அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கலிபோர்னியாவில் சான் பெர்னாடினோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏராளமானவர்கள் பலியாகினர். அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என அவர் பேசினார். இது அமெரிக்கர்கள் மத்தியிலும், உலக மக்கள் மத்தியிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஒர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் விடுதியில் நியூயார்க்கை சேர்ந்த ஒமர் மதீன் என்ற தீவிரவாதி சுட்டதில் 50 பேர் பலியாகினர். இது அமெரிக்க மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நியூ ஹாம்ப்ஷிரில் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயரும் முஸ்லிம்கள் தங்க தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தனது பேச்சின் போது அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அதிபர் ஒபாமாவை தாக்கி பேசினார். தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்தினார். டொனால்டு டிரம்பின் பேச்சு அமெரிக்காவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment