வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தடம்
மாறுகின்றதா தமிழ்த் தேசியம்’ என்ற தொனிப்பொருளிளல் மன்னார் ஞானோதய மண்டபத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்கள் இயக்கமாக மாறுவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முடிவெடுக்கிற முடிவுகள் பல இதுவரைகாலமும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 15 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் 4 அல்லது 5 கட்சிகளாகவே செயற்படுகின்றோம். அந்தக் கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களை வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரமே பயன்படுத்தி வந்துள்ளோம்.மக்கள் வடகிழக்கில் சுமார் 40 உள்ளுராட்சி மன்றங்களை எங்களிடம் கையளித்தார்கள். தற்போது அவை மாகாணசபையிடமும் நாடாளுமன்றத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் எங்களிடம் ஒப்படைத்த சபைகளை நாங்கள் சரிவர நடாத்தவில்லை. இதனால் விமர்சனங்களே எழுந்துள்ளன.எனவே கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் நாங்கள் விட்ட இடத்தில் இருந்து ஏதோ ஒரு பெயரில் அதாவது தமிழ் தேசிய சபை அல்லது ஏதாவது ஒரு பெயரில் நாங்கள் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மண்ணில் பல்வேறு புத்திஜீவிகள் உள்ளனர். எனவே ஒரு மக்கள் இயக்கம் உடனடித் தேவையாக உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இன்று முகப்பார்த்துப் பேசமுடியாத நிலை உருவாகியுள்ளது.
நான்கு கட்சிகள் கூட்டாக ஒரு முடிவை எடுத்தால் அதில் சிலர் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கின்றனர்.வெளிப்படைத்தன்மை இன்றி செயற்படுகின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் அனைவரும் ஒருமித்த முடிவுக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெறுமனே ஒரு கட்சியினையும், தனி நபர்களையும் முன்னிலைப்படுத்த முயற்சித்ததன் விளைவாகவே இன்று நாங்கள் இவ்வளவு இழப்புக்களை சந்தித்து இந்த நிலைக்கு வந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment