ஊடக இல்லம்:- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சந்தித்தபோது எவ்வாறு இருந்தது?
புகழேந்தி:- உலக நாடுகள் எல்லாம் வியக்கும் அளவிற்கு ஒரு படையை நடத்தும் தகுதி,
சர்வதேசத்தில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் வியக்கும் அளவிற்கு அந்த மனிதனுக்கு இருந்த அரசியல் அறிவு, வரலாற்று அறிவு, எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றில் நான் படிச்சிருக்கிறேன். நான் காந்தியை மிகவும் நேசிப்பவன். அதற்காக என்னை விமர்சிப்பார்கள். எல்லாரிடமும் நிறைகுறைகள் இருக்கும். காந்தியிடமும் ஏதாவது இருந்திருக்கலாம். ஆனால், மக்களைத் திரட்டி எப்படிப் போராடவேண்டும் என்பதை முழுக்கத் தெரிந்துவைத்திருந்த ஒரு தலைவனாகக் காந்தி இருந்தார். காந்தியுடைய அடிப்படைப் பலம் என்பது அவருடைய நகைச்சுவை உணர்வு. எதையும் இலகுவாக ஒருவார்த்தையில் மாற்றிவிடுவார். அவர் இலண்டனுக்கு வந்தபோது, அரைநிர்வாணக் கோலத்தில் வந்தாரு. ஆனால், ராஜாவை முழு உடை அணிந்து தான் சந்திக்கவேண்டும். அவர் சந்திக்கவந்திருக்கிறார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், ராஜவை சந்திக்கவும் நீங்கள் இப்படியேதான் போவீர்களா என்று. அதற்கு காந்தி சொன்னார், எனக்கும் சேர்த்துத்தான் உங்கள் ராஜா உடைபோட்டிருக்கிறார் என்று. காந்திக்கும் பிரபாகரனுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் இங்கு பதிவு செய்யவிரும்புகின்றேன்.
1942 அன்று பாம்பேய் கொங்கிரசில், நடுராத்திரி 12 மணிக்கு காந்தி சொன்னார் ‘செய் அல்லது செத்துமடி’ என்று. அதையே பிரபாகரன் சொன்னால் தவறா? எந்தப் போராட்டத்திலும் அப்படித்தான் ஒரு முடிவை எடுக்கமுடியும். ‘செய் அல்லது செத்துமடி’ என்று பிரபாகரன் தன்னுடைய தோழர்களுக்குச் சொன்னார் என்றால், மற்றவர்களுக்கு அதாவது ஊருக்கு உபதேசம் சொல்லிவிட்டுப் போயிற்றாரா? தன்னுடைய குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளை இழந்தவர் தலைவன். வீட்டுக்கு ஒரு பிள்ளையை அனுப்பும்படி கேட்டவர், அவருடைய வீட்டில் இரண்டு பிள்ளைகள் மாவீரர் ஆனவர்கள். ஆக, காந்தி 1942 இல் என்ன சொன்னாரோ அதைத்தான் பிரபாகரன் இன்று சொன்னாரு.
காந்திக்கு இருந்த நகைச்சுவை உணர்வு பிரபாகரனுக்கு அப்படியே அச்சு அசலாக இருந்தது. அதனைப் பலசந்தர்ப்பங்களில் அவருடன் பழகிய பலர் உணர்ந்திருக்கிறார்கள். நானும் அதனை நேரில் பார்த்தபோது வியந்து போயிருக்கின்றேன். அவர் மிகவும் இயல்பான தலைவராக, ஓர் எளிமையான தலைவராக இருந்தார். உள்ளே போகும்போது, மக்களிடையே குறிப்பாக சகோதரிகளிடையே ‘எங்கள் அண்ணை’ என்று சொல்லும்போது அதில் நூறுவீத ‘உண்மை’ இருந்தது. அதேபோல அந்தச் சகோதரிகளை என்னுடைய பிள்ளைகள் என்று பிரபாகரன் சொன்னபோது, உண்மையாகவே அந்த மனிதன் அந்தப் பிள்ளைகளைத் தனது சொந்தப் பிள்ளைகளாகப் பாவிக்கின்றார். ஒவ்வொரு பிள்ளைகளையும் ஒரு துவாரகாவாகப் பார்க்கின்றார் என்பதை என்னால் உணரமுடிந்தது.
பிரபாகரனின் பொய்மையற்ற விழிகளை உற்றுநோக்கியபோது, பொய்யுடைய சாயலே கிடையாது. எது சொன்னாலும் உடனடிப் பதில், அதுதான் பிரபாகரன். யோசித்து மறைத்துச்சொல்ல வேண்டிய கள்ளத்தனம் அந்தக் கண்களில் இல்லை. பிரபாகரனின் விழிகளைப் பாருங்கள். அந்த விழிகளில் உள்ள ஒளிமட்டும் இல்லை. அதில் உண்மையின் ஒளியும் சேர்ந்து இருக்கும். அதுதான் பிரபாகரன்.
பிரபாகரனைச் சந்திக்கக் கிடைத்தமை வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. ‘காற்றுக்கென்னவேலி’ படத்தின் பாகம் இரண்டு எடுக்கவேண்டும் என்று பிரபாவே சொல்வார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. அதன்பின்னர் தமிழ்ச்செல்வன் சொன்னார். நீங்கள் இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறீர்கள் என்று அண்ணன் கேட்கிறார். ஏன் வைத்திருக்கிறீர்கள் என்றார். பிரபாகரன் என்பவர் எப்படிப்பட்ட இரசிகர். எப்படிப்பட்ட ஒரு மனிதர், எப்படிப்பட்ட தலைவர் என்று பல்வேறு கோணங்களில் ஆராயும்போது அப்படிப்பட்ட ஒரு மனிதன் எங்களுக்குக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். இன்று எம் இனத்துக்கு எனக்கு தமிழ் நாட்டுக்கு ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு ஓர் அடையாளம் இருக்கின்றது என்றால் அந்த அடையாளம் பிரபாகரன்தான். அந்த அடையாளத்தை ரில் சந்தித்த உணர்வு இப்போது கூட என்னை நெகிழச்செய்கின்றது.
ஊடக இல்லம்:- ‘உச்சிதனை முகர்ந்தால்’, ‘காற்றுக் கென்னவேலி’ திரைப்படங்களின் வரிசையில் உங்கள் அடுத்த படம் பற்றி?
புகழேந்தி:- காற்றுக்கென்ன வேலி அரசாங்கத்தால் புலிகளின் படம் என்று தடைசெய்யப்பட்ட படம். புலிகள் போன்ற ஒரு பயங்கரவாத இயக்கத்தை தடைசெய்யப்பட்ட இயக்கத்தை இந்தப்படம் ஆதரிப்பதாக அவர்கள் சொன்னார்கள். மற்றும் வேறு அபத்தமான குற்றச்சாட்டுக்களை எல்லாம் முன்வைத்தார்கள். கதாநாயகிக்கு ஏன் மணிமேகலை என்று பெயர் வைத்தாய்? என்றெல்லாம் கேட்டாங்கள். இந்தப் படம் வெளிவந்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு பாதிக்கும் என்றார்கள். நாங்கள் இதற்கு திருப்பி விவாதித்தால், இந்தப்படம் வெறும் 13 ஆயிரம் அடி நீளம் கொண்டது. ஒரு 13 ஆயிரம் அடி நீளமான சினிமாவால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு பாதிக்கப்படுமா? அந்த உறவு அவ்வளவு பலவீனமானது என்று தானே அர்த்தம். முதலில் அதை சரிபண்ணட்டும். அதற்குப் பின்னர் எங்கள் படத்தை சரிபண்ணலாம். ஒருவாறு படத்துக்கு அனுமதி வாங்கினோம். பின்னர் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, இந்தப் படத்துக்கும் புலிகளுக்கும் என்னையா சம்பந்தம் என்று நீதிமன்றம் கேட்டது. இந்தப் படம் போற்றுவது மனிதநேயத்தை என்று நீதிமன்றம் சொன்னது. நீதிமன்ற உத்தரவோடு படத்தை வெளியிட்டோம். அதுக்குப் பின்னர்தான் தெரியும் அது இனப்பிரச்சினையால பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி புனிதவதி பற்றிய கதை என்று. எப்படி அவர் கும்பல்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை காட்சிப்படுத்தாமலே படம் பண்ணினோம். ஏனென்றால் எனக்கு அது நோக்கமல்ல. அதைக் காட்சிப்படுத்தவில்லை என்று என்னுடைய சக இயக்குநர் ஒருவர் வருத்தப்பட்டார். முதலே நீங்கள் படத்தைக் காட்டியிருந்தால் நான் சொல்லியிருப்பேன் என்றார். நீங்கள் காட்சியைப் புகுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். எப்படிச் சொல்லியிருக்கமுடியும்? அந்தப் 13 வயதுப் புனிதவதி என்குழந்தை. என்குழந்தையை எப்படி ஆபாசமாகக் காட்டமுடியும். ஆனால் அந்தச் சம்பவத்தைப் பட்டும்படாமலும் சொன்னேன். அந்தச்சம்பவத்தின் பின்விளைவுகளைப் பற்றிய படம். எனக்குக் காசுபணம் பண்ற நோக்கம் இல்லை. இப்போ ‘கடற்குதிரைகள்’ என்ற படம் பண்றேன். இது 5 கடற்குதிரைகள் பற்றிய படம். அந்த 5 கடற்குதிரைகளும் யார் யார் என்றால், இடிந்தகரை தென் தமிழ் நாட்டின் முலையில் இருக்கு. அதற்குப் பக்கத்தில் ஓர் அணு உலை கட்டியிருக்கிறாங்கள். அந்த இடிந்த கரைக்குப் பக்கத்தில் இருக்கின்ற விசப் வீதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள் 5 பேர். அவர்கள் 5 பேரும் கடல் ஓரத்தில் பிறந்து, கடல் ஓரத்தில் வளர்ந்து, கடலிலேயே ஊறிய கடற்குதிரைகள். இந்தக் கடற்குதிரைகளின் சிறப்பு என்னவென்றால் 5 கடற்குதிரைகளில் ஒரு கடற்குதிரை எப்படி ஈழத்தில் இருந்து இடிந்த கரைக்கு வந்து சேர்ந்தது என்பதுதான் கதையுடைய மையப்புள்ளி. அந்தக்குழந்தை பெயருதான் கிருசாந்தி குமாரசாமி. மற்றும் யோசெப்பின் சிறியபுசுப்பம், அருள்நேசு எலிசெத்ராணி, கனிமொழி கண்ணதாசன், ஆயிசா அபூபக்கர் ஆகியோரே அந்தக் கடற்குதிரைகள். அந்த 5 பேரும் உயர்தர வகுப்பு மாணவிகள். கிருசாந்தி குமாரசாமி எப்படி ஈழத்தில் இருந்து வந்தார் என்பது கதையின் பின்புலம். அதனால் அவருக்கு இப்போது என்ன பிரச்சினை வருகிறது. அதில் இருந்து எப்படி மீள்கின்றார் என்பது கதை. முழுக்க முழுக்க இளைஞர்கள் சம்பந்தப்பட்ட கதை. 5 குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகன், கதாநாயகி இருந்தாலும் குறித்த 5 பேரும் முக்கியமாக இருப்பார்கள். கிருசாந்தி குமாரசுவாமியுடைய பாத்திரம் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களின் மன உணர்வைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
(அடுத்தவாரம் ஓர் ஆச்சரியத் தகவலுடன்)
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment