யாழ். மாவட்டத்தின் தீவகப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவற்றை முறைமையாக அரசுடைமையாக்கும் நடவ
டிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பிணை மனுக்கோரல் மீதான விசாரணையொன்றின் போதே மேற்கண்ட உத்தரவை பொலிஸாருக்கு நீதிபதி பிறப்பித்தார். வேலணை, சாட்டி, மண்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் கடலோர மண் அகழ்வில் ஈடுபடுவோரைக் கைதுசெய்தல், மண்கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதனைவிட தீவுப்பகுதியில் வன்செயல்களை கட்டுப்படுத்தல், சட்டவிரோத குற்றங்கள் புரிவோரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவேண்டும்.
தீவுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கால்நடைகளை இரவு நேரங்களில் கடத்தும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மூலம் மண்டைதீவுச் சந்தி அல்லது பண்ணைச்சந்தியில் பொலிஸ் காவலரணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவுப்பகுதியில் பனை மரங்கள் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் வெட்டிய பனை மரங்களை கடத்தும் வாகனங்களைக் கைப்பற்றி சட்டரீதியாக அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, கடத்தல்களை தடுக்க நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊர்காவற்றுறை, நாரந்தனை, தம்பாட்டி பிரதேசங்களில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும். அபாயகரமாக ஆயுதங்களை கையாள்பவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவு வரையிலான பகுதிகளில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் விழிப்புக்குழுக்களை ஏற்படுத்தி குற்றங்களை தடுப்பதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டம், குற்றவியல் கோவை ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி வழங்கிய உத்தரவுகள் வருமாறு:
மல்லாகம், சுன்னாகம், ஏழாலை பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. வீதியோர சண்டித்தனங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதனை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோரை குற்றவியல் நடவடிக்கை கோவையின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் அலைந்து திரிபவர்கள் மீது அலைந்துதிரிவோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தல், சட்டவிரோதமாகக் கூடிய 5 பேருக்கு மேற்பட்ட நபர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தல்,- குற்றச்செயல்கள் நடைபெறும் பிரதான பகுதியென பொலிஸ் புலனாய்வின் மூலம் இனங்கண்டு, அப்பிரதேசத்தில் தொடர் பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றச்செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.
கத்தி, வாள் வைத்திருக்கும் நபர்களை அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டில் கைதுசெய்தல் வேண்டும் ஆகிய உத்தரவுகளை ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிபதி வழங்கினார்.
No comments:
Post a Comment