June 1, 2016

ஜி. நடேசன் நினைவும் இன்றைய யதார்த்தமும்!

ஈழத் தமிழ் மக்களின் நலவாழ்வை வெகுவாக விரும்பிய ஊடகவியலாளர் ஜி. நடேசன் எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன.


பிரிவுத் துயரால் துவண்டுபோன அவரது குடும்பத்தினரதும் அவரை மானசீகமாக நேசித்த அவரது நண்பர்களினதும் துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

நடேசன் அவர்களின் படுகொலையோடு ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போதுதான் 12 வருடங்களின் பின்னர் ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.

அதன் விளைவாக முதன்முறையாக அவருக்கான அஞ்சலி நிகழ்வொன்று அவர் பெரிதும் நேசித்தமட்டக்களப்பு மண்ணில் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் மறக்கப்படாமல் நினைவுகூரப் படுகிறான் என்றால், அவன் மக்களுக்காக விசுவாசமாகப் பணியாற்றி இருக்கிறான் என்றே அர்த்தப்படும்.

ஆனால், இந்த நினைவுகூரல் நிகழ்வில் நடேசனின் நண்பர்கள் பலர் அல்லது அவரது நண்பர்கள் எனத் தம்மைக் கடந்த காலங்களில் காட்டிக் கொண்ட பலர் கலந்து கொண்டிருக்கவில்லை.

நடேசன் அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் நிலவிய இருண்ட சூழலும், அதன் பின்னர் தமிழர் அரசியலில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமும் இதன் காரணமாக இருக்கலாம்.

அல்லது வேறு காரணங்களும் இருக்கக் கூடும்.

எதுவாக இருந்தாலும், நடேசன் அவர்களின் நினைவு நிகழ்வில் உரையாற்றிய வீரகேசரி வாரவெளியீட்டின் முன்னாள் ஆசிரியர் வி.ரி. தேவராஜ் கூறிய பல விடயங்கள் நடேசனின் நண்பர்கள் என வகைப்படுத்தப் படுவோர் கலந்து கொள்ளாமைக்கு வேறு காரணங்களும் உள்ளன எனத் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

நடேசனின் கொள்கைகள் சிலருக்குப் பிடித்தமில்லாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், கடந்த காலங்களில் அவர்கள் அதனை வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை.

நடேசன் அவர்களின் இலட்சியம் ஒன்றும் யதார்த்தமற்றதோ, அல்லது தனித்துவமானதோ அல்ல. பல தமிழ் ஊடகவியலாளர்களைப் போன்று அவரும் பிரபாகரன் காலத்திலேயே ஈழம் மலர்ந்துவிட வேண்டும் என விரும்பினார்.

அவ்வாறு மலருகின்ற ஈழம் சமதர்ம ஈழமாக, பொதுவுடமைச் சித்தாந்தத்தின் படி ஆளப்படுகின்ற ஒரு தேசமாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

ஈழம் சாத்தியப்படாத விடத்து, ஆகக் குறைந்தது சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வாவது கிடைத்துவிட வேண்டும் என்பதே அவர் கனவு.

மட்டக்களப்பு தொடர்பாக அவர் கொண்டிருந்த கனவு வித்தியாசமானது. மட்டக்களப்பைப் பொறுத்தவரை, ‘பெரும்பான்மையான மக்கள் அப்பாவிகள், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துத் தரப்பட வேண்டும்.

யாழ் மேட்டுக்குடி சிந்தனை உடையவர்களிடம் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என அவர் விரும்பினார்.

அதற்காகப் பாடுபடவும் செய்தார். அதேவேளை, மட்டக்களப்பில் நிலவும் தலைமைத்துவப் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவலை கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தலைமை தாங்கும் நபர்கள் போதிய அறிவும், தூரநோக்குச் சிந்தனையும் அற்றவர்களாக இருப்பது தொடர்பில் கவலை கொண்ட அவர் இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக முயல வேண்டியதன் தேவை தொடர்பில் எங்களோடு அடிக்கடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்.

துரதஷ்டவசமாக இத்தகைய நிலைமை தற்போதும் மாறாமல் இருப்பதையே காண முடிகின்றது.

ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை அவர்களிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் தேவை என்பது அவரது நிலைப்பாடு.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பிரதித் தலைவராகப் பணியாற்றிய வேளையிலும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய வேளையிலும் அவரது சிந்தனையும், செயற்பாடும் அவரது நிலைப்பாட்டை ஒட்டியதாகவே இருந்தன.

ஆனால், அவரது படுகொலையைத் தொடர்ந்து எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாலும், வேறு பலர் அஞ்ஞாதவாசம் சென்றதாலும், காலச்சூழல் காரணமாக அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்து விட்டதாலும், இன்று மட்டக்களப்பில் ஊடகப் பணி முன்னரைப் போல காத்திரமானதாக இல்லை.

இளம் ஊடகவியலாளர்களுக்கு முறையான வழிகாட்டல் இல்லாமை, ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லாமை, குறிப்பாக தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஐக்கியம் இல்லாமை, பொது விடயங்களில் ஒத்த கருத்து இல்லாமை, நடுநிலை பேணாமை, குழு வாதம், அரசாங்க ஊழியர்களாக இருந்து கொண்டு பகுதிநேர ஊடகர்களாகக் கடைமையாற்றும் ஒருசிலர் அரச அதிகாரிகளைத் திருப்திப் படுத்தும் விதமாக நடந்து கொள்ளுதல், ஒருவரை ஒருவர் தள்ளி விழுத்துவதற்கு முயற்சித்தல் எனப் பல குறைபாடுகளைப் பட்டியலிட முடியும்.

நடேசன் அவர்களின் பன்னிரெண்டாவது நினைவு தினத்திலாவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் கவனஞ் செலுத்தி தம்மைச் சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது கூட நடேசன் அவர்களுக்குச் செலுத்தும் ஒரு அஞ்சலியாக அமையக் கூடும். அதேவேளை, ஊடகவியலாளர்கள் தாம் யாருடன் இணைந்து பயணிக்கின்றோம் என்பது தொடர்பிலும் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூகத்திற்கு வழிகாட்டும் பொறுப்பில் உள்ளவர்கள், தம் மீது வேறு எவரும் சவாரி செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், இன்று தங்களுக்கு சமூகத்தில் வழங்கப் பட்டிருக்கும் அந்தஸ்து தமது முன்னோடிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் உருவானது என்பதை நினைவில் கொண்டு தமது பணியின் மாண்பை நிலை நிறுத்துபவர்களாகத் தம்மை அவர்கள் செதுக்கிக் கொள்ள வேண்டும்.

மாறாக, மரணித்தவர்களின் தியாகத்தில் பணம் சம்பாதிப்பவர்களாக அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. தேவராஜ் அவர்களின் உரையைச் சரியாகப் புரிந்து கொண்டால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

காலத்திற்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ள முன்வராதவர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் படுவார்கள் என்பதற்கு ஏராளம் எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பதை இத்தகையோர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நடேசன் போன்றோரின் சிந்தனை.

No comments:

Post a Comment