August 11, 2016

முன்னாள் போராளிகள் மர்மச் சாவு! சர்வதேச விசாரணையே அவசியம்!

முன்னாள் போராளிகள் மர்மமாக உயிரிழக்கின்றமை குறித்து உண்மையைக் கண்டறிய சர்வதேச விசாரணை தேவை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.


அந்த கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரின் இறுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதி வரை சமார் 11,000 போராளிகள் அரச படையிடம் சரணடைந்தார்கள்.

வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன், அவர் மனைவி உட்பட நூற்றுக்கணக்கானோர் வதைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பதும் பல்வேறு விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனந்தி சசிதரன் முன்னிலையில் ஒரு பாதிரியாருடன் சரணடையச் சென்ற தளபதி எழிலன் முதலானவர்கள் அதன் பிறகு காணாமல் போய் விட்டார்கள்.

காணாமகள் போனவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்று தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தவிர ஏனையவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களிலும் முக்கியமான சில போராளிகள் பிறகு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டர்கள்.

சிறைக் காவலிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் ஆண்டுக்கணக்கில் இருந்த பின் விடுதலை செய்யப்பட்ட போராளிகள் பலர் கடந்த சில காலமாய் அடுத்தடுத்து உயிரிழக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி தனது 43ஆம் வயதில் புற்று நோயால் உயிரிழந்தார்.

அவர் மூன்றாண்டு காலம் சிறையிலும் ஓராண்டு காலம் புனர்வாழ்வு முகாமிலும் இருந்து விடுதலையானவர்.

சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்து வெளியே வந்த பின் புற்று நோயால், அல்லது இனம் புரியாத வேறு நோயால் இறந்து போன 99ஆவது போராளி தமிழினி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினிக்குப் பிறகும், முன்னாள் போராளி சசிகுமார் ராகுலன், தமிழ் ஆசிரியை தம்பிராஜா சரசஸ்வதி ஆகியோர் ஒரே நாளில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி உயிரிழந்தனர்.

இவ்வகையில் உயரிழந்த முன்னாள் போராளிகளின் தொகை 103ஐத் தொட்டு விட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசியுள்ளனர்.

எனினும், இதற்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்புத் இராஜாங்க மைச்ச்சர் ருவான் விஜயவர்த்தனா இதற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் இந்தச் உயிரிழப்பு தொடர்பாக சர்வதேச நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இவ்வகையில் இது வரை 103 பேர் இறந்திருப்பது பாரதூரமான செய்தி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறிய பிறகும் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

இது வரை 109 முன்னாள் போராளிகள் இவ்வாறு ஐயத்துக்கிடமான முறையில் இறந்துள்ளனர் என்று நம்பகமான செய்தி கிடைத்துள்ளது. இதற்கு மேல் யாரும் இவ்வகையில் சாகாத படி அவசரமான உயர்தர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

இலங்கை அரசே இவ்வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்பதால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அதனிடமே விட்டு விடலாகாது. சர்வதேசத்தின் தலையீடு அவசரமாகத் தேவைப்படுகிறது.

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் மனித உரிமை மன்றத்துக்கு அளித்த அறிக்கையில் இலங்கை அரசின் உள்நாட்டு நீதிப் பொறிகுறை என்ற முன்மொழிவைத் திட்டவட்டமாக மறுதலித்து விட்டார் என்பதை நினைவிற்கொள்க!

இவ்வகையில் மனித உரிமை மன்றத்துக்கும் அதன் உயர் ஆணையர்க்கும், 2015 அக்டோபரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய நாடுகளுக்கும் இவ்வகையில் தனிப் பொறுப்பு இருப்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment