புலம் பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களினால் கட்டமைக்கப்பட்டு அந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு இயங்கும் தமிழர் அமைப்புக்களை சிறீலங்காவின் இனவாத சிங்கள அரசு தடைசெய்துள்ளது.
தாயகத்தில் தங்கள் சொந்த மண்ணில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழர்கள் தமக்கு அடக்கலம் கொடுத்த நாடுகளில் அந்த நாடுகளின் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக தமிழர் அமைப்புக்களை நிறுவி தமிழர் நலன்சார்ந்தும் தாயாக உறவுகளின் நலன்சார்ந்தும் பல செயல்திட்டங்களை நடத்திவருகின்றனர். குறிப்பாக பல சமூக செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாது தமிழர் தாம் வாழும் நாடுகளுக்கு பெருமைசேர்க்கு முகமாகவும் பல பணிகளையும் செய்துவருகின்றனர்.
இவ்வாறான தமிழர் அமைப்புக்களை தடைசெய்வதன் ஊடாக தமிழர் செயல்பாடுகளை சர்வதேச நாடுகளில் முடக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் இலங்கையின் இனவாத அரசின் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி தவிக்கும் உறவுகளுக்கு உதவும் புலத்து உறவுகளின் தொடர்புகளையும் உதவிகளையும் முழுமையாக சிதைக்கும் முனைப்பாகவே இந்த தடை நடவடிக்கையை பார்க்கமுடிகின்றது. எமது நிலத்தையும் புலம்பெயர்ந்து தொலைதூரத்தில் வாழும் புலத்தின் உறவுகளையும் பிரித்து எம்மை இல்லாதொழிக்கும் இனவாத அரசின் இந்த திட்டமிட்ட நடவடிக்கையானது மனிதநேய நாடுகளால் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.
இங்கு முக்கியமாக ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. கடந்த 2008 மற்றும் 2009 ஆண்டுகளின் இனஅழிப்பின் உச்ச காலப்பகுதிகளில் சிறீலங்காவின் இனவாத அரசு திட்டமிட்டு ஐ.நா உட்பட அனைத்து மனிதநேய அமைப்புக்களையும் அதன் செயல்பாட்டாளர்களயும் தமிழர் நிலப்பகுதியில் இருந்து வெளியேற்றி தமிழர்களை தனிமைப்படுத்தி மாபெரும் இனப்படுகொலையை செய்தது. அதேபோல் இப்பொழுதும் எம் தாய்தேசத்து உறவுகளை எம்மிடம் இருந்து தனிமைப்படுத்துவது மீண்டும் ஒரு பேரவலத்திற்கான முனைப்பாகவே எம்மால் பார்க்க முடிகின்றது. இது அனைத்து தமிழர் நெஞ்சங்களிலும் பெரும் அச்சத்தையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.
தாயாக மக்களின் தாகம் சுமந்து கனடாவில் இருக்கும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழர்களின் முதன்மை கட்டமைப்பான கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) கனடிய சட்ட விழுமியங்களுக்கு அமைவான ஒரு ஜனநாயக மக்கள் கட்டமைப்பு. மக்களின் ஆணையோடு இயங்கும் கனடிய தமிழர் தேசிய அவையினையும் (NCCT) இனவாத சிங்கள அரசு தடைசெய்துள்ளது. இந்த தடை நடவடிக்கைக்கு எதிராக கனடிய தமிழர் தேசிய அவையினராகிய நாம் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுப்பதற்கான முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம் என்பதனையும் மக்களுக்கு இங்கே அறிய தருகின்றோம்.
சிறீலங்கா அரசின் இவ்வாறான திட்டமிட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் மக்கள் மீதான தடை நடவடிக்கைள் குறித்து கனடா என்ன நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என கனடிய நாடளமன்றதில் நாடாளமன்ற உறுப்பினர் போல் டிவர் (MP Paul Dewar) அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈவ் அடம்ஸ் (MP Eve Adams), மார்க் கார்ணு (MP Marc Garneu) அவர்கள் அறிக்கைகள் மூலமாக தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார்கள். எமக்காக குரல் கொடுத்த அனைத்துக்கட்சி நாடாளமன்ற உறுப்பினர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அத்தோடு கனடிய அரசாங்கத்திற்கும் மற்றும் அனைத்துக்கட்சி நாடாளமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் இந்த செய்திகள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவர்களும் எமக்கான உரிமைகளுக்கு குரல்கொடுப்பதோடு சிறீலங்கா இனவாத அரசின் இவ்வாறான தமிழின அழிப்புக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும் கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) தனது வேலைத்திட்டங்களை முன் நகர்த்தி வருகின்றது.
எமது மக்களின் உரிமைக்காக மண்ணின் விடியலுக்காக நாம் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் சிறீலங்கா இனவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என்பதனை கனடியத் தமிழர் தேசிய அவையினராகிய நாம் இங்கே உறுதியோடு தெரிவிக்கின்றோம்.
'தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்'
No comments:
Post a Comment