August 10, 2016

8 வருடங்கள் கடந்து புலிகளின் யுத்த தந்திரோபாயங்களை ஆராயும் அமெரிக்க உளவுத்துறை???

புலிகள் மீள் உருவாக்கம் என்ற அச்சம் காரணமா??? 8 வருடங்கள் கடந்து புலிகளின் யுத்த தந்திரோபாயங்களை ஆராயும் அமெரிக்க உளவுத்துறை!!! சிறிலங்காவில் நடந்த போரில் புலிகளின் யுத்த தந்திரோபயங்களை நுணுக்கமாக ஆய்வு செய்யும் அமெரிக்கா.



தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

1919ல் முடிவுற்ற முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு அதிலிருந்து தப்பிய இராணுவ வீரர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தற்போதும் முன்னணிப் போர் அரங்குகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கிய இராணுவப் பாடங்களாக உள்ளன.

1875ல், உள்நாட்டு யுத்த வீரர்களுக்கான அமையத்தை அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் வில்லியம் ரி.செர்மன் தனது கட்டளைத் தளபதி பதவி நிலையிலிருந்தவாறு மீளவும் வடிவமைத்தார். இவர் யப்பான், சீனா, இந்தியா, பேர்சியா, ரஸ்யா, இத்தாலி, ஜெர்மனி, ஒஸ்ரியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இராணுவங்களை அமெரிக்க இராணுவத்தினர் நேரடியாகச் சென்று பார்வையிடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.

இவர் இது தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதேபோன்று 1855ல், அமெரிக்க இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய றிச்சர்ட் டெலாபீல்ட், செவஸ்ரப்போல் மீதான கிறிமியா யுத்தத்தை நேரடியாகச் சென்று அவதானிப்பதற்கான குழுவொன்றுக்கு தலைமை தாங்கியதுடன், அமெரிக்காவின் இராணுவக் கல்லூரியான வெஸ்ற் பொய்ன்ரில் கண்காணிப்பாளராகப் பதவி வகித்த வேளையில் இது தொடர்பான தனது அனுபவங்களை அறிக்கையாக்கினார்.

முல்லைத்தீவில் கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட சண்டைப்படகு ஒன்றை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள்

படம் 1 :முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பசிலன் பீரங்கியை ஆய்வு செய்யும் அமெரிக்க அதிகாரி

படம்:2முல்லைத்தீவில் கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட சண்டைப்படகு ஒன்றை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள் .

படம்:3 யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்..

அமெரிக்கா யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் 150 தடவைகளுக்கு மேல் தனது இராணுவத்தினரை வேற்று நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்களைப் பார்வையிடுவதற்கும் அதிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கும் அனுப்பியிருந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த நடைமுறையின் அடிப்படையில், இவ்வாரம் அமெரிக்க இராணுவக் கல்லூரியின் கீழுள்ள நவீன போர் நிறுவகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் சிறிலங்காவில் கடந்த 2009ல் முடிவிற்கு வந்த மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தத்தை ஆராய்வதற்கும் அதிலிருந்து போரியல் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனும் சிறிலங்கா வந்துள்ளனர்.

அமெரிக்க இராணுவ வீரர்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் போரியல் அனுபவங்களை இவர்கள் ஒருபோதும் அறிந்திராதவையாக இருக்கலாம்.
உலக நாடுகளின் இராணுவங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் அவர்களது வரலாறு தொடர்பாக நூல்கள் மற்றும் உசாத்துணைகளின் ஊடாக மட்டும் நோக்கக் கூடாது எனவும் அவற்றை நேரடியாகத் தரிசிப்பதன் மூலம் எமக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே போரியல் தத்துவம் எடுத்துரைக்கிறது.

அண்மையில் ஏற்பட்டு வரும் நோய்களின் தாக்கங்களை இளம் வைத்தியர்கள் கற்றுணர்வது போலவும், சட்ட மாணவர்கள் நாளாந்தம் நடைபெறும் வழக்குகளைத் தொடர்ந்தும் அவதானிப்பது போலவும், இளநிலை இராணுவ அதிகாரிகளும் தற்போதைய உலக நாட்டு யுத்தங்களை ஆராய வேண்டும். கடந்த கால இராணுவ வரலாறு தற்போதும் இராணுவ வீரர்களை வழிநடத்துவதற்கான முக்கிய வழிகாட்டிகளாக உள்ளன.

 சேர் மைக்கேல் ஹொவார்ட் எழுதிய, ‘1961 கட்டுரை’ என்ற நூலில் போரின் போது ‘ஆழம், அகலம், பின்னணி’ போன்ற மூன்று முக்கிய காரணிகளைக் கருத்திற் கொள்ள வேண்டும் என இராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேபோன்று நவீன போரியல் தத்துவமானது, ‘மூலோபாயம், சமூகம் மற்றும் ஆளுமை’ ஆகிய மூன்று விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

யுத்தத்தின் மூலோபாயக் காரணத்தைப் புரிந்து கொள்வதென்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இதன் மூலம் அடிப்படைப் பிரச்சினைகள், நோக்கங்கள் தொடர்பான பதில்களை முன்வைக்கின்றன. பெற்றோலிய வளத்திற்கான யுத்தம், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான யுத்தம், அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான யுத்தம், தற்பாதுகாப்பற்றவர்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் என யுத்தத்தின் நோக்கங்கள் பல வகைப்படுகின்றன.

முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பசிலன் பீரங்கியை ஆய்வு செய்யும் அமெரிக்க அதிகாரிகள்
இந்த வகையில் சிறிலங்காவிற்குப் பயணம் செய்துள்ள அமெரிக்காவின் இராணுவக் கல்லூரியைச் சேர்ந்த இளநிலை இராணுவ வீரர்கள் உள்நாட்டு யுத்தத்தின் மூலோபாயக் காரணத்தை ஆராய்வார்கள்.

அத்துடன் இவர்கள் தந்திரோபாயத் தெரிவுகள், போர் முறைமைகள், இராஜதந்திர அணுகுமுறைகள், அரசியல் அவாக்கள், தொழிற்துறை வளர்ச்சி, நவீன ரக ஆயுதங்கள், தற்கொலைப்படை போன்ற பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்வார்கள். இதன்மூலம் அமெரிக்காவின் இளநிலை இராணுவ வீரர்கள் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை அறிவார்ந்த முறையில் நோக்க முடியும்.

இவ்வாறான யுத்தம் ஒன்றை இணையத்தின் ஊடாக வாசித்தறிவதென்பது அதன் உண்மையான தோற்றத்தை ஒருபோதும் உணர்த்தாது. போர் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று அதைப் பார்வையிடும் போது மட்டுமே அந்த யுத்தத்தின் உண்மையான முகத்தை அறியமுடியும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இழைத்த கொடுமைகள், ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு, வடகொரியாவின் அச்சுறுத்தல், சூடானில் இடம்பெறும் கொடுமைகள் போன்ற அனைத்தையும் அவற்றை நேரில் சென்று பார்வையிடுவதன் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அதாவது இராணுவத்தினர் குறித்த யுத்தத்தின் ‘தள உண்மையைக்’ கண்டறிய வேண்டும். அதுவே அவர்களுக்கு அதன் நோக்கத்தைத் தெளிவாகப் பயிற்றுவிக்கும்.

இவ்வாறானதொரு கற்றலைப் புறக்கணிக்கும் எந்தவொரு இராணுவமும் தனது எதிரியின் மனநிலை அல்லது செல்வாக்குச் செலுத்தும் சூழல் தொடர்பான முழுமையான காரணியைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தக் காரணிகள் மானுட, சமூக மற்றும் உளவியல் ரீதியாக நோக்கும் போது மட்டுமே போர் சார்ந்த மூலோபாயமானது முழுமை பெறுகிறது.

சிறிலங்காவிற்குப் பயணம் செய்துள்ள அமெரிக்காவின் இராணுவ அதிகாரிகள் அங்கு நடைபெற்ற யுத்தத்தின் தோற்றப்பாடு, நோக்கங்கள் மற்றும் அவை சார்ந்த கருத்துக்களை அதில் சம்பந்தப்பட்ட தமிழ்ப் புலிகளைச் சேர்ந்தவர்கள், அரசாங்கத் தரப்பினர் மற்றும் சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்வார்கள்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்.
அமெரிக்க இராணுவ வீரர்களின் சிறிலங்காவிற்கான பயணமானது இங்கு இடம்பெற்ற யுத்தத்திற்கான ஒரு சாளரமாக அமையும்.

அத்துடன் இது ஒரு கண்ணாடியாகவும் அமையும். போர் என்பது தனிப்பட்ட ரீதியாக மிகவும் நுணுகி ஆராய்ந்து அனுபவங்களைப் பெறும் போது மட்டுமே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். போரியலை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை நேரில் பார்த்திருக்க வேண்டும். இதற்கு இரக்கம் மற்றும் அனுதாபம் ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன.

சிரியாவில் இடம்பெற்ற அண்மைய யுத்தமானது வெடிபொருட்களின் மணம், மரங்களின் எரிந்த மணம், மனித உடலங்களின் துர்நாற்றம், குப்பைகளிலிருந்து எழுந்த துர்நாற்றம், அச்சம் எனப் பல்வேறு மணங்களையும் உணர்வுகளையும் கொண்டிருந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜனீன் டீ கியோவன்னி குறிப்பிட்டிருந்தார்.

இவர் பெற்றுக் கொண்ட பல்வேறு உணர்வுகள் மற்றும் மணங்களை சிறிலங்காவின் முன்னாள் யுத்த களத்தைத் தரிசிக்கும் அமெரிக்க இராணுவக் கல்லூரியின் நவீன போர் நிறுவகத்தைச் சேர்ந்த இளநிலை இராணுவ வீரர்களும் பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில் இவர்கள் புதிய பல யுத்தகளங்களில் பணியாற்றியுள்ளனர் என்ற வகையில் இவ்வாறான பல வகையான உணர்வுகளை சிறிலங்காவின் யுத்த களத்திலிருந்தும் இந்த வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

சிறிலங்காவில் நடந்து முடிந்த யுத்தத்தின் அனுபவங்களை அமெரிக்க வீரர்கள் நேரடியாகப் பார்வையிடும் போது, தற்போதும் கொழுந்து விட்டெரியும் யுத்த வடுக்கள் தொடர்பில் அவர்களது பார்வையை நாங்கள் சரிசெய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்த வீரர்கள் தமது சொந்த வாழ்வில் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளும் போது அவர்கள் பாரியதொரு ஆபத்தைச் சந்திப்பதற்கான வழியை நாமாகவே உருவாக்கியுள்ளோம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

யாழ்.படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க அதிகாரிகள் எடுத்துக் கொண்ட படம். மனிதாபிமானம் என்பது இவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்துப் போராடத் தூண்டுகிறது. இராணுவத் தொழில் என்பது இவர்களைத் தியாகிகள் ஆக்குகின்றது. இவ்வாறானதொரு உயர்ந்த விலையைக் கொடுக்கும் இராணுவ வீரர்கள் போதியளவான கல்வி அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

நல்வாய்ப்பாக, வெஸ்ற் பொயின்ற் பழைய, சிறந்த வழிமுறையை நினைவுபடுத்துகிறது. 1919ல் வெஸ்ற் பொயின்ற்றிலிருந்து வெளியேறிய இளநிலை இராணுவ வீரர்கள் முதலாம் உலக யுத்தத்தின் அனுபவங்களைக் கற்றிருந்தனர். இதேபோன்று 2019ல் வெஸ்ற் பொயின்ற்றிலிருந்து வெளியேறும் அமெரிக்காவின் இளநிலை இராணுவ வீரர்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திலிருந்து பாடங்களைக் கற்று வெளியேறுவார்கள்.

1919ல் அமெரிக்க இராணுவப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறிய வீரர்களுள் ஒருவரான ஜெனரல் அல்பேட் சி.விடேமயர், இரண்டாம் உலக யுத்தத்தின் ‘வெற்றித் திட்டம்’ என்கின்ற நூலின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். சீனாவில் இடம்பெற்ற யப்பானியர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு கட்டளை வழங்கும் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட டக்ளஸ் மக்ஆர்தர் எழுதிய விடயங்கள் இன்றும் அமெரிக்க இராணுவத்திற்கு நல்லதொரு பயனை அளிக்கின்றது.
அதாவது ‘தற்கால யுத்த முனைகளை நேரடியாகத் தரிசித்து அவற்றை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தில் வேறு களமுனைகளில் வெற்றி என்கின்ற பழங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வித்துக்களாக இருக்கும்’ என்பதே டக்ளஸ் மக்ஆர்தரின் கருத்தாகும்.

1919ல், அவர்கள் நவீன யுத்தத்தை ஆராய்ந்தார்கள், அதன் மூலோபாயத்தை, சமூகங்களை நுணுகி ஆராய்ந்தார்கள். இவர்கள் இதனைத் தன்னார்வத்துடன் ஆராய்ந்தனர். இதனால் அவர்கள் தேவைப்பட்ட வேளைகளில் இவற்றைப் பயன்படுத்தி யுத்தத்தை வெற்றி கொண்டார்கள். 2019ல் அமெரிக்க இராணுவக் கல்லூரியிலிருந்து வெளியேறும் வீரர்களும் இதனையே செய்வார்கள்.



No comments:

Post a Comment