July 27, 2016

தொண்டைமானாறு தடுப்பணை புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம் அமைச்சர் ஐங்கரநேசன் தொடங்கி வைத்தார்.!

தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வியாழக்கிழமை (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார்.

தொண்டைமானாறு உவர்நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள்உருக்கினால் ஆனவை என்பதால் துருவேறிப் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்பட உள்ளது.

தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி மழைநீரைச் சேகரிக்கும்போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொள்கிறது. இதனைத் தடுக்கும் நோக்குடன் இரண்டு இடங்களில் வெள்ளத் தடுப்பணைகளும் கட்டப்பட உள்ளன. சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு வேலைகள் யாவும் இரண்டு வருடங்களில் முடிவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், த.சித்தார்த்தன்,ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம்,சி.அகிலதாஸ், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி வே.பிறேமகுமார், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

No comments:

Post a Comment