June 24, 2016

தமிழ் தேசிய பற்றாளனுக்கு இரங்கல்!

தமிழ் தேசிய பற்றாளர் இரா.கனகரத்தினம் அவர்களின் மறைவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது .
அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தமிழ்த் தேசியப் பற்றாளரும் தமிழ் மொழிக் காப்பாளருமான இரா. கனகரத்தினம் அவர்கள் எமது மண்ணை விட்டு மறைந்தார் என்ற செய்தியறிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆழந்த கவலையடைகின்றோம்.
தற்போது உலகின் பல நாடுகளிலும் தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்க் கல்வி ஆகிய துறைகளை வளர்த்தெடுப்பதில் கனகரத்தினம் இவர்கள் அளப்பரிய பணியாற்றியுள்ளார்.
தனது பதினெட்டாவது வயதில் தமிழர் வரலாறு பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட குரும்பசிட்டி இரா .கனகதரத்தினம் அவர்கள் மண்ணைவிட்டு மறையும் வரை கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக தனது பணியை தமிழுக்காக ஆற்றிய இவர் தமிழை உலகளாவிய ரீதியில் பாதுகாக்க அருட்தந்தை வண தனிநாயகம் அடிகளார் ஏ.கே.செட்டியார் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராசிரியர் சாலை இளந்திரையன் போன்ற பெரியார்களுடன் இணைந்து உழைத்த கனகரத்தினம் ஐயா ‘உலகத்தமிழர் குரல்’; பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் கனகரத்தினம் ஐயா அவர்கள் ‘சீசரின்தியாகம்’ சிறுகதை ‘அலைகடலுக்கு அப்பால்’ ‘உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி’ ‘இறியூனியன் தீவில் எங்கள் தமிழர்கள்’ ‘மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர்கள்’ ‘ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்’ ‘ஒரு நூற்றாண்டு(1890 -2011) இலங்கைத்தமிழர் வரலாறுமைக்ரோ பிலிம்களில் முதலான பல வரலாற்று நூல்களைத் தமிழுக்காகத் தந்துள்ளார். அவரது தமிழ் பணிக்காக மொறிசியஸ் பிரதமர் ராம்குலாம் தமிழக முதல்வர்களாலும் கௌரவிக்கப் பட்டிருந்தார்.
திரு இரா கனகரத்தினம் அவர்கள் உலகத் தமிழர் ஆவணக்காப்பகத்தை நிறுவி தனது பணியை தொடர்ந்து வந்த காலத்தில் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சில காலம் சிறையிலும் துன்பங்களை அனுபவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகையின் கீழ் வன்னியிலிருந்த தமிழீழ ஆவணக்காப்பகத்தில் பணிபுரிந்த போது விடுதலைப் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தவர்.
தமிழ்த் தேசத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் ஆழமான பற்றுக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் இழப்பு தமிழ்த் தேசத்திற்கு ஈடு செய்யப்பட முடியத பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரின் கனவு நனவாக தமிழைக்காக்க உறுதியுடன் அனைவரும் உழைப்போம். எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment