October 9, 2015

ஐ.நா. தீர்மானம் நீதி, மானுட தர்மத்தின் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டிருக்கிறது! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்பிக்கப்பட்டிருந்த விசாரணை அறிக்கையினை (OHCHR, OISL) அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினராகிய நாம் வரவேற்கின்றோம். சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசால் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு செயற்பாட்டின் அடிப்படைகளை இனம்கண்டு
வெளிப்படுத்தியிருக்கும் இவ்விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள எமது பிரச்சினைக்கு தீர்வினைக்காண நல்வாய்ப்பாக இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ள தரப்பாகிய தமிழர்களது எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், வேண்டுகோள்கள் அனைத்தையும் புறக்கணித்து பாதிப்பை ஏற்படுத்தும் தரப்பாகிய சிறிலங்கா அரசின் விருப்பத்திற்கேற்ப அமெரிக்காவால் கொண்டுவந்து ஏகமனதாக நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒருபோதும் அமைந்துவிடப் போவதில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரனையுடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ளது.சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே நடந்துள்ள குற்றங்களுக்கு உரிய தீர்வினைக்காண முடியுமென்று, பெருமதிப்புக்குரிய வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும், மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களும், உலகத்தமிழர்களின் சார்பாகவே தீர்மனங்களை நிறைவேற்றியிருந்தார்கள்.
இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை எதிர்நோக்கியிருக்கும் தமிழர் தரப்பின் அதிகார மன்றங்களாக விளங்கும் வட மாகாண சபை, தமிழ்நாடு சட்டமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறிலங்க அரசின் விருப்பத்திற்கேற்ப வலுவற்ற தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளமையானது சர்வதேச சமூகத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை சிதறடிக்கச் செய்துள்ளது.
வாக்குமூலங்கள், சமர்ப்பிப்புக்கள் மற்றும் வெளியிடப்படாத அறிக்கைகளின் அடிப்படையில் பெறப்பட்ட, நேரடிச் சாட்சியங்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் வேறு சாட்சியங்களோடு நடத்தப்பட்ட நேர்காணல்கள், இராணுவ மற்றும் தடயவியல் நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள், செய்மதிப் புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து அதனடிப்படையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சமர்பித்த விசாரணை அறிக்கை, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்த போதிலும் அதனை கருத்திலெடுக்காது சிறிலங்கா அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரேநோக்கில் இத்தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.
தமிழினப்படுகொலை தொடர்வதற்கு எந்த அரசியலமைப்பு வழிகாட்டுதலாக இருக்கிறதோ அந்த அரசியலமைப்பிற்குட்பட்டு நீதி விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும், குற்றத்திற்கு காரணமானவர்களின் தலைமையிலே விசாரணைகள் நடத்தப்படும் எனவும், சர்வதேச நாடுகள் ஏகமனதாக தீர்மானித்துள்ள செயற்பாடானது நீதியின் மாண்புகளை கேலிக்குள்ளாக்கியுள்ளது.
சர்சதேச விசாரணை மேற்கொள்ளுமளவிற்கு பாரதூரமான குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளமைக்கு, உள்நாட்டில் எமக்கு நீதி மறுக்கப்பட்டமையே காரணமாகும். இந்நிலையில், சர்வதேச சமூகமும் எம்மை வஞ்சிப்பது போன்ற நிலையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளது.
எம்மீதி வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இத்தீர்மானம் வலுக்குன்றியதாக இருப்பினும் அந்த தீர்மான முன்னெடுப்புக்களின் ஒவ்வோர் நகர்வினையும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும்.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது என்பதைப் புரிந்து நீதி மறுக்கும் செயற்பாடுகளை கைவிட்டு உரிய நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான முன்முயற்சிகளை எடுப்பதற்கு சர்வதேச சமூகம் தாமதமின்றி முன்வரவேண்டுமென்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேட்டுக்கொள்கின்றது.
அதே நேரத்தில் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் சிறி லங்கா அரசு தமது விசாரணை பொறிமுறைகள் - விசாரணைகள் நடாத்தும் முறைகளை ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபைக்கு வரும் மார்ச் 2016யில் முன் அறிக்கையும் மார்ச் 2017 யில் இறுதி அறிக்கை அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை குறிப்பிடப்பட்டு இருப்பதால் - நடைபெறப்போகும் விசாரணையின் உண்மை தன்மையை உன்னிப்பாக அவதானித்து கொண்டு நாம் இருப்போம் என்பதையும் நாம் கூற விரும்புகிறோம்.
 அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

No comments:

Post a Comment