April 10, 2014

ஆஸியில் தமிழ் இளைஞர் தீக்குளித்து ‘கோமா’ நிலை : புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சம்பவம் !

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது.

சிட்னியில் பால்மெயின் என்ற இடத்தில் பணி புரியும் 20 வயதான இந்த தமிழர்,  பணிபுரியும் இடத்திற்கு வெளியில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டதுடன் பின்னர் கொன்கோர்ட் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் 98 வீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் இரண்டு முறை தோல் சத்திரச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
தீக்காயங்களுக்கு உள்ளானவரின், 65 வயதான தாய் மற்றும் அவரது சகோதரரை உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவர்கள் அவரது நண்பர்களிடம் கூறியுள்ளதாக தமிழ் அகதிகள் சபை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் குறித்து தீ மூட்டிக்கொண்டவரின் நண்பரான பாலசிங்கம் பிரபாகரன் கூறுகையில்,
தீ மூட்டிக் கொண்டவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் பாதுகாப்பு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டு குடிவரவு திணைக்களம் அனுப்பியிருந்த கடிதம் அவருக்கு கிடைத்திருந்ததாகவும் கூறினார்.
நாட்டில் அதிகாரிகளிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவந்த அவர் குறைந்தது 18 மாதங்களாக இணைப்பு வீசாவில் வாசித்து வந்தார்.
இலங்கைக்கு அவர் திருப்பி அனுப்பி வைக்கப்படலாம் என்ற உண்மையான அச்சம் இருப்பதாக அவர் என்னிடம் கூறியிருந்தார் எனவும் பிரபாகரன் குறிப்பிட்டார்.
கடிதம் கிடைத்ததில் இருந்து வெறுப்படைந்து காணப்பட்ட தீ மூட்டிக்கொண்ட நபர், தொழில் நிறுவனத்தில் இரவு 8.30 அளவில் பணி நிறைவடைந்த பின்னர், வெளியில் சென்றதுடன் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டதாக அவருடன் பணி புரியும் நண்பர்கள் குறிப்பிட்டனர்.
தீ மூட்டிக் கொண்டவரின் பையில் இருந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கடிதம், தற்கொலை செய்து கொள்வற்கான காரணத்தை தெரியப்படுத்தும் இரண்டு பக்களை கொண்ட கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரண் மயில்வாகனம், இந்த சோக சம்பவம் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான கொள்கையானது புகலிடம் கோரும் சமூகங்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளமையை நிரூபித்துள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment