May 28, 2015

மதிதயனுக்கு ஒருவாரத்திற்குள் நீதி கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: பொன்.செல்வராசா!

மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.மதிதயன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் கொலையாளிகள் ஒருவார காலத்துக்குள் கைதுசெய்யப்படாது விட்டால் மக்களுடன் இணைந்து வெகுஜன போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மண்டூர் படுகொலை தொடர்பிலும் அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சமூகசேவைகள் உத்தியோகத்தரின் படுகொலையினை கண்டித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,நல்லாட்சி நிலவும் இந்தவேளையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மாத்திரம் அன்றி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் இருக்கும் அச்ச நிலையினை போக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் அவற்றினை அவர்கள் செய்வார்கள் என நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

No comments:

Post a Comment