June 7, 2016

ரவி கருணாநாயக்கவிற்கு காத்திருக்கும் ‘ஆப்பு’!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.


மகிந்த அணியினரால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது, சிறிலங்கா சுதந்திர கட்சியை சோதிக்கும் வகையில் அமையும் என்று மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அவர்கள் இந்த விடயத்தைக் கூறியுள்ளனர்.

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்கவே உருவாக்கப்பட்டது.

ஆனால் சுதந்திர கட்சியின் சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை சோதிக்கும் வகையில் இந்த பிரேரணை அமையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே .வி .பி யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இதனை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.

No comments:

Post a Comment