June 8, 2016

சாலாவ இராணுவ முகாமிற்கு அண்மையில் பிரவேசிக்க மக்களுக்கு அனுமதி மறுப்பு!

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வாழ்ந்த மக்கள் தொடர்ந்தும் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.


குறித்த பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மக்களுடக்கு இருப்பிடங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து சிதறிய மற்றும் வெடிக்காத தோட்டக்களின் பாகங்களை மக்கள் சேகரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இவ்வாறான பாகங்களை தொடுவதில் இருந்து விலகியிருக்குமாறு மக்களிடம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெடிபொருட்களின் பாகங்கள் காணப்படுமாயின் அதனை செயலிழப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்குமாறும் பொலிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் அறிவுறுத்தலை மீறி வெடிபொருட்களின் பாகங்களை சேகரிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

011 30 46 128, 011 30 46 129, 011 25 80 518 மற்றும் 077 730 32 74 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாலாவ முகாமில் ஏற்பட்ட தீச்சம்பவத்தினால் மூடப்பட்ட அவிசாவளை கொழும்பு வீதி நேற்றிரவு திறக்கப்பட்டுள்ளது.

தீயினால் இராணுவ முகாமை அண்மித்து வாழ்ந்து வந்த சுமார் 940 பேர் தொடர்ந்தும் 6 முகாம்களில் தங்கியுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment