August 1, 2016

மஹிந்த உள்ளிட்ட எட்டு பேருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் எட்டுப் பேருக்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.


கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், கலவரங்களும் ஏற்படலாம் என்று பேலியாகொடை பொலிசார் கொழும்பு நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை அடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படாத வகையிலும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தும் வகையிலான தடை உத்தரவொன்றை கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்தை, உதய கம்மன்பில, கனக ஹேரத், பிரசன்ன ரணவீர, மற்றும் அமில குமாரசிங்க ஆகியோருக்கு எதிராகவே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கொழும்பு மாநகரத்தினுள் பொது இடமொன்றில் திடீர் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தும் கூட்டு எதிர்க்கட்சியினரின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்னிட்டு அவ்வாறான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுமிடத்து கூட்டு எதிர்க்கட்சியினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் சூழல் உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment