May 27, 2016

சமஷ்டி முறைக்கு இலங்கை மாற இந்திய உதவி அவசியம்! தமிழக முதல்வரை பாராட்டி மாகாணசபையில் சீ.வி. உரை!

13வது திருத்தச் சட்டத்தில் இருந்த சமஷ்டி முறைக்கு நாடு மாற்றம் பெற இந்திய அரசாங்கத்தின்
ஒத்துழைப்பு அவசியம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் சார்பில் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய அரசாங்கத்திற்கு எமது மக்களின் தற்போதைய நிலைமை மற்றும் வருங்காலம் குறித்து தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பதை இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறக்கூடிய ஒரே தலைவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 53வது அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றிருக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கு வடமாகாண முதலமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்து உரையாற்றியிருந்தார்.

அண்மையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தமிழக முதலமைச்சராக 6 வது முறையாக பதவியேற்றுள்ளார்.

இது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. அதை ஒட்டி எமது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அவர் இதுவரை காலமும் ஆற்றிய சேவை அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டமையே அவரின் இந்த வெற்றி.

எமது நாட்டின் தமிழ் மக்களும் அம்மையாரின் இந்த வெற்றியால் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளார்கள்.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாக அவர் குரல் கொடுத்து வந்ததாகவும் கூறினார்.

இந்நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் தற்போது வெற்றியீட்டியிருக்கும் தமிழக முதலமைச்சர் எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை நாங்கள் வென்றெடுக்க உறுதியான துணையாக இருப்பார் என்பது தமது எதிர்பார்ப்பு என்றும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் கணவன்மாரை இழந்த 89000 இற்கும் அதிகமான எமது விதவைப் பெண்களினதும், காணாமல்ப் போன பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவினர்களதும், போரினால் உடல் ஊறினையும் மன உளைச்சலையும் எதிர்கொண்ட எம் பாதிக்கப்பட்ட மக்களதும், தம் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் புலம் பெயர் மக்களினதும், பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டசிறார்களினதும் மற்றையோர்களினதும் துயர்களைத் துடைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றக் கூடிய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எமக்குண்டு.

பல காரணங்களினால் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு இதுகாறும் இருந்து வந்துள்ளது.இந்நிலைமாற வேண்டும்.

செல்வி ஜெயலலிதா போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

1987ம் ஆண்டில் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இந்திய அரசாங்கமே முகவராகநின்று அதை முன்னேற்றியது.

இந்திய அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டவை 13வது திருத்தச் சட்டத்தின் கீழ்தராது விடப்பட்டதைவிடத் தரப்பட்ட உரித்துக்களும் எமது ஒற்றையாட்சியாளர்களால் பின்னர் பறித்தெடுக்கப்பட்டன.

போருக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் இன்றும் எம்மிடையே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முகாம் இட்டுள்ளார்கள்.

எம் காணிகளில் பயிரிடுகின்றார்கள்.வருமானத்தைத் தாம் எடுக்கின்றார்கள். எம்மக்களின் தொழில்களுள் உள்ளீடு செய்கின்றார்கள். இதனால் பல இடர்களுக்கு எம்மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

இதன் பொருட்டு வடமாகாணசபையானது செல்வி ஜெயலலிதா அவர்களின் வெற்றியை வரவேற்றுப்பாராட்டும் அதேநேரம், அவரின் அரசாங்கத்துடன் கிட்டிய தொடர்பாடல்களை வைத்துக் கொள்வதற்கும் விரும்புகின்றது.

கலை,கலாச்சாரம் மேலும் அரசியலால் எம் இரு நாடுகளின் தமிழ் பேசும் மக்களின் நெருக்கமான ஒத்துழைப்பை நாம் யாவரும் வேண்டிநிற்கின்றோம்.

No comments:

Post a Comment