August 24, 2016

நல்லூர் உற்சவம்! விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

சிங்கள மக்கள் பெரஹரவை எவ்விதம் தமது தேசிய நிகழ்ச்சியாகக் கருதிப் போற்றுகின்றார்களோ அதேபோல் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழாவை ஈழத்தமிழ் மக்கள் போற்றி வருகின்றனர்.


இத்தகைய புனிதமான நன்னாளில் ஏனைய மக்கள் கூடுவதோடு, யாழ். மாவட்ட மக்கள் முழுமையாக அணி திரண்டு முருகப் பெருமானை வழிபட்டு அருள்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனங்களை அன்றைய தினம் மூடி விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், வடமாகாண அவைத் தலைவர் ஆகியோரிடம் யாழ். மாவட்ட இந்துசமயப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்துசமயப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் இரதோற்சவம் எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தத் தினத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் மத வேறுபாடு இன்றி முருகப் பெருமானை வழிபட்டு வருவது வரலாற்றுக் காலம் தொட்டு நீடித்து வரும் மரபு.

அந்நியர் ஆட்சிக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் இந்த ஆலயத்தில் தங்கி வழிபடுவதாக அப்போதைய அரசாங்க அதிபர் அறிக்கை வெளியிட்டமையை இந்நேரத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment