June 1, 2016

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட 140 மில்லியன் ரூபாய் திரும்பிச் செல்லும் அபாயம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புனரமைப்புக்கு என இவ்வருடம் மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட
140 மில்லியன் ரூபாய் திரும்பிச் செல்லும் நிலையில் இருப்பதாக மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு இவ்வருடம் மத்திய அரசிடமிருந்து 140 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் ரூபாய் வைத்தியசாலை புனரமைப்புக்கும் மிகுதி 40 மில்லியன் ரூபாய் மருத்துவ உபகரங்கள் கொள்வனவுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரைக்கும் குறித்த நிதியை பயன்படுத்துவதில் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாமையினால் இவ்வருட இறுதிக்குள் குறித்த நிதி திரும்பிச் செல்லும் ஆபத்து இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த நிதியில் புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாயினையும் வைத்தியசாலையின் புனரமைப்புக்கு பயன்படுத்த வேண்டியே தேவை இல்லை எனவும் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையின்படி புனரமைக்கு அவ்வளவு பெரிய தொகை தேவைற்றது.

எனவே அந்த நிதியை கொண்டு மாவட்ட வைத்தியசாலையின் அடுத்த கட்ட அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலையின் ஒரு தரப்பினர் கோரிவருகின்ற நிலையில்,

மற்றொரு தரப்பினர் குறித்த100 மில்லியனையும் வைத்தியசாலையின் புனரமைக்கே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்தோடு அரசியல் தலையீடுகள் காரணமாகவும், தவறான கருத்துருவாக்கம் காரணமாகவும் குறித்த நிதியை வைத்தியசாலையின் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த நிதி பயன்படுத்துவது தொடர்பில் இவ்வருடத்தின் நடுப்பகுதியான இதுவரைக்கும் இவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. எனவே தான் மேற்படி 140 மில்லியனும் திரும்பிச் செல்லும் ஆபத்தே ஏற்படும் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கிளிநொச்சி மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்திற்கு வைத்தியசாலையின் புனரமைப்பு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் அதன்படி சிலவேளை குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் நிறைவுபெற்று அனைத்து தரப்பினர்களும் இணக்கத்திற்கு வரும் பட்சத்தில் நிதியை திரும்பவிடாது பயன்படுத்த முடியும் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

வளர்ந்து வருகின்ற மாவட்டத்தில் குறித்த வைத்தியசாலையும் பல்வேறு தேவைகளுடன் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றமையும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment