August 2, 2016

கைக்குழந்தைகளுடன் தொடரும் உண்ணாவிரதம் - கண்டுகொள்ளாத வடமாகாணம்!

வடமாகாண பாடசாலைகளில் நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் தமது நிரந்தர நியமனத்தைகோரி இன்று இரண்டாவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுத்துள்ளனர்.


இதில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதோடு, வாய் திறந்து பேசுவதற்குக் கூட இயலாமல் உள்ளனர்.

நேற்றிலிருந்து இவர்கள் முற்றுமுழுதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் ஆசிரியர்கள் தமது குழந்தைகளுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் குறித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இதில், “நீங்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சரோ, வடமாகாண சபை உறுப்பினர்களோ, மற்றும் வடமாகாண கல்வியமைச்சரோ யாரும் வந்து பார்வையிடவும் இல்லை, உங்களுக்கான ஒரு தீர்வையும் தரவில்லை, ஆனால் நாம் உங்களுடைய நிலை பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” எனக் கூறினார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை ஆளுநர் கோரியுள்ளதாகவும், இன்று மாலை வாமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேவை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய இளங்கோவன், இந்த வாய்ப்பை தவற விட்டால் உங்களுடைய பிரச்சினையை நாமும் கைவிட்டு விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆசிரியர்கள்,

“எங்களுடைய வாக்குகளைப் பெற்று அமைச்சர்களானவர்களும், வடமாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் வடமாகாண முதலமைச்சரும் வருகைத் தந்து எம்மை பார்வையிடாதது பெரும் கவலையளிக்கின்றது, நாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ள எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தராதது வெந்த புன்னில் வேலைப் பாய்ச்சுவதைப் போன்றது” எனவும் தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.




No comments:

Post a Comment