனைவிட, யாழ்ப்பாணத்திலிருந்த கோம்பையன் மணல் மயானம், செம்மணி மயானம் உட்பட பல்வேறு மயானங்களிலும் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இறந்தவர்களைக்கூட தகனம் செய்வதில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை வில்லூன்றி புனித தீர்த்தத்தில் பிதிர்க்கடன் செய்வதற்குச் சென்ற மக்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பாடசாலைகள், பொது இடங்களில் எந்தவொரு கூட்டங்களோ, நிகழ்வுகளோ வைப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. வீதிகளால் மக்கள் பயணிக்க முடியவில்லை. சந்துபொந்துகள் எங்கும் படையினர். யுத்த காலத்தைப் போன்று பவள் கவச வாகனங்களின் பவனி. முகத்தைக் கட்டியவாறு படையினர் மோட்டார் சைக்கிள்களில் தேடுதல். படையினரின் துவிச்சக்கரவண்டி அணியின் தீவிர ரோந்து. இவ்வாறாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் நேற்று முன்தினம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தனர். படையினரினதும் சிறீலங்கா அரசினதும் இந்த அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இதற்குப் பின்னரும்? ஏன் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவுபெற்றிருக்கின்றன. இந்துத் தமிழ் மக்களின் பண்பாட்டு பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இறந்த ஒருவருக்கு ஒரு மாதம் முடிந்தவுடன் அந்தியேட்டிக் கிரியை செய்வது, ஓராண்டு முடிந்தவுடன் திவசம் செய்வது, பின்னர் தொடர்ந்து வருகின்ற ஒவ்வோர் ஆண்டும் அவர்களின் நினைவு நிகழ்வு செய்வது. இது மதம் சார்ந்த நடைமுறை. அந்த நடைமுறையைச் செய்வது அவர்களின் கடமையும் உரிமையுமாகும்.
ஆனால், இங்கு தனித்தனி இறப்பு என்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த இனக்குழுமமே கூண்டோடு அழிக்கப்பட்டதைப் போன்று ஓர் இலட்சம் வரையான மக்கள் அழிக்கப்பட்டனர். மே-18 ஆம் திகதி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். எவர் எப்போது இறந்தார்கள் என்பதை நினைவு வைத்திருக்க முடியவில்லை. ஏனெனில் காயமடைந்த, படுகாயமடைந்த உறவுகளைத் தூக்கிவர முடியாத நிலை. இறுதி யுத்த கணங்களில் எவர் எவரைப் பார்ப்பது என்று தெரியாத நிலை. அந்தளவிற்கு சிறீலங்கா படையினர் இடைவிடாத நெருப்பு மழையைப் பொழிந்துகொண்டிருந்தார்கள். அந்தக் கணத்தில் அங்கு நின்றிருந்தால்தான் எவரும் அந்த வலியை உணர்ந்திருக்க முடியும். வெளியே இருந்துகொண்டு வியாக்கியானம் செய்ய முடியாது. ஒரு நூலை முற்றாக வாசித்த பின்னர்தான் அந்த நூலுக்கு விமர்சனம் செய்ய முடியுமே தவிர நூலின் பெயரை அல்லது தலைப்பை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்ய முடியாது. ஆனால், யுத்த காலத்தில் வெளியே இருந்த பலர் இறுதி யுத்தம் என்பதற்கு தமக்கு ஏற்றாற்போல கருத்துச் சொல்கின்றனர். ஆனால், அங்கு நின்றவர்களுக்குத்தான் அந்த வேதனையும் வலியும் புரியும்.
ஆக, இறுதி யுத்தத்தில் இறந்த உறவுகளுக்கு கூட்டாக அஞ்சலி செலுத்துவதில் எந்த தப்பும் இல்லை. அதனை வீடுகளில் குடும்பத்தினர் மட்டும்தான் அனுஷ்டிக்கவேண்டுமென்றில்லை. இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவம் குடும்பம் குடும்பமாகவா கொன்றொழித்தது. குடும்பங்கள் தனியே அஞ்சலி செலுத்துவதற்கு கூட்டாக அழிக்கப்பட்ட இனக்குழுமம் ஒன்றுக்காக எஞ்சியிருக்கின்ற அந்த மக்கள் தொகையினர் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் பொது இடமொன்றில் தீபமேற்றி வழிபடுவதற்கு உரிமை இருக்கின்றது. யப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆண்டுதோறும் கூட்டாக அஞ்சலி செலுத்தப்படுகின்றது. அமெரிக்காவின் வர்த்தக மையம் மீது அல்ஹெய்டா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் கூட்டாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதேபோன்று ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுப் படைகளால் தங்கள் சொந்த நாட்டுப் படைகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. இது உலக நியதி.
அதேபோன்றுதான் ஈழத்திலுள்ள தமிழ் மக்களும் நியதிக்கு மாறாகச் செயற்படவில்லை. கூட்டாகக் கொல்லப்பட்ட மக்களுக்கு கூட்டாக அஞ்சலி செலுத்த முற்படுகின்றனர். இதில் தவறேதும் இல்லாத போதிலும் சிறீலங்கா அரசாங்கமும் படைகளும் தமிழ் மக்களை அடக்கி அந்த நிகழ்வைக் கொண்டாட விடாமல் தடுப்பதற்கான காரணம் என்ன? தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம்தரப் பிரசைகளாக உள்ளனர். தாங்கள் எது சொன்னாலும் அவர்கள் கேட்க வேண்டும் என்ற சிங்கள தேசத்தின் மமதை. தமிழ் மக்கள் தங்கள் அடிமை என்று சிங்களம் நினைப்பதன் அகங்காரம். தமிழ் மக்களை எதுவும் செய்யலாம், கேட்க எவரும் இல்லையென்ற ஆணவம். தமிழினத்தை நாங்கள் வெற்றிகொண்டுவிட்டோம். இனிமேல் நாங்கள் எது சொன்னாலும் அவர்கள் செய்யத்தான் வேண்டும் என்ற மகிந்த குடும்பத்தினதும் படையினதும் அடக்குமுறை உணர்வு. இத்தனைக்கும் தாக்குப்பிடித்துத்தான் தமிழ் மக்கள் இறந்த தமது உறவுகளுக்கு சுடரேற்ற வேண்டியுள்ளது.
ஆனால், அடக்குமுறைக்கு உள்ளாகின்ற எந்தவொரு இனமும் கிளர்ந்து எழும் என்ற வரலாற்று உண்மையை சிங்களம் தொடர்ந்தும் உணர மறுக்கின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளால் தமிழீழ தேசியத் தலைவரும் சில இளைஞர்களும் பொறுமை இழந்த காரணத்தாலேயே முப்பது வருடங்களாக நாட்டில் யுத்தம் இடம்பெற்றது என்பதை சிங்கள தேசம் மறந்துவிட்டது. தனியே யுத்தம் செய்து புலிகளை வெல்ல முடியாத நிலையில் சர்வதேச நாடுகளின் படை பலத்துடன் ஆட்பல உதவிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்ற கோழைத்தனமாக யுத்தத்தை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பின்னர்தான் சிங்களம் வெற்றிப் பிரகடனம் செய்தது.
ஆனால், இங்கு நடைபெற்றது யுத்தம் அல்ல என்றும் புலிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்பதற்கான யுத்தம் மனிதாபிமான நடவடிக்கை என்றும் சிங்கள தேசம் அறிக்கை விட்டது. மகிந்தவும் அவரது சகோதரர்களும் கூறுவது போன்று இது மக்களை மீட்பதற்கான யுத்தம் என்றால் புலிகளின் கட்டமைப்புக்கள் உடைத்தெறியப்பட்டு வன்னியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உடனேயே இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு சிங்களம் தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கும். அந்த மக்களுக்கு உரிய இழப்பீடுகளைக் கொடுத்திருக்கும். ஆனால், இதுவரை பொதுவாக, பகிரங்கமாக எந்தவொரு அஞ்சலியும் தெரிவிக்கப்படவில்லை. அனுதாபமும் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகள் தமிழர் வேறு, சிங்களவர் வேறு என்ற உணர்வைத் தோற்றுவித்திருக்கின்றது. இது ஆரோக்கியமானதல்ல.
வடக்கே தமிழ் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது தெற்கே மாபெரும் வெற்றிவிழா கொண்டாட்டம். இந்தச் செயற்பாடு பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப் போன்றது. தமிழன் தானே, அவன் தன் தாளத்திற்கு ஆடவேண்டும் என்று சிங்களவன் கருதுகின்றமையை தமிழ் மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் உணர்ந்துகொண்டனர்.
எனவே, இனிமேலும் தமிழ் மக்கள் மண்டியிடத் தயாராக இல்லை என்ற நிலையன்று தோற்றம் பெற்றுவிட்டது. இந்த எண்ணம் இளைய தலைமுறையிடம் பரவுகின்றபோது தமிழ் இளைஞர்களின் கைகளில் மீண்டும் ஆயுதம் ஏறுவதை எந்தவொரு நாட்டினராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment