August 3, 2016

மயிலிட்டி துறைமுகம் இராணுவ பயன்பாட்டுக்கு!

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை தமது தேவைக்கும் இராணுவப் பயன்பாட்டிற்கும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே, மத்திய அரசு எதுவித கலந்துரையாடல்களோ அல்லது சமூகம்சார் விழிப்புணர்வுகளோ அற்ற நிலையில் கீரிமலை பிரதேசத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்ற முயன்று வருகின்றதென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


கீரிமலை சிவபூமி மடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆடி அமாவாசை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, வடக்கு முதல்வர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம், அதன் புனிதம் கெடாது பாதுகாக்கப்படவேண்டிய ஒரு சைவசமய அடையாளச் சின்னமாகும். இத்தலத்தையும் இதனை சூழவுள்ள பகுதிகளையும் நாம் போற்றிப் பாதுகாப்பதற்கும் அதன் புனிதத்தை பேணுவதற்கும் தவறிய காரணத்தினாலேயே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இப்பகுதிக்கு பொதுமக்கள் வரமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த புண்ணிய பூமியை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் தார்மீக பொறுப்பாகும்.

கீரிமலை புண்ணிய தீர்த்தத்தின் மகிமை பற்றியும் இப் பிரதேசத்தின் புனிதம் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில், எமது மத்திய அரசின் அரசியல் தலைமைகள் இங்கு ஒரு மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்கு சினத்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கையின் மிகப் பிரபல்யமானதும் இயற்கை துறைமுகமுமாகிய மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை தமது தேவைக்கும் இராணுவப் பயன்பாட்டிற்கும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் கபட நோக்கில், அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேறிடத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவர்களுக்கான வாழ்வாதார செயற்பாடான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு பெயரளவில் ஒரு துறைமுகம் அமைத்துக் கொடுப்பதற்குமே, மத்திய அரசு எதுவித கலந்துரையாடல்களோ அல்லது சமூகம்சார் விழிப்புணர்வுகளோ அற்ற நிலையில் கீரிமலை பிரதேசத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்ற முயன்றுள்ளது. இச்செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் வெறுப்பூட்டக்கூடியது.

இந்நிலையில் எம்மவர்களில் சிலர் தொலைக்காட்சிகளினூடாக, ‘ஒப்புக்கு மாரடிக்க முயல்வது வேதனைக்குரியது. புனிதம் கினிதம் என பேசிக் கொண்டிருக்காதீர்கள். இப்பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மீன்பிடித் துறைமுகம் அவசியம். எனவே கீரிமலை மீன்பிடித் துறைமுகம் எதுவித மறுதலிப்புக்களும் இன்றி அமைக்கப்பட வேண்டும்’ என ஒரு மிகக் கீழ்த்தரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்களோடு மக்களாக வாழாதவர்கள், இப்பேர்ப்பட்ட பாரிய தவறுகளைச் செய்கின்றார்கள். சரித்திரம் அறியாதவர்கள் இப்பேர்ப்பட்ட தவறுகளை இழைக்கின்றார்கள். தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காக தமது மக்களையே விலை பேசத் துணிகின்றார்கள். இவை எவ்வளவு எதிர்மறையான தாக்கங்களை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு புனிதத் தலம் அல்லது புண்ணிய பூமியின் மகத்துவம் சிறிதும் குன்றாமல் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும். அந்தவகையில் கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். இதனை அரசு நன்கு புரிந்துகொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் என நம்புகின்றேன். ஒரு பக்கத்தால் மயிலிட்டியை விடுவிக்கப் போகின்றோம் என்று கூறிக் கொண்டு கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க எத்தனிப்பது கண்ணியமற்ற செயலாகவே எனக்குப் படுகின்றது” என்றார்.

No comments:

Post a Comment