இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு இன்று விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடிய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் 21 பக்கங்களைக் கொண்ட மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
அந்த மனுவில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலும் கரிசனை காட்டியுள்ள தமிழக அரசு, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை விரைவாக அமுல்படுத்த மத்திய அரசு தலையிட்டு இலங்கையை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் மனுவில் உள்ளதாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இலங்கை வசமுள்ள கச்சத்தீவை மீளப் பொறுப்பேற்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment