முதல்வர் விக்னேஸ்வரனைக் கடுமையாக விமர்சித்துப் பிரச்சாரம் செய்து வருகிற அதிமேதாவி ஒருவர், சமீபத்திய மின்னஞ்சலில்,‘விக்னேஸ்வரனுக்குக் குறள் பிடிக்கும், அவருக்காக இந்தக்
குறள்’ என்று நக்கலடித்திருந்தார். தனக்கும் குறள் தெரியும் – என்பதைக் காட்டுகிற மின்னஞ்சல் அது. டி.பி.எஸ். ஜெயராஜ் அண்ணாவின் கட்டுரையோ, வள்ளுவத்தின் வழியில், ‘நிலையில் திரியாது’ நிற்பவர் விக்னேஸ்வரன் தான் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ, தனது கட்டுரையில் விக்னேஸ்வரனின் வல்வெட்டித்துறை உரையைக் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயராஜ் அண்ணா. 2013ல், மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, வல்வெட்டித்துறை பிரச்சாரக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் பேசிய பேச்சு அது.
“வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தனான பிரபாகரன் – பயங்கரவாதி அல்ல! தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு மகாவீரன்” என்று, அரசியலில் நுழைந்த நொடியிலேயே, உள்ளதை உள்ளபடி பேசியிருக்கிறார் விக்னேஸ்வரன். சம்பந்தர்களுக்கும் சுமந்திரன்களுக்கும் அது எரிச்சலை ஏற்படுத்தியதா இல்லையா என்பது பற்றி நமக்குத் தகவல் இல்லை. ஆனால், ஜெயராஜ் அண்ணா அதைக் கேட்டு அப்போதே கடுப்பாகியிருக்கிறார் என்பது, இப்போது தனது கட்டுரையில் அதை மறக்காமல் அவர் குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.
வேறொரு கோணத்தில் பார்த்தால், ஜெயராஜ் அண்ணாவும் சுமந்திரனும் கூட ‘நிலையில் திரியாது’ நிற்பவர்கள் தான். ‘இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கே உலை வைத்துவிட வேண்டும்’ என்கிற நிலையில் உறுதியாக இருக்கிறார்கள் அவர்கள். அந்த நிலையிலிருந்து அண்ணாவும் மாறவில்லை, அவரது அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றும் உறவினர் சுமந்திரனும் மாறவில்லை. ‘வாழ்வோ சாவோ, எதுவாயிருந்தாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான்’ என்கிற நிலையில் ஆணி அடித்ததைப் போல் நிற்கிறார்கள்.
தொடர்ந்து ஒரு விஷயத்தை கவனித்துவருகிறேன். யார் யார் பிரபாகரன் மீது புழுதிவாரித் தூற்ற முயற்சித்தார்களோ, அவர்கள் அத்தனைப் பேரும் இப்போது விக்னேஸ்வரன் மீது பாய்கிறார்கள். பிரபாகரன் மாதிரியே விக்னேஸ்வரனும், ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ‘அமர் அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை’ என்பது வள்ளுவம். பிரபாகரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அந்தக் குறள் நூறு சதவிகிதம் பொருந்துவதைப் பார்க்கிறபோது வியப்பாக இருக்கிறது எனக்கு!
(குறளின் பொருள் அறிய விரும்புபவர்கள், புத்தகக் கடைக்கு ஒரு நடை போய்வாருங்கள். கவிதா பதிப்பகத்திலிருந்து குமரன் பதிப்பகம் வரை அத்தனைப் பதிப்பகமும், மிகக் குறைந்த விலையில், விலை மதிக்க முடியாத திருக்குறளைப் பதிப்பித்திருக்கிறார்கள். ஓட்டை ஸ்கூட்டரில் போகிறவன்கூட ஹெல்மெட் வைத்திருக்க வேண்டிய நாட்டில், வீட்டில் ஒரு திருக்குறள் புத்தகம் இல்லாமலா வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?)
முதல்வர் பதவியில் அமர்கிறவரை இருந்த விக்னேஸ்வரன் வேறு, அமர்ந்த பிறகு இருக்கிற விக்னேஸ்வரன் வேறு, பதவிக்கு வந்தபிறகு அடியோடு மாறிவிட்டார், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார் – என்று நீட்டி முழக்கிப் பேசுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில், பதவியில் அமர்வதற்கு முன்பு என்ன பேசினாரோ அதைத்தான் அந்த மனிதர் இன்றுவரை பேசுகிறார். இந்த உண்மையை மூடிமறைக்க முயல்பவர்கள் யாரென்று பார்த்தால், ‘இனப்படுகொலை’ என்கிற அப்பட்டமான உண்மையையே மூடிமறைக்க முயன்றார்களே – அவர்கள் தான் இவர்கள்.
மாகாணசபை தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன்பும் சரி, தேர்தல் பரப்புரையிலும் சரி, முதல்வரான பிறகும் சரி, சென்னையில் வந்து பேசியபோதும் சரி, லண்டனில் போய்ப் பேசும்போதும் சரி, இப்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதும் சரி, எந்த இடத்திலும் விக்னேஸ்வரன் முரண்படவில்லை.
“அரசின் பாரபட்சமான மனோபாவம்தான் எம் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு தமிழருக்கான உரிமைகளும் அரசியல் விருப்பங்களும் நிறைவேற்றப்படும் என்றார்கள். அதற்கு நேர்மாறாக, இருக்கிற உரிமைகளும் இன்றைக்குப் பறிக்கப்படுகின்றன” இது முதல்வராவதற்கு முன் விக்னேஸ்வரன் பேசியது.
முதல்வராகும் முன்பே, இந்தியாவின் நம்பர் ஒன் நாளேடான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை விக்னேஸ்வரனிடம் பேட்டி எடுத்தது. தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது குறித்த அதன் குதர்க்கமான கேள்வி ஒன்றுக்கு இப்படி பதிலளித்திருக்கிறார் அவர்…….
“நான் திருப்பிக் கேட்கிறேன். வட மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒன்றரை லட்சம் சிங்கள ராணுவம், தென் இந்திய அணு உலைகளுக்கு மிக அருகில் நிற்கிறது. கச்சத்தீவு அருகே நடமாடும் இலங்கை கடற்படைப் படகுகளில் சீனர்கள் இருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு ஆபத்தா, இல்லையா” –
விக்னேஸ்வரனின் விவரமான வார்த்தைகள் நம்மை வியக்க வைக்கின்றன.
விக்னேஸ்வரனின் விவரமான வார்த்தைகள் நம்மை வியக்க வைக்கின்றன.
அதே பேட்டியில், “எழுபதுகளில் எல்லா அமைதி வழிகளிலும் போராடித் தோற்றபிறகு, நம்பிக்கை இழந்தது தமிழ்ச் சமூகம். அதன்பிறகுதான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர்” என்று தெளிவாகக் குறிப்பிட்டார் விக்னேஸ்வரன்.
தேர்தல் பிரச்சாரத்தில் விக்னேஸ்வரன் என்ன பேசினார் என்பதற்கு – ‘பிரபாகரன் பயங்கரவாதியல்ல’ என்கிற வல்வெட்டித்துறை உரை வலுவான ஆதாரம்.
சென்றவாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மாநாட்டில், “நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டால், புலி முத்திரை, பயங்கரவாத முத்திரை குத்த முயல்கிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சி நாம் நீதி கேட்காமல் இருந்துவிட முடியாது” என்று வெளிப்படையாகவே பேசினார் விக்னேஸ்வரன்.
சென்ற மாதம் லண்டனில் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை, இந்த இனம் என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டிய ஆவணம். அதை முழுமையாக எழுத இடமில்லை என்றாலும், முக்கியப் பகுதிகளையாவது இங்கே குறிப்பிடவேண்டும்.
“நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்டு வடமாகாண சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது கடும்போக்கான நிலை இல்லை. தமிழ் மக்களுக்கான நீதியை அடைவதற்கான பாதையில் அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…..
முத்திரை குத்தல்களுக்கும் சாடல்களுக்கும் அஞ்சி, எம் இனத்துக்கு நிகழ்த்தப்பட்டது இன அழிப்புதான் என்கிற நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க முடியாது…..
குற்றமிழைத்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. தமிழின அழிப்பை உலகறியச் செய்வதே எங்கள் நோக்கம். கொல்லப்பட்ட எங்கள் உறவுகளுக்கு நீதி கேட்கிறோம். உண்மைகள் வெளிவராமல் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் சாத்தியமில்லை…….
நாம் இனியும் ஏமாறும் இனமாக இருக்க முடியாது…. இன அழிப்புக்கு இனியும் இடம் கொடுத்தல் ஆகாது…….”
விக்னேஸ்வரனின் லண்டன் உரை என்று சொல்வதைக் காட்டிலும், விக்னேஸ்வரனின் லண்டன் பிரகடனம் என்றுதான் இதைக் குறிப்பிட வேண்டும். உண்மையும் உணர்வும் மிக்க அந்தப் பிரகடனத்தில், வார்த்தை ஜோடனைகளோ அலங்காரங்களோ இல்லை. அவை அவசியமும் இல்லை.
‘நாம் சிறுபான்மையினர் இல்லை’ என்று லண்டனில் தெளிவாகவும் விரிவாகவும் விக்னேஸ்வரன் விவரித்திருந்ததை இதே பகுதியில் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
இனப்படுகொலை நடந்ததையே மூடி மறைத்துவிட தலைகீழாய் நின்ற சுமந்திரன்கள் கூட கூச்சநாச்சமில்லாமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற இந்தத் தருணத்தில், லண்டனில் பேசும்போது விக்னேஸ்வரன் விடுத்த ஒரு வேண்டுகோளை நான் நினைவுபடுத்தியாக வேண்டியுள்ளது.
“தமிழினத்துக்கு நடந்த இன அழிப்பை வெளிப்படுத்தத் தயங்கும் அல்லது தடுக்கும் தமிழர்கள் தொடர்பாக, அவர்களது அரசியல் நெறி தொடர்பாக, எம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”….
விக்னேஸ்வரனின் இந்த வார்த்தைகள்தான் சுமந்திரன்களின் குற்ற உணர்ச்சியை உலுக்கியெடுத்திருக்க வேண்டும். ஜெயராஜ் அண்ணாவின் கோபத்திலிருந்து இதை நாம் அறிய முடிகிறது. ‘விலைபோகாத அரசியல்வாதிகளே நமது தேவை’ என்று விக்னேஸ்வரன் சொன்னால், ஏற்கெனவே சோரம் போய்விட்ட அரசியல்வாதிகளுக்கு கோபம் வராதா என்ன!
இப்போது கதை உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. தேர்தல் நெருங்க நெருங்க, இனப்படுகொலைக் குற்றச்சாட்டை மூடிமறைக்க தான் மேற்கொண்ட ‘ராஜதந்திர’ நடவடிக்கைகளை எப்படி மூடி மறைப்பது என்கிற கவலையிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள் சுமந்திரன்கள். அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்கிற கவலையில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள், ஜெயராஜ் அண்ணாக்கள்.
விலைபோகாத அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுங்கள் – என்கிற விக்னேஸ்வரனின் வேண்டுகோளை தேவையில்லாமல் விமர்சிக்கப் போய், ஆப்பசைத்த விலங்காகச் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள் – ‘இனப்படுகொலை என்றெல்லாம் பேசக் கூடாது… மூச்…’ என்று போதித்த போதி சத்துவர்கள்.
“தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணாக நடக்க அரசியல்வாதிகள் முயலுகின்றனர். முக்கியமாக, ‘தெற்கத்திய (சிங்கள) அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நடக்காவிட்டால் விமோசனம் இல்லை’ என்கிற எண்ணத்தில், தேர்தல் கால வசனங்களையெல்லாம் மறந்து, அவர்களது மனம் கோணாமல் நடக்க முயல்கிறார்கள். அவ்வாறு செய்வதானால், தேர்தல் அறிக்கையிலேயே அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா” – என்று சுயநல அரசியல்வாதிகளின் சட்டையைப் பிடித்துக் கேட்கிறது 2 நாட்களுக்கு முன் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் விக்னேஸ்வரன் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார் அந்த அறிக்கையில்!
“நீங்கள் வாக்களிக்கும் கட்சி, தமிழரின் தனித்துவம், சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கட்சியாக இருக்க வேண்டும்…
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னும், தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்கிற கோட்பாடுகளில் உறுதியாக இருந்துவருகிற கட்சியாக இருக்க வேண்டும்……
இன அழிப்புக்கு நீதி தேட பின்னிற்காத கட்சியாகவும், சுதந்திர சர்வதேச விசாரணை என்கிற விஷயத்தில் உறுதியுடன் நிற்கிற கட்சியாகவும் இருக்க வேண்டும்” என்பது விக்னேஸ்வரனின் மிக மிகத் தெளிவான தேர்தல் வழிகாட்டு நெறிகள்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னும், தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்கிற கோட்பாடுகளில் உறுதியாக இருந்துவருகிற கட்சியாக இருக்க வேண்டும்……
இன அழிப்புக்கு நீதி தேட பின்னிற்காத கட்சியாகவும், சுதந்திர சர்வதேச விசாரணை என்கிற விஷயத்தில் உறுதியுடன் நிற்கிற கட்சியாகவும் இருக்க வேண்டும்” என்பது விக்னேஸ்வரனின் மிக மிகத் தெளிவான தேர்தல் வழிகாட்டு நெறிகள்.
தமிழகம் போலவே நிறைய கட்சிகள் இருக்கின்றன ஈழத்திலும்! அது தவறுமில்லை. அதுதான், ஜனநாயகம். ஆனால், கொள்கையளவில் பார்த்தால், ஈழ அரசியலில் இரண்டே தரப்புதான்! ஒன்று, தாயகம், தனித்துவம், சுய நிர்ணய உரிமை, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஆகியவற்றைக் கோருகிறது. இன்னொன்று, சிங்களத்துக்குக் கீழ் தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறது. நடந்தது இனப்படுகொலை என்று சொல்லவோ, அதற்கு சர்வதேச விசாரணை கோரவோ தயங்குகிறது இந்த இரண்டாவது தரப்பு.
இந்த இருவரில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத்தான் விக்னேஸ்வரன் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
விக்னேஸ்வரன் அரசியலுக்குப் புதியவர்தான்! ஆனால், பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் தலைவர்களிடம் இல்லாத துணிவும் தெளிவும் அவரிடம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உள்ளதை உள்ளபடி சொல்கிற நேர்மை இருக்கிறது. இரட்டை முகமும், இரட்டை நாக்கும் அவரிடம் இல்லை. அரசியலில் இறங்கிய தருணத்தில், ‘பிரபாகரன் பயங்கரவாதியல்ல’ என்று முழங்கியவர், இப்போதும் மாறிவிடவில்லை. ‘அரசின் அடக்குமுறைகள்தான் எம் இளைஞர்களை ஆயுதமேந்தச் செய்தது’ என்று விளக்கமாகச் சொல்கிறார்.
இனப்படுகொலையென்று பேசுவது முட்டாள்தனம் – என்று ஊருக்கெல்லாம் உபதேசித்துவிட்டு, தாங்கள் அப்படிச் சொன்னதைத் தேர்தல் களத்தில் மறுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் எவராலும், விக்னேஸ்வரனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது இயல்பான ஒன்றுதான்!
ஒரே ஒரு கேள்வியை மிகுந்த மனவேதனையுடன் எனக்குள் நானே எழுப்பிக் கொள்வதுண்டு. அதற்கு இன்றுவரை என்னால் விடை தேட முடியவில்லை.
தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து முடித்த சிங்கள இனம், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அதை மறைக்க முயற்சி செய்கிறது. எந்தக் குற்றவாளியும் இதைத்தான் செய்வான். ஆனால், சொந்த இனம் கண்ணெதிரில் அழிக்கப்பட்டதைப் பார்த்த பிறகும், எம்மைக் கொன்று குவித்த ஓர் இனத்தைக் காப்பாற்ற ‘இனப்படுகொலை’ என்கிற உண்மையையே மூடிமறைக்க சுமந்திரன்கள் முயற்சித்தமைக்கு என்ன காரணம்? இதுதான் அந்தக் கேள்வி. இலங்கை ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் – என்பது சுமந்திரன்களின் கொள்கையாக இருக்கலாம். அவர்களது, கொள்கை உயிர்த்திருக்க, ஒன்றரை லட்சம் உயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் குழிதோண்டிப் புதைப்பது என்ன நியாயம்?
நொந்து நூலாகிப் போன சொந்த இனத்துக்கு நீதி கிடைக்கக் கூட தடையாக இருக்கிற ‘சுமந்திரன்கள்’ அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் இனத்தின் அவமானச் சின்னங்கள் என்றால், இந்த இனம் இழக்காத நம்பிக்கையின் அடையாளமாக விக்னேஸ்வரன்கள் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான், வன்னி மண்ணிலிருந்து இனப்படுகொலைக்கு எதிரான ஆணை தெள்ளத் தெளிவாகக் கேட்கும் என்று காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment