September 2, 2015

மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் பிரித்தானியக் கடலோரத்தை எட்டியது – நெதர்லாந்து நோக்கிய அடுத்த கட்ட அஞ்சலோட்டத்தை அறப்போர் செயற்பாட்டாளர் கோபி சிவந்தன் பொறுப்பேற்றார்!‏

மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் பிரித்தானியக் கடலோரத்தை எட்டியது – நெதர்லாந்து நோக்கிய அடுத்த கட்ட அஞ்சலோட்டத்தை அறப்போர் செயற்பாட்டாளர் கோபி சிவந்தன் பொறுப்பேற்றார்!


தமிழின அழிப்பிற்கு நீதிவழங்கும் வகையில் பன்னாட்டு நடுவர் மன்றம் நிறுவப்படுவதை வலியுறுத்தித் திங்கட்கிழமை மதியம் இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாகத் தொடங்கப்பட்ட மிதிவண்டிப் பரப்புரைப் பயணம் இன்று இரவு 8:30 மணியளவில் பிரித்தானியாவின் ஹார்விச் கடலோரப் பகுதியை எட்டியுள்ளது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அறப்போர் செயற்பாட்டாளர் சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட மிதிவண்டிப் பரப்புரை அஞ்சலோட்டத்தில் அறப்போர் செயற்பாட்டாளர்களான நீதிராஜா, திருக்குமார், துரைசாமி லோகநாதன் ஆகியோரும் இணைந்து கொண்டு மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டனர்.

இவர்களுடன் இன்று முற்பகல் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும், அறப்போர் செயற்பாட்டாளருமான கோபி சிவந்தன் அவர்கள் இணைந்து கொண்ட பொழுதும், பரமேஸ்வரன் தலைமையிலான நால்வரும் ஹார்விச் துறைமுகம் வரை பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள விரும்பியதால் அவர்களுக்கு கோபி சிவந்தன் வழித்துணை வழங்கினார்.

இந்நிலையில் இன்று இரவு 8:30 மணியளவில் இவர்கள் ஐவரும் பிரித்தானியாவின் கிழக்குக் கோடியில் உள்ள கடலோர எல்லைத் துறைமுகப் பகுதியான ஹார்விச் பிரதேசத்தை சென்றடைந்ததை அடுத்து பரமேஸ்வரன் அவர்களிடம் இருந்து இரண்டாம் கட்ட மிதிவண்டிப் பரப்புரைப் பயண அஞ்சலோட்டத்தை கோபி சிவந்தன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கப்பல் மூலம் நெதர்லாந்து கூக் துறைமுகத்தை சென்றடையும் கோபி சிவந்தன் அவர்களுடன் கூடவே திருக்குமார், துரைசாமி லோகநாதன் ஆகிய இரு அறப்போர் செயற்பாட்டாளர்களும் மிதிவண்டிப் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

புதன்கிழமை காலை 10:00 மணியளவில் நெதர்லாந்து டென்ஹாக் நகரில் உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை சென்றடையும் இவர்களை நெதர்லாந்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் வரவேற்பதற்கு ஆயத்தமாகின்றனர்.

அங்கிருந்து இன்னும் பல்வேறு கட்டங்களாக ஜெனீவா நோக்கி மிதிவண்டிப் பரப்புரை அஞ்சலோட்டப் பயணம் நெதர்லாந்து உள்ளடங்கலான ஐரோப்பிய நாடுகளில் உள்ள அறப்போர் செயற்பாட்டாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட இருக்கின்றது.
  


நன்றி


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


No comments:

Post a Comment