June 21, 2016

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிக்கு பிணை மறுப்பு!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்றுள்ள ரவிச்சந்திரனை பிணையில் செல்ல மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பி.ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாகவும், இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே ரவிச்சந்திரனை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், ரவிச்சந்திரனுக்கு தீவிரமான உடல்நலக்குறைவு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தச் சோகை மட்டுமே இருப்பதாகவும், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கவனத்தில்கொண்ட நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சிறப்பு மருத்துவக் குழு மூலம் ரவிச்சந்திரனுக்கு சிகிச்சை அளித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment