July 29, 2016

சரியாக ஆட்சி செய்திருந்தால் கால்கள் தேய வேண்டி ஏற்பட்டிருக்காது! ; ஜனாதிபதி!

முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

அதிகார மோகம் படைத்த ஒருசிலர் தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்ற போதும் அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமையுடனும் நடவடிக்கை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுகின்றது.

ஒன்பது லட்சம் கோடி ரூபா கடன் சுமையினால் இன்று எமது நாடு அவதிப்படுகின்றது, கடந்த அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பற்றி மார் தட்டிக்கொண்டு தாங்க முடியாத கடன் சுமைக்கு நாட்டை இட்டுச்சென்ற போதும் இக்கடன் சுமையினை புதிய அரசாங்கத்தினால் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து மீண்டுமொரு ஆட்சியைக் கோரி இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்வதற்கான தேவை தனக்கு ஏற்படாதெனத் தெரிவித்த ஜனாதிபதி, தனது பதவிக்காலத்தில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார்.

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 பிரிவெனாக்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு கணனி இயந்திரங்களை வழங்கும் பொருட்டு இவ்வைபவம் இடம்பெற்றது.

சர்வமதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மதத் தலைவர்களுக்கு கணனிகள் வழங்கி வைக்கும் அடையாளமாக ஜனாதிபதியினால் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர்களான கபீர் ஹசீம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ரவுப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment