August 23, 2016

மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி கடற்படைக்கு வழங்கும் நடவடிக்கை திர்ப்பினால் கைவிடப்பட்டது!

மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியினை நில அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இன்று(23) செவ்வாய்க்கிழமை பள்ளிமுனை கிராம மக்களின் ஒருமித்த எதிர்ப்பின் மத்தியில் கைவிடப்பட்டுள்ளது.


நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று(23) செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை அளவீடு செய்து வைப்பதற்காக வருகை தந்த போது கிராம மக்கள் குறித்த அதிகாரிகளை கடற்படையினர் நிலை கொண்டுள்ள குறித்த 25 வீட்டுத்திட்ட காணிக்குள் உற்செல்ல அனுமதிக்காது வீதியில் நிறுத்தி அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இதன் போது மக்களின் சார்பாக வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதி நிதிகள்,நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் அந்தோனி சகாயம்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நில அளவைத் திணைக்களத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

மேலும் தமிழ் தேசயக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குறித்த காணி நில அளவீட்டை நிறுத்தக்கோரி   உரிய   அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மேலும் கடற்படையினர் முகாம் அமைத்துள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியில் வாழ்ந்து வந்த 19 குடும்பங்களின் பிரதிநிதிகள் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு,தமது நிலை குறித்தும் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த காணிகள் இன்று(23) செவ்வாய்க்கிழமை நில அளவீடு செய்யப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்த நிலையில் நோற்று(22) திங்கட்கிழமை இக்கிராம மக்களின் பிரதி நிதிகள் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்று மன்னார் பிரதேச செயலாளரிடம் உரையாடினர்.

குறிப்பாக குறித்த காணியினை நில அளவை செய்ய இருப்பதாகவும் எனவே குறித்த காணி தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.


எனவே தீர்ப்பு கிடைக்கும் வரை நில அளவீடு செய்ய வேண்டாம் என தெரிவித்தோம்.இவ்விடையம் தொடர்பில் கடிதம் ஒன்றையும் வழங்கினோம்.இந்த நிலையில் எமது முறைப்பாடுகளையும் மீறி இன்று (23) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு குறித்த 25 வீட்டு திட்ட காணியை அளவீடு செய்ய வந்தனர்.

இந்த நிலையிலே கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

-மக்களின் எதிர்பபையடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் உடனடியாக தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் குறித்த காணிகள் அளவீடும் செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டதோடு நீதிமன்ற உத்தரவைப்பெற்றுக்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணி அளவீடு செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.-இதன் போது பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட கிராம மக்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றையும் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர்.

குறித்த பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியில் கடந்த 1956 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் வாழ்ந்து வந்தனர்.


1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் சுமார் 25 வருடங்களாக தற்போது வரை குறித்த காணி அரச கட்டுப்பட்டில் உள்ளது.

தற்போது கடற்படையின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
-குறித்த காணி தொடர்பாக கடந்த 11.02.2013 அன்று மன்னார் நீதீமன்றத்தில் குறித்த காணியின் உரிமையாளர்களினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.19 வழக்குகள் தாக்கள் செய்யப்பட்டுள்ளது.
இது வரை 21 வழக்கு விசாரனைகள் இடம் பெற்றுள்ளது.22 ஆவது வழக்கு விசாரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையிலே நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கும் முன் குறித்த காணி நில அளவை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment