July 29, 2016

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு!

மறைந்த சமூக சேவகி அன்னை தெரசாவுக்கு இத்தாலியில் நடைபெறவுள்ள புனிதர் பட்டம் சூட்டும் விழாவில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்பார் என தெரியவந்துள்ளது.


மறைந்த அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர் பட்டத்துக்கு ஒப்புதல் வழங்கும் வாடிகன் குழு ஆலோசனை நடத்தியது.

அன்னை தெரசா உள்பட 5 பேர் பெயர், புனிதர் பட்டத்துக்கான பரிசீலனை செய்யப்பட்டது.

இதையடுத்து, அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்க போப் ஒப்புதல் அளித்தார். அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவை கொல்கத்தாவில் நடத்த வேண்டும் என்றும், அதற்காக போப் ஆண்டவர் கொல்கத்தாவுக்கு வர வேண்டும் என்றும் இந்திய கத்தோலிக்க திருச்சபை ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 4-ம் தேதி இத்தாலியில் உள்ள வாட்டிகன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியாவில் இருந்து செல்லும் குழுவினர் பங்கேற்பார்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ள அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டத்துக்கு முந்தைய அந்தஸ்து, கடந்த 2003-ம் ஆண்டு அளிக்கப்பட்டது.

அவருக்கு கடந்த 1979-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment