அமெரிக்காவின் ஜெனீவாத் தீர்மானத்திற்கு எதிராக, அமெரிக்கா வடிவமைத்துக் கொடுத்த
அதே பாதையில் சிங்கள ஆட்சியாளர்கள் எதிர்த் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள். அதாவது, ஐ.நா. மனித உரிமைகள் மையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் தீர்மானம் எதுவும் தம்மைக் கட்டுப்படுத்தாது என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளது மீள் ஒருங்கிணைப்பு அறிவித்தலும், அதைத் தொடர்ந்த கைதுகளும் அமெரிக்காவின் தலைமையில் அணிதிரண்ட நாடுகளின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தாத நிலையில், சிறீலங்கா அரசாட்சியாளாகள் தமது சக்திக்குட்படாத வேறொரு நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
இலங்கைக்கு வெளியே, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக, இருப்பதாக நம்பப்படும் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது தடையினை அறிவித்துள்ள சிறீலங்கா அரசு, பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக 424 புலம்பெயர் பிரமுகர்களையும், அவர்களது விபரங்களையும் பட்டியலிட்டுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களது இந்தப் புதிய பாய்ச்சல், சிங்கள தேசியவாதிகளாலும், சிங்கள மக்களாலும் பிரமிப்பாகப் பார்ப்பதற்கானது என்பதற்கு அப்பால், தமிழர் தரப்பிற்குப் பாரிய இழப்பினை உருவாக்கிவிடப் போவதில்லை. ஏனென்றால், சிங்கள ஆட்சியாளாகளால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்களும், அறிவிக்கப்பட்ட தமிழர்களும் தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தேசங்கள் சிங்கள இனவாதத்தின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் சட்ட நெறிமுறைகளைக் கொண்டவை அல்ல. அந்தந்த நாடுகளின் சட்ட வரைமுறைகளுக்குட்பட்ட வகையில் தம்மைக் கட்டியமைத்துக்கொண்ட தமிழர் அமைப்புக்கள் மீதும், அதன் செயற்பாட்டாளர்கள்மீதும் சிங்கள விருப்பங்களுக்குச் சார்பான நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னர், விடுதலைப் புலிகள் மீதான தடைககள் இந்தியா, அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த நாடுகளால், விடுதலைப் புலிகள் சார்பான அமைப்புகள், நபர்கள் மேல் அதிக அழுத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இறுதி யுத்தத்திற்கான அடித்தளமிடப்பட்ட காலத்தில், இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாகவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மீதும், அதன் செயற்பாட்டாளர்கள் மீதும் அழுத்தங்களும் கைதுகளும் இடம்பெற்ற போதும், அதுவும் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்குட்பட்டே பிரயோகிக்கப்பட்டது. தமிழீழ மக்களது உணர்வுகளையும், தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும், சிங்கள ஆட்சியாளர்கள் அவர்கள் மீது தொடர்ந்தும் புரிந்துவந்த இன வன்முறைகளைப் புரிந்துகொள்ளாத நிலையில் உருவான அவலங்கள் மட்டமே.
ஆனால், தமிழர்கள் மீதான சிங்கள தேசத்தின் யுத்தம் பற்றிய புரிதல்களும், வெளிவந்து கொண்டிருக்கும் போர்க் குற்ற ஆதாரங்களும் மேற்குலகின் மன நிலைகளில் பாரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலும், பல புரிதல்களை இந்த உலகுக்கு உணர்த்தப் போகின்றது. இந்திய கொங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியுடன் தனக்கான காவலரண் தகர்ந்துவிடப் போகின்றது என்ற அச்சத்துடன் இருட்டிலும் வாள் வீசுகின்றார் சிங்கள அதிபர் ராஜபக்சே. அதுதான், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையும், புலம்பெயர் தமிழ்ப் பிரமுகர்கள் மீதான அச்சுறுத்தலும்.
இதில், மிக வேடிக்கை என்னவென்றால், தற்போது ‘புலம்பெயர் தமிழ்த் தளங்களில் ஜனநாயகப் போராளிகளாக அர்ப்பணிப்புடன் இயங்குகின்ற எனது பெயர் இந்தப் பட்டியலில் இல்லையே...’ என்று வருத்தப்படுபவர்களும் இருக்கின்றார்கள். ‘நாம் கே.பி. அண்ணாவுடன் நெருங்கிச் செயற்படுபவர்கள். எங்களை எதற்காக இந்தப் பட்டியலில் சேர்த்தார்கள்?’ என்று அங்கலாய்ப்பவர்களும் இருக்கின்றார்கள். 2009 மே 18 இற்குப் பின்னர், தமிழ்த் தேசிய தளங்களில் காணாமல் போனவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளார்கள். பல வருடங்களுக்கு முன்னால் உயிரிழந்து போனவர்களும்கூட இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.
எப்படி இருப்பினும், சிங்கள தேசத்தின் இந்த அறிவிப்பு, புலம்பெயர் தமிழர்களுக்கு இரண்டு செய்திகளைத் தெரிவிக்கின்றது. ஒன்று, போராடாவிட்டாலும், நீ தமிழன் என்பதால் நீ எங்கேவாழ்ந்தாலும் உன் சுயம் அழியும்வரை விடமாட்டேன். அடிமையாய், வாய் பேசாமல் இரு. அல்லது, உனக்கான எதுவுமே, யாருமே இலங்கைத் தீவில் இருக்கப் போவதில்லை.
இரண்டாவது, 16 அமைப்புக்களாகப் பிளவுண்டு போயுள்ள உங்களது அமைப்புக்களால் எதையுமே உருப்படியாகச் சாதிக்க முடியாது. சிங்கள இனவாதத்தை வெல்ல முடியாது என்பது. இழப்புக்கள் தமிழ் மக்களுக்குப் புதியவை அல்ல. உலகின் மிகப் பெரிய விடுதலை வேள்வியை நடாத்திக் காட்டியவர்கள் ஈழத் தமிழர்கள். ஈகத்திற்குப் புதிய விளக்கத்தை உலகுக்கு வழங்கியவர்கள். மக்களுக்காக மரணிப்பதைப் பெருமையாகக் கருதிய மாவீரர்களது சொந்தங்கள் நாங்கள். எங்களால் முடியும் என்பதைச் சாதித்துக் காட்டிய தலைவனின் மக்கள் நாங்கள். சமரசமற்ற வகையில் எங்கள் தேசிய விடுதலைப் போரை முன் நகர்த்தியவர்கள்.
முன்னைய காலங்களை விடவும், இப்போது மிகப் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளோம். எங்களை இலங்கைத் தீவிலிருந்து விரட்டிய சிங்களப் பூதம் இப்போது புலம்பெயர் தேசங்களிலும் எங்களது வாழ்வைச் சீரழிக்க முயல்கின்றது. எங்களது மௌனங்களும், சுயநலங்களும், பிளவுகளும் எதிரிக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த நிலையை நாமே தகர்த்தெறிய வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிரியே நமக்கு வழங்கியுள்ளான். அதற்கான களத்தில் எங்கள் ஒவ்வொருவரது பலமும், பங்«ற்பும் இல்லாமல் போய்விட்டால், ‘இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள்’ என்பது ஒரு செய்தியாகிவிடும்.
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment