August 11, 2016

வித்தியா படுகொலை வழக்கு! சந்தேக நபர்களின் விளக்கமறியல் 3 மாதத்திற்கு நீடிப்பு!

வித்தியா படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், 3 மாதத்திற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் மரண விசாரணைகள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு ஆராய்ப்பட்டு வருவதாகவும் அரச சட்டத்தரணி யாழ். மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.இதன்போது, சந்தேக நபர்கள் 9 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேகநபர்களுக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் பாரதூரத்தினை கருத்திற்கொண்டு பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா படுகொலை:சந்தேகநபர்கள் சற்று முன் நீதிமன்றத்தில் ஆஜர்!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களும் சற்று முன்னர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்ற போது கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருட காலமாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூன்று மாதங்கள் வரை சந்தேகநபர்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு காலநீடிப்புச் செய்து மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

இன்றுடன் காலநீடிப்பு முடிவுக்கு வருகின்ற நிலையில் தொடர்ந்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்துவதற்கான அனுமதியை பெறும் பொருட்டு இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment