June 24, 2016

சர்வதேச நீதிபதிகள் குறித்து தமிழ் கூட்டமைப்புடன் பேசுவோம்! ஒஸ்லோவில் உறுதியளித்தார் மங்கள!

வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம்.


அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென இராணுவத்திற்கு கூறியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நோர்வேக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமான தேர்தலில் நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டது. முக்கிய விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

நாங்கள் 19வது திருத்தத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தோம். தற்போது பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பு வரையப்பட்டு வருகின்றது.

அத்துடன் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. காரணம் நல்லிணக்கமின்றி எம்மால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. இதன் காரணமாகவே ஜெனிவா பிரேரணைக்கு நாம் இணை அனுசரணை வழங்கினோம்.

ஆனால் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்து நாம் பிரேரணைக்கு அனுசரணை வழங்கவில்லை. மாறாக எமது நல்லிணக்க செயற்பாடுகளுக்காகவே நாம் அனுசரணை வழங்கினோம்.

அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய உள்நாட்டு பொறிமுறை ஒன்றை தயாரித்து வருகின்றோம். தற்போது காணாமல் போனோர் குறித்து ஆராய்வதற்கான நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தென்னாபிரிக்காவுடன் பேச்சு நடத்தி வருகின்றோம்.

இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி தேவைப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாங்கள் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டியுள்ளது. இதன்போது சர்வதேச பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் தீர்மானம் எடுக்கும். எவ்வாறாயினும் இந்த விசேட நீதிமன்றமானது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டே நிறுவப்படும் என்பதை கூறுகின்றோம்.

மேலும் நான் அடுத்தவாரம் ஜெனிவாவுக்கு விஜயம் செய்து இலங்கை சார்பில் அமர்வில் உரையாற்றவுள்ளதுடன் எமது நாட்டின் முன்னேற்ற நிலைமை குறித்து விளக்கமளிக்கவுள்ளேன்.

ஜெனிவா பிரேரணை பரிந்துரைகளை பயன்படுத்துவதற்கு நாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றோம். இது சர்வதேசத்தின் அழுத்தத்தினால் செய்யப்படுவதல்ல. மாறாக எமது நாட்டுக்காக செய்கின்றோம்.

எமது நாட்டையும் இராணுவத்தையும் மக்களையும் பாதுகாக்க ஜெனிவா பிரேரணை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த தன்னம்பிக்கையுடன் நாம் முன் செல்வதுடன் சவால்களை எதிர்கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment