April 12, 2014

கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளி எங்கே?: சி. பாஸ்க்கரா கேள்வி!

வெளிநாடுகளில் இயங்கிவரும் 16 தமிழர் அமைப்புக்களை தடை செய்த அரசாங்கத்தின் நடவடிக்கையானது அதன் சமாதான போலி முத்திரையை கிழித்தெறிவதாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா குறிப்பிட்டார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை உலகநாடுகளுக்கு தெரிவித்து நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பழிவாங்கும் செயற்பாடாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை காணக்கூடியதாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில், புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வந்து முதலீடு மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தமை முக்கியமான ஒரு விடயம்.

இவ்வாறான வேளையில் அரசாங்கத்தின் இத்தடைச் செயற்பாடு அரசாங்கத்திற்கு இருக்கும் சமாதானத்தின் மீதான கரிசனையின்மையை மிகத் தெளிவாகக் காட்டுவதாக அமைந்துள்ளது. தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்தில் மயானம் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரியொருவர் கூறியுள்ளார். அங்கு மயானம் இருந்தமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை. மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுமே தவிர புதைக்கப்படமாட்டாது. திருக்கேதீஸ்வர கோவிலுடன் தொடர்புடையவர்கள் மயானமில்லையெனக் கூறியுள்ளனர். அப்புதைகுழியிலிருந்து 82 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 25 சதக் குற்றி கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இப்புதைக்குழி 82ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதிக்குரியது. இப்பகுதி பெரும்பாலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது. அதற்கு முன்னர் அங்கு இருந்த மக்களும், திருக்கேதீஸ்வர கோவில் சமூகத்தினரும் அப்பகுதியில் மயானம் இருக்கவில்லையெனக் கூறியுள்ளனர்.

எனவே இப்புதைகுழி தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயக்குற்றியிலிருந்து அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து உண்மையை மூடி மறைக்க புதைகுழியை மயானமெனக் கூறுவதை ஏற்கமுடியாது. எனவே புதைகுழி தொடர்பான உண்மை வெளிக்கொணரப்பட வேண்டுமெனக் கோருகின்றேன். இதுபோன்ற செயற்பாடே நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தும். கிருசாந்தி கொலை வழக்கின் மூலம் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்தது. அக்கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியான ராஜபக்ஷ தான் உண்மைகளை கூறப்போவதாக அப்போது கூறியிருந்தார். தற்போது அக்குற்றவாளி எங்கு இருக்கிறார் என்று தெரியாது.

முன்னர் செம்மணி புதைகுழியையும் அரசாங்கம் மறுத்தது. பின் உண்மை வெளி வந்தது. இந்நிலையில் திருக்கேதீஸ்வர புதைகுழி விவகாரத்தையும் அரசாங்கம் மறுக்கின்றது. மேலும், புலிகள் இல்லாத இந்த நேரத்தில் விதுஷிகா மற்றும் அவரது தாயின் கைதைத் தொடர்ந்து குடும்பங்கள் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் மூலம் வடகிழக்கில் இராணுவ உச்ச நிலையை பறைசாற்றிக் காட்டுகின்றது. இந்தநிலையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் பூகோள வரைபடத்தின் இலங்கையின் அமைவிடம் என்பது மாற்றியமைக்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

No comments:

Post a Comment