July 17, 2016

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களமயமாகும் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தம் இன்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள மயமாக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. இவற்றை கேட்கவேண்டிய அதிகாரிகள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியல் வாதிகள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறு 127 கிராம சேவகர்கள் பிரிவினையும் , 115 ,024 மக்களையும் உள்ளடக்கிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இம் மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி நிலங்களை சிங்களம் விழுங்கி விட்டது.
இம் மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து தமிழ்மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வளம் மிக்க பகுதிகளென சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் 1980ம் ஆண்டிற்கு முன்பு அபகரிக்கப்பட்டு 6 கிராமசேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இம் மாவட்டத்தின் ஆறாவது பிரதேச செயலாளர் பிரிவாக நிர்வகிக்கப்படுகின்றது. இந்த ஆறாவதாக உருவாக்கப்பட்ட பிரதேச செயலகமானது முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் சுற்றுநிருபம் மட்டுமே உள்ளபோதும் இப் பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இயங்குமென எந்தவித வர்த்தகமாணி அறிவித்தலும் கிடையாது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட உத்தியோக பற்றுஅற்ற சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் இன்று 9 ஆயிரத்து 560. சிங்கள மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வாய்ப்புக்களிற்காக தமிழ்மக்களின் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு மூவாயிரம் ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு டொலர்பாம் , கென்பாம் என்ற மிகப்பெரும் இரு பண்ணைகள் உருவாக்கப்பட்டு இவர்களிற்கான தொழில் மையங்களும் உருவாக்கப்பட்டன.
ஆனால் இன்று இப்பிரதேசங்கள் மிகவும் வளர்ச்சி கண்டு உட்கட்டுமான வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டு பாடசாலைகள் முதல் , சந்தை வாய்ப்புக்கள் வரையும் முல்லைத்தீவு நகரத்தினையும் மிஞ்சி நிக்கின்றது.
இதன் பிற்பாடு இறுதி யுத்த காலத்திலும் இதனை அண்டிய பகுதிகள் மற்றும் ஒதியமலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்களாக மேலும் 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் வனப்பகுதிகளாக இருந்த இம் மாவட்டத்தின் இதன் எல்லைப்புறங்களும் அளவு கணக்கு தெரியாமாலே அபகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் டொலர்பாம் , கென்பாம் எனவும் வெலிஓயா எனவும் ஒரு பெரும்பகுதியை ஏப்பம் விட்ட சிங்கள பூதம் தற்போது கொக்குளாய் , கொக்குத்தொடுவாயில் ஒருபகுதி நிலமும் இங்கே செல்லும் வீதியோரம் உள்ள காடுகளில் வீதியோரம் காடுகளை பார்வைக்கு விட்டபின்பு சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் புற்று நோய் உள்ளிருந்தே கொள்வதைப்போல் பாரிய குடியிருப்புக்களை அமைத்துள்ளனர்.
இதேபோன்று அம்பகாம்ம் இரணைமடு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகளையும் வயல்களையும் ஆக்கிரமித்துள்ள இராணுவம் குளங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இரணைமடு அம்பகாம்ம் பகுதிகளில் மட்டும் நான்கு குளங்கள் இன்றுவரை படையினரின் முற்றுகைக்குள் உள்ளது. இதில்தே மட்டும் 8 ஆயிரம் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் அம்பகாம்ம் , புலிமச்சி நாதகுளம் , கூழாமுறிப்பு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையிலேயே குறித்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் மக்களின் வாழ்வாதார வயல் ஏக்கர் பல ஆயிரம் ஏக்கர் உண்டு. இவ்வயல்களையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்த சுமார் 1500 குடும்பங்கள் இன்றுவரை அடுத்தவர் தயவை நம்பி வாழும் நிலையில் உள்ளனர்.
இவற்றினை விடவும் விஸ்வமடு , தர்மரம் , கேப்பாபுலவு , கோம்பாவில் , வட்டுவாகல் உள்ளிட்ட இடங்களில் பாரிய பிரதேசங்களும் ஏனைய இடங்கள் பலவற்றில் சிறு சிறு துண்டுகளாகவென மொத்தம் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை சிங்களப்படைகள் ஆக்கிரமித்து முழுமையாக சுறுட்டிவைத்துள்ளனர். இவற்றிற்கு அப்பால். மகாவலி எல் வலயம் என இன்னொரு பகுதியும் பறிபோய்வண்ணமே உள்ளது.
இவை அனைத்தையும் போன்று ஏ9 வீதியில் இரணைமடுச் சந்திக்கு அப்பால் முல்லைமாவட்டம் ஆரம்பிக்கும் பிரதேசத்தில் இருந்து கொக்காவில் பிரதேசமான சுமார் 7 கிலோமீற்றர் தொலைவு கொண்ட பகுதியில் வீதியின் முகப்பில் காடு அப்படியே காட்சியளிக்க புற்றுநோய் இங்கையும் ஆக்கிரமித்து விட்டது நீளம் ஏழு கிலோமீற்றர் எனின் அகலம் எத்தனை கிலோமீற்றர் என்பதனை வரையறுத்துக்கூற முடயாதவாறு காடு முழுமையாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதுடன் முறிகண்டி , வசந்தநகர் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களும் விரட்டப்பட்டு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் முறிகண்டிக்குளமும் இன்றுவரை படையினரின் அபகரிப்பிலேயே உள்ளது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் தமிழ்மக்கள் 2002ம் ஆண்டு சமாதான காலத்திலேயே புதிதாக வீடுகள் அமைத்து மீளக் குடியமர்ந்தவர்கள் . இவ்வாறு புதிதாக வீடுகளை அமைத்தவர்களின் சுமார் 150ற்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது படையினரின் பிடியில் உள்ளதால் இதன் உரிமையாளர்கள் சிதறுன்டுபோய் உள்ளனர்
இவர்களின் பல காணிகளின் அனுமதிப்பத்திரம் மட்டும் உரிமையாளர்களின் கைவசம் உண்டு. இதல் பல காணிகளை சுற்றி முட்கம்பிகள் அமைத்திருந்தாலும் சில இடங்கள் சூனியப்பிரதேசம்போல் கைவிட்டுள்ள படையினர் அதன் உரிமையாளர்களைமட்டும் வாழ்விடம் அமைக்க அனுமதிக்கவில்லை.
இவ்வாறு ஏ9 வீதியில. முறிகண்டி காட்டினை அண்டிய பகுதியின் பல ஆயிரம் காட்டினை அபகரித்துள்ள படையினரின் பயன்பாட்டிற்கென காட்டின் நடுவே நூற்றிற்கும் மேற்பட்ட முகாம்கள் சீனாவின் பொருத்து வீட்டின்மூலம் அமைக்கப்பட்டுள்ளதோடு பல தார் வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சகல விதமான வசதிவாய்ப்புக்களும் நடுக்காட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளிற்குள் ஒருபகுதி சிங்கள மக்களும் அடிக்கடி வந்து செல்கின்றனர் . இதனால். இங.கு சிங்களக் குடும்பங்களும் வந்து விட்டனவா ? என்ற பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது. இவ்வாறு சூழும் அச்சம் பெரும் அபாய எச்சரிக்கையாகவும் உள்ளது. நடுக்காட்டில் போதிய வசதி வாய்ப்பை உண்டுபன்னியுள்ளோர் பிரதான வீதிகளில் இருந்து இறங்கும் வீதிகளை மட்டும் கிரவல் கொண்டே அமைத்துள்ளனர். இவ்வாறு செல்லும் குறுக்கு வீதியில் ஓர் குறுக்கு வீதியானது முறிகண்டி குளத்தின் ஊடாகச் செல்வதனால் அக்குளத்தின் நீர் சற்றேனும் தேங்கிவிடக் கூடாது என்பதற்காகவே குளக்கன்டினை நடுவில் உடைத்து வெள்ள நீரை தமிழர்கள் குடியிருப்புக்குள் செலுத்தியுள்ளது இராணுவம்.
இவ்வாறு இடம்பெறும் சிங்கள மயமாக்கள் பகுதிகளிற்குள் நமிழர்கள் எட்டியும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக காட்டினைச் சுற்றி முட்கம்பி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றிற்கு அப்பால் வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 613 ஏக்கரினை கடற்படையினரும் அதன் அருகில். வான்படையினரால் சுமார் 180 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளதுபோல் இம் மாவட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலமான கேப்பாபுலவு கிராமத்தில் 700 ஏக்கர் நிலம் இன்றுவரை படையினரின் அபகரிப்பில் உண்டு. இங்கு வாழ்ந்த 313 குடும்பங்கள் அருகில் இருந்த காட்டுப்பகுதியல் அமைந்துள்ள மாதிரிக் கிராமத்தில் வாழ்கின்றனர்.
இவ்வாறு ஆண்டான் குளத்தில் 39 குடும்பங்களின் 94 ஏக்கரும் , திருக்கோணம்பட்டியில் 04 குடும்பங்களின் 26 ஏக்கர் நிலமும் , விண்ணகம் வயல்வெளியில் 3 குடும்பங்களின் 18 ஏக்கரும் , ஆத்தங்கடவைப் பிரதேசத்தில் 17 குடும்பங்களின் 124 ஏக்கர் நிலமும் படையினரிடம் உள்ளதோடு மருதடிக்குள வயல்வெளியில் 9 குடும்பங்களின் 48 ஏக்கர் நிலமும் , ஆலங்குளத்தில் 14 குடும்பங்களின் 74 ஏக்கர் நிலங்களும் படையினரின் அபகரிப்பிலேயே உள்ளது.
இதேபோன்று சாமிப்பில் கண்டலில் 26 குடும்பங்களின் 143 ஏக்கர் நிலமும் , ஈரக்கொழுந்தன் வெளியில் 8 குடும்பங்களிற்குச் சொந்தமான 71 ஏக்கரும் அபகரிக்கப்பட்டுள்ளதோடு படலைக்கல்லில் 7 குடும்பத்திற்கு உரித்தான 48 ஏக்கரும் , குந்தைகைக்குளத்தில் 24 குடும்பங்களின் 48 ஏக்கரும் , செம்மலை புளியமுனையில் 125 குடும்பங்களின் 276 ஏக்கர் நிலப்பரப்பும் படைவசமேயுள்ளது.
இவற்றினைப் போன்றே நீராவியடியில் 36 குடும்பங்களிற்குச் சொந்தமான 163 ஏக்கரும் , உலாத்து வெளியில் 15 ஏக்கருடன் , நீராவி வயலில் 20 ஏக்கர் வயல்நிலமும் , வட்டுவனில் 10 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி , பேச்சு சுதந்திரம் நிர்வாகச் சுதந்திரம் என மாயைக்காட்டும் இந்த சொல்லாட்சி அரசில் நல்லாட்சி என்ற போர்வையில் ஒரு மாவட்டமே விலைபேசி விற்பனை செய்யப்பட்ட வண்ணமுள்ளது
இதற்கும் அப்பால். ஓர் அரசியல் வாதியின் ஆசிர்வாத்த்துடன் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு மரங்கள் தென்னிலங்கைக்கு கடத்தப்படுவதோடு இன்னொரு பகுதியின் ஆசிர்வாத்த்துடன் தென்னிலங்கை மீனவர்களினால் இம் மாவட்டத்தின் கடற்கரையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுகின்றது
யுத்தகாலத்தில் யுத்தம் என்ற கண்ணுக்குத் தெரிந்த ஒரு எதிரியை துணிந்து எதிர்கொண்ட இம் மக்களிற்கு இன்று கண்ணுக்குத் தெரியாத சூழ்நிலை எதிரிகள் பல வழியிலும் ஆக்கிரமிப்பு , கொள்ளை , அடாத்தென ஆட்சியாளர்களின் ஆசீர்வாத்த்துடன் இடம்பெறும் மறைமுக யுத்தத்தினை எதிர் கொண்டு தமது வாழ்வியலை கொண்டு நடாத்த முடயாமல் தவிக்கின்றனர்.
அரசியல் வாதிகளாலும் ஒன்றுமே உருப்படியாக சாதிக்க முடியவில்லை. சர்வதேசமோ அல்லது இது தொடர்பல் புலம்பும் அமைப்புக்களோ எதனையும் சாதிக்கவும் முடயவில்லை. இதனால் இம் மக்கள் முள்ளிவாய்க்காலின் அவலத்தை இன்றும் அனுபவித்த வண்ணமே உள்ளனர்.
இந்தளவு நிலங்களையும் விழுங்கியுள்ள சிங்களம் தாம் வடக்கு மாகாணம் முழுவதுமே படையினரின் நித்திய பாவனைக்கான சிறுபகுதி நிலத்தினை மட்டுமே வைத்துள்ளதாக வழமையான பொய்யுரைப்பை தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.

No comments:

Post a Comment