August 23, 2016

காணாமல்போனோர் அலுவலகத்தினால் தீர்வு கிடைக்காது- மக்கள் அவநம்பிக்கை!

ஸ்ரீலங்கா அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் மகிழ்சி வெளியிட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் குறித்த அலுவலகத்தினால் தமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளதாக அலுவலகம் உட்பட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறிந்த அரசாங்கத்தின் விசேட செயலணி தெரிவித்துள்ளது.


பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் தமக்குரிய பொறுப்பை உதாசீனம் செய்தமையே இந்த நிலமைக்குப் பிரதான காரணம் என்றும் குறித்த செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முது்தெட்டுவேகம தலைமையிலான 11 அடங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறியும் செயலணி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் அமர்வுகளை நடாத்தி மக்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த செயலணி, பல தசாப்தகாலமாக தொடரும் காணாமல்போகச் செய்யும் சம்பவங்களை பாரதூரமான குற்றச்செயலாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளமையை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மக்களை அச்சுறுத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் காணாமல் போகச் செய்யும் சம்பவங்களை பாரதூரமான குற்றச்செயலாக அறிவிக்கப்படடாமை அரசாங்கத்திற்கு இவற்றை தடுப்பதற்கான தேவை இன்மையையே கோடிட்டுக்காட்டுவதாக குறித்த செயலணி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் காணாமல்போனோர் அலுவலகம் ஊடாக யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாது என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகத் தெளிவாக குறித்த அலுவலக சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட தினம் நாடாளுமன்றில் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் காணாமல்போனோரின் உறவினர்கள், காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை உள்வாங்காது அரசாங்கம் குறித்த அலுவலகத்தை அமைத்துள்ளமை தொடர்பில் மக்கள் கருத்தறியும் செயலணி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் நடாத்திய அமர்வுகளில் அதிகளவில் பங்குபற்றி தமது நிலைப்பாடுகளை கூறியிருந்ததாகவும் செயலணி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்மூலம் காணாமல்போனோரின் அலுவலகத்தினால் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தும் இவ்வாறான நடவடிக்கைகளால் ஏதாவது ஒன்று கிடைத்துவிடும் என்ற சிறிய நம்பிக்கை கொண்டிருப்பதையும் காணக்கிடைத்ததாக மனோரி முத்தெட்டுவேகம செயலணி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment