June 21, 2016

பிரான்சில் இடம்பெற்ற மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள்!

தியாகி பொன்சிவகுமார் அவர்களின் 42ஆவது நினைவை முன்னிட்டு நடாத்திய மாணவர் எழுச்சி நாள் 2016 நிகழ்வு நேற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர் பகுதியான Villeneuve st Georges பகுதியில் பிற்பகல் 15.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தியாகி பொன்சிவகுமாரன் அவர்களின் உருவப்படத்திற்கான ஈகச்சுடரினை 1992 இல் வவுனியா பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் பூலோகசிங்கம் பத்மரோகனின் சகோதரன் ஏற்றிவைத்தார்.

மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ் இளையோர் அமைப்பு - பிரான்ஸ் பொறுப்பாளர் சீராளன் நிலோஜனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், BREVET பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில், இம்முறை விசேடமாக, BREVET பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அவர்களின் சந்தேகங்களும், அவர்கள் பரீட்சையில் விட்ட தவறுகளும் அனுபவம் பெற்றவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

இதைவிட, மாணவர்கள் தொடர்ந்து மேற்படிப்பை எப்படித் தெரிவு செய்யவேண்டும் என்பதுபற்றி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரான்ஸ் இளையோர் அமைப்பினரால் ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டதுடன், இதுபற்றிய சந்தேகங்களும் தீர்த்துவைக்கப்பட்டன.

அத்துடன், தியாகி பொன்சிவகுமார் பற்றி விவரணப்படம், ஈழத்தமிழர் திரைப்படச் சங்கத்தினால் வெளியிடப்பெற்ற இரண்டு சிறப்புக் குறும்படங்கள் காண்பிக்கப்பட்டதுடன், பிரான்ஸ் இளையோர் அமைப்பினரால் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு காண்பிக்கப்பட்ட ஈழத்தமிழர் பற்றிய விவரண விளக்கமும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதேவேளை, இளையோர் அமைப்பு பிரான்ஸ் வெளியிடவுள்ள வெளிநாட்டவர்கள் தமிழ் கற்க இலகுவான நூல்பற்றிய அறிமுகமும் இதன் போது செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிகழ்வுகளை இளையோர் அமைப்பினர் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்று நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோர்கள், ஆர்வலர்கள் என பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.





No comments:

Post a Comment