விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார்
. கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின்காலம்.
வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான்.
1990ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாரிய முன்னேற்ற முயற்சியொன்றை படையினர் மேற்கொண்டனர். கப்டன் அஜித்தாவின் வழிநடத்தலில் பெண் போராளிகள் நான்குமணி நேரமாக எதிர்ச்சமராடி முன்னேற்ற முயற்சியை முறியடித்தனர். எதிரிகள் பலரை வீழ்த்தியதோடு, எம் – 203 பிஸ்ரல் உட்பட வேறுசில ஆயுதங்களையும், ஒரு இராணுவத் தின் சடலத்தையும் கைப்பற்றினர். முதன் முதலாக தனித்துப் போரிட்டு, பகைவரின் ஆயுதம் எடுத்த சமரைத் தலைமையேற்று நடத்திய பெருமை கப்டன் அஜித்தாவுக் குரியது.
1986ஆம் ஆண்டில் மன்னார் சிறிலங்கா காவல்நிலையம் மீதான தாக்குதல், தள்ளாடியிலிருந்து முன்னேறி வந்த சிறிலங்காப் படையினரை அடம்பனில் இடைமறித்துத் தாக்குதல். 1987இல் யாழ். தொலைத் தொடர்பு நிலையம் மீதான தாக்குதல், மயிலியதனைச் சிறுதளம் மீதான தாக்குதல் என ஆண் நபாராளிகளின் வழிநடத்தலில் களங்களாடி, சிறிது சிறிதாக போராற்றலை வளர்த்துக்கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு, இந்திய இராணுவக் காலம் திறந்த பல்கலைக்கழகமானது.
கல்லுண்டாய், வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பொன்னாலை, மாசியப்பிட்டி, கோப்பாய், நீர்வேலி போன்ற பல இடங்களில் இந்திய இராணுவத்தினரின் ஏராளமான தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. சூழலை நன்கறிந்த, போர் அனுபவமுள்ள ஆண் போராளிகளுடன் நான்கைந்து பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து சமராடிய நாட்கள் அவை.
முன்னேறி வந்த இந்திய இராணுவம் கல்லுண்டாய் வெளியில் தளம் அமைத்து நிலை கொண்டது. லெப்.கேணல் ஜொனியின் தலைமையில் பெண்போராளிகளும் புறப்பட்டார்கள் தளத்தைத் தாக்கியழிக்க. இரண்டு இரவுகள் முயன்று, மூன்றாம் நாளிரவு பலத்த எதிர்ப்புக்களின் நடுவே தளத்தை நெருங்கினர். காப்புகளற்ற வயல் வெளிகளில் புலிகள். வரம்புகளைவிட்டு தலையை உயர்த்தியவர்களின் நெற்றிகளில் விழுந்தது சூடு. கடும் மோதலின் பின் தளத்தைத் தகர்த்து, எதிரிகளின் ஆயுதங்களை அள்ளி எடுத்தவர்கள், ஒருவரை மற்றவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள். மூன்று நாட்களாகச் சேற்றுவயலில் கிடந்ததால் உடல் முழுவதும் சேறு.
பெண் போராளிகளிடம் வந்த லெப். கேணல் ஜொனி,
” பிள்ளையள் போய் குளித்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கோ. அடுத்த சண்டைக்குப் போகவேண்டும். ”
என்று சொல்லி முடிப்பதற்கிடையில் வந்தது செய்தி, ” சங்கானைக்கு ஆமி வந்திட்டான். ”
இராணுவத்தோடு மட்டுமல்ல போராட்டம்; இயற்கையோடும் தான்.
1990ஆம் ஆண்டு. பலாலிப் பகுதியில் நிலைகொண்டிருந்த பெண் போராளிகளில் ஒரு பகுதியினர் கொக்காவிலிலுள்ள சிறிலங்கா படைத்தளத்தைத் தாக்கவென வன்னிக்கு வந்துவிட்டனர். பெண் போராளிகளுக்குரிய இலக்குகள் தலைவர் அவர்களால் தனித்துப் பிரிக்கப்பட்டன.
சண்டை தொடங்கியது. தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகைவரின் காப்பரணை மின்னல் வேகத்தில் அழித்து உள்நுழைந்தனர் பெண் போராளிகள்.
” நான் ஆமியின்ரை பொயின்ரில நிக்கிறன் ” வானலையில் வந்தது மேஜர் சஞ்சிகாவின் குரல். அடுத்தடுத்த காப்பரண்களைக் கைப்பற்றவேண்டிய ஆண் போராளிகளின் அணிக்குப் பொறுப்பாகப்போன தளபதியால் நம்பமுடியவில்லை. ஆனால் சஞ்சிகா
இப்படிச் செய்யக்கூடியவர்தான் என்பதும் இவருக்குத் தெரியும். உண்மையிலேயே மேஜர் சஞ்சிகாவின் அணி உள்நிற்பதை உறுதிசெய்த தளபதி, பக்கக் காப்பரண்கள் பிடிபடாத நிலையில் ஒரு அணி தனித்து நிற்பதன் ஆபத்தை உணர்ந்து தாக்குதலை வேகப்படுத்தினார். களங்களில் சஞ்சிகா ஒரு புயல்தான்.
இப்படிச் செய்யக்கூடியவர்தான் என்பதும் இவருக்குத் தெரியும். உண்மையிலேயே மேஜர் சஞ்சிகாவின் அணி உள்நிற்பதை உறுதிசெய்த தளபதி, பக்கக் காப்பரண்கள் பிடிபடாத நிலையில் ஒரு அணி தனித்து நிற்பதன் ஆபத்தை உணர்ந்து தாக்குதலை வேகப்படுத்தினார். களங்களில் சஞ்சிகா ஒரு புயல்தான்.
அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவினர் தம்மை யாரென இனங்காட்டிக் கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருந்தனர். லெப். அனித்தாவும் தன்னை வெளிப்படுத்தாமல் தாயகத்துக்கான பணிகளில் ஈடுபட்டார்.
அனித்தாவின் வேலை மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டது. இருவேறு பண்பாடுகளைக் கொண்ட தமிழ், இஸ்லாமிய சமூகத்தவரிடையே பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் எளிமையான வாழ்வைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராகி நிதானத்துடனும் கவனத்துடனும் செயலாற்றத் தொடங்கினார்.
இந்திய இராணுவ வருகையின் பின் அனித்தாவின் செயற்திறன் அம்பாறைக்கும் தேவைப்பட்டது. வேலைகள் விரிவாக்கப்பட்டன. எடுத்த பணியை முடிப்பதற்காகப் பல தடவைகள் பல படைத்தளங்களைக் கடந்து அம்பாறைக்கும் மட்டக்களப்புக்குமாக அவர் போய்வரவேண்டியிருந்தது.
தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் பகைத்தளங்களைக் கடந்து போய் வருகின்ற அனித்தா 1988.11.28 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டு, தேசத் துரோகிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வழியிலேயே சயனைட் அருந்தி தன்னை அழித்துக்கொண்டார்.
ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா.
கள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் தலைவி யாக மேஜர் வளர்மதி, குழுவில் ஒருவராக 2ம் லெப். நிலா.
நிலாவும் வளர்மதியும் உயிர் நண்பிகள். இருவரின் உரையாடலிலும் நகைச்சுவை இழையோடும்.
இருநாள் பயணம். தேவையான உணவுப் பொருட்கள், ஆயுத தளபாடங்களோடு பயணம் தொடர்ந்தது. அருவிகள், மலைகள் கடந்து நீண்ட பயணத்தின் முடிவில், தாக்குவதற்காக நிலையெடுத்தனர். ஊர்திகளில் வந்த சிறிலங்காப் படையினர் மீது இருபது நிமிடங்கள்வரை நீடித்த தாக்குதலில், கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களைக் கைவிட்டு ஏனையோர் காடுகளுக்குள் தப்பியோடினர். படையினரின் ஜீப் ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. எல்.எம்.ஜி உட்பட கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு மாவீராங்கணையான 2ம் லெப்.நிலாவின் வித்துடலையும் சுமந்தபடி, மறுபடி மலைகள், அருவிகள் கடந்து தொடர்ந்தது பயணம்.
காரிருளில் தம்மை உருமறைத்த படி இருளோடு இருளாக வயல் வரம்புகளுடன் சில உருவங்கள் ஊர்ந்தன. பூநகரியிலிருந்த சிறிலங்கா படையினரின் தேடொளிகள் உயிர் பெற்றதும் அவை மண்ணோடு ஒன்றின. தேடொளி வேறுதிசை திரும்பியதும் மறுபடி ஊர்ந்தன. எனினும் ஐயங்கொண்ட படையினர் ரவைமழை பொழிந்தனர்.
ஓசையேதும் எழுப்பாமல், காயப்பட்ட தோழிகளைத் தமது தங்ககம்வரை சுமந்துவந்த வேவுப்புலிகள் அவசர முதலுதவிச் சிகிச்சையில் இறங்கினர்.
நீர் தேங்கி நிற்கும் வயல்களில், இரவுகளில் ஊர்ந்து போவதால் உடல் முழுவதும் சேறு அப்பும். சென்றபணி முடித்துத் திரும்பும்வரை சேறுதான் அவர்களுக்குப் போர்வை.
நல்ல குளிர் இரவுகளில் பூநகரிக் கடலை நீந்திக் கடந்து படையினரின் கண்களில் படாமல் கரையேறி, நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைக்கூட தம் வேவுக் கண்களிலிருந்து விட்டுவைக்க வில்லை இவர்கள்.
தனித்த வேவுப்பாதை. கப்டன் தேனுஜாவின் கனவு அது. அவர் விழிமூடி ஒரு வருடத்தில் நனவானது. பூநகரிப் படைத்தளம் மீது ||தவளைகளெனப் || புலிகள் பாய்ந்தபோது தனித்தனியாக தாம் எடுத்த வேவுப் பாதைகளால் கப்டன் துளசிராமும் லெப்.கேணல் முகுந்தாவும் அணிகளை வழி நடத்தி களம் புகுந்தனர்.
1992.03.01 அன்று தரைப்படையிலிருந்து முப்பது பெண்போராளிகள் கடலுக்குள் குதித்தார்கள்.
தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குரிய பயிற்சித் திட்டங்களை வரையறுக்கும் போது நீச்சற்போட்டி ஒன்று வைத்தார். ஆண்கள் மூன்று கடல்மைல்களையும், பெண்கள் இரண்டு கடல்மைல்களையும் அடிப்படையில் முடித்திருக்கவேண்டும். ஆனால் நீச்சலுக்கான விருதைப் பெறுவதாயின், ஆண்கள் ஐந்துகடல்மைல்களையும், பெண்கள் மூன்று கடல் மைல்களையும் நீந்தி முடிக்கவேண்டும்.
பெண்கள் ஐந்து கடல் மைல்களை நீந்தி முடித்தார்கள். தலைவர் அவர்களிடமிருந்து சிறப்புப் பரிசுகளை பெற்றுக் கொண்டார்கள்.
1995ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் மாலுமிகள் உட்பட நூற்று இருபத்தெட்டுப் பயணிகளைச் சுமந்து வந்த ” ஐரிஷ்மோனா ” கடற்புலிகள் மகளிர் படையணியால் வழிமறிக்கப்பட்டு, முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டது. கடற்புலிகளின் இலக்கு ” ஐரிஷ்மோனா ” அல்ல. இது இறால், இறாலை மகளிர் படையணி தக்கவைத்துக் கொண்டது.
இறால் தேடி சுறாக்கள் புறப்பட்டன. தேடிவந்த சிங்களக் கடற்படையினரின் இரண்டு சுப்படோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகளும், நவீன பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இருபது படையினரைக் காணவில்லை என சிங்கள அரசின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தனைக்கும் ஏதுவான இறாலை கடற்புலிகள் மகளிர் படையணி தன் தூண்டிலில் தக்கவைத்திருந்தது கடற்சமரில் முத்திரை பதித்திருந்தது.
காடு. பெருங்காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்தார்கள் அவர்கள். ஒட்டவெட்டிய முடி, பார்வையில் கூர்மை, பலமான உடலமைப்பு, பார்த்தாலே தெரியும் இவர்கள் எமது சிறப்புப் படையணியினர் என்பது.
முன்னணியில் நகர்ந்த மேஜர் மாதங்கிக்கு வெளிப்புறத்தே நடக்கும் பெருஞ் சண்டையின் ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. மணலாற்றிலுள்ள ஐந்து படைத்தளங்கள் ஒரேநேரத்தில் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சிறிலங்கா இராணுவத்தினரும் மிக விழிப்புடன் இருந்ததால், வெளிப்புறக் காப்பரணிலேயே கடும் மோதல் வெடித்திருந்தது.
மேஜர் மாதங்கியின் அணியோ தளத்தினுள் ஊடுருவி, ஆட்லறி ஏவு தளத்தைக் குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தது. போகும் வழியிலேயே சண்டை தொடங்கிவிட்டது. இடைவழியில் இவர்களைக்கண்ட இராணுவம் சுட, இவர்களும் சுட்டவாறே நகர்ந்தனர். முடிந்தவரை சண்டையைத் தவிர்க்க முயன்றும், முடியாமல் போனதால் சண்டையிட்டபடியே ஆட்லறித் தளத்தினை நெருங்கியது அணி. இவர்கள் சுட்டுவீழ்த்த, புற்றீசல் போல் படையினர் வந்துகொண்டேயிருந்தார்கள்
ரவைகள் முடியும்வரை சண்டை நடந்தது. ரவைகள் முடிந்த பின்பும் சண்டை தொடர்ந்தது. சுடுகலன்களும் கைகளாலும் கால்களாலும் சிங்கள இராணுவத்தினரை அடித்து வீழ்த்தியவாறும், இழுத்து விழுத்தி மரங்களோடு மோதியவாறும் நிலைமையைத் தொடர்ந்தும் தம் கட்டுப்பாட்டில் வைத்தபடியே, ஆட்லறியைத் தகர்த்தார்கள் இவர்கள்.
பெறுமதிமிக்க நூற்று எழுபத்தைந்து வீராங்கணைகளின் உயிர்கள், ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள், மழைக் காலங்களில் நனைந்தவாறும், நீர் நிறைந்த பதுங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள், வெயில் காலங்களில் நாவரண்டு மர இலைகளில் வழியும் பனிநீரையும் விடாது சேகரித்துக் குடித்த நாட்கள், சிறிலங்கா படையினர் நகரும் திசைகளிலெல்லாம் பதுங்கு குழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூர சுமைதாங்கிய நடைப் பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடற்களைப்பு எல்லாவற்றையும் கடந்து ஓயாத விழிப்புடன் 2ம் லெப். மாலதி படையணி போரிட்டது || ஜெயசிக்குறு \| எதிர் நடவடிக்கைக்களத்தில்.
நெடுங்கேணியில் ஆரம்பமாகி, புளியங்குளம், புதூர், மன்னகுளம், மாங்குளம், வன்னிவிளாங்குளம் என்றுபோய் கடைசியில் அம்பகாமம்வரை களம் நீண்டு அகன்றது. போரனுபவம் மிக்க பழையவர்கள், போர்க்களத்தில் வைத்தே புதிய போராளிகளுக்குச் சண்டை பழக்கிய களம் அது. மறுபடி மறுபடி சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்கும் அணிகள் ஊடுருவ முயன்றுகொண்டேயிருக்கும். இரவுபகல் என்றில்லாது எந்நேரமும் விழிப்புடனிருக்கும் 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளின் சுடுகுழல்கள் கனன்று கொண்டேயிருக்கும்.
அப்போதுதான் குறுகியகால படைய தொடக்கப் பயிற்சியை நிறைவுசெய்த புதிய அணியினர் அம்பகாமத்துக்கு வந்திருந்திருந்தனர். 1998ஆம் ஆண்டின் ஜுன் மாதம், ஏற்கனவே இருதடவை சிறிலங்காப் படையினரை இவர்கள் எதிர்கொண்டிருந்தனர். இன்று மூன்றாம் முறையாக இராணுவம் முன்னேறியது.
படையினர் முன்னகர்வதை, காப்பரண்களிலிருந்து குறிப்பிட்டளவு தூரம் முன்னே அவதானிப்பு நிலையில் நின்ற 2ம் லெப்.இன்குறிஞ்சி கண்டு, சுடத் தொடங்கிவிட்டார். இவரைத் தொடர்ந்து பின்னே காப்பரணில் நின்ற தர்சினி, மேஜர் வாணி முதலானோரும் தாக்கத் தொடங்கிவிட்டனர்.
இவர்கள் பின்னே வரும்படி கத்தியதையும் கருத்திலெடுக்காமல், அவதானிப்பு நிலையைவிட்டு வெளியேறாமல் தனியாக நின்று, தனது ரவைகள் முடியும்வரை சுட்டு விட்டு, நெஞ்சில் பட்ட காயத்துடன் எழும்பி ஓடிவந்து காப்பரணில் விழுந்தவர், விழிமூடிப் போனார்.
அச்சம் சிறிதுமற்ற அந்தப் புதிய போராளியின் துணிச்சல் 2ம் லெப். மாலதி படையணியின் அன்றைய நாளை பெறுமதியாக்கி விட்டிருந்தது.
உலக வரலாற்றின் இரண்டாம் நோர்மன்டித் தரையிறக்கம் அது. இம்முறை அது குடாரப்புவில் 2000.03.26 அன்று அதிகாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தது.
தரையிறங்கிய வேகத்திலேயே, தொண்டமனாற்றிலிருந்து ஆனையிறவுநோக்கி நீண்டு கிடக்கும் கடல்நீரேரியைக் கடந்து, பளைக்கும் முகமாலைக்கும் இடையிலான யாழ்.நெடுஞ்சாலையை ஊடறுத்து நிலை கொண்டன புலியணிகள். நீரேரியின் கரையிலிருந்து நெடுஞ்சாலையை நெருங்குவதற்குச் சற்று முன்புவரை, ஆனையிறவைப் பார்த்தபடி 2ம்லெப்.மாலதி படையணியும், அவர்களைத் தொடர்ந்து நெடுஞ்சாலையை வெட்டிக்கடந்து கிளாலிநோக்கிப் பார்த்தபடியும் மறுபடி வெட்டிக்கடந்து சாவகச்சேரி நோக்கிப் பார்த்த படியுமாக மேஜர் சோதியா படையணியும், தொடர்ந்து சாவகச்சேரியைப் பார்த்தபடியே லெப்.சாள்ஸ் அன்ரனி படையணியும், சிறப்பு எல்லைப்படை வீரர்களும் 2ம் லெப்.மாலதி படையணியின் பிறிதொரு அணியும் நிலை கொண்டிருந்தன.
நெடுஞ்சாலையைக் கடந்து கவிழ்ந்த U வடிவில் மேஜர் சோதியா படையணி தனித்து நின்றது. வேம்பொடுகேணி பாடசாலை, புகையிரதப்பாதை எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டில். 2000.04.02 அன்று ஆனையிறவுத் திசையிலிருந்து முன்னேறி உள்நுழைந்த சிறிலங்காப் படையினரை 2ம் லெப். மாலதி படையணி சம்பலாக்கிவிட்டிருந்தது. இனி எந்நேரமும் தமது பகுதியில் ஒரு தாக்குதல் நிகழலாமென சோதியா படையணி விழிப்புடன் நின்றது. ஏற்கனவே 2000.03.27 அன்று படையினர் செய்த முன்னேற்ற முயற்சி யொன்றை இவ்விடத்தில் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் முறியடித்துமிருந்தனர். இன்று 10ஆம் திகதி. படையினர் பாரிய நகர்வொன்றை ராங்குகளைப் பயன் படுத்திச் செய்தனர். பாடசாலைக்கு அப்புறமும் இப்புறமுமாக இரு வரிசையில் இராணுவம் முன்னேற, இவர்களின் அணி மூன்று கூறுகளாக வெட்டப்பட்டது. எங்கு பார்த்தாலும் ராங்குகள். சுழல்மேடைகள் சுழலச் சுழல, பீரங்கி வாய்கள் புகைகக்க, எங்கும் பாரிய வெடிப்பொலிகள். கொப்புகள், கற்கள், மண் எல்லாம் மேலுயர்வதும் விழுவதுமாக களத்தில் அனல் வீசத்தொடங்கியது.
செல்வியின் காப்பரணருகே, அது காப்பரண் என்பதை இன்னமும் கவனிக்காத ராங்கொன்று நின்று முழங்கிக்கொண்டிருந்தது. கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்த செல்விக்கு, ஒவ்வொரு காப்பரணின் தொடர்பும் அற்றுப் போய்க்கொண்டிருந்தது. கூடநின்ற இலக்கணாவை ராங்கிக்கு கைக்குண்டை வீசுமாறு கூறிவிட்டு, இல்லாமல்போன தொடர்புகளை எடுக்க முயன்றுகொண்டிருந்தார்.
முதலில் வீசப்பட்ட குண்டு சற்று சறுக்கிப்போனாலும், இரண்டாவது குண்டு தன் பணியைச் செவ்வனே செய்ததால் ராங்கியினால் நகரமுடியவில்லை.
சேதமுற்ற ராங்கியினைச் சீர்செய்யவென உள்ளிருக்கும் படையினர் வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுடுவதும் அவர்கள் தலையை உள்ளிழுத்துவிட்டு மறுபடி வெளிவர முயற்சிப்பதும், இவர்கள் சுட்டு வீழ்த்துவதுமாக, ஒருநாள் காலை தொடங்கிய சண்டை மறுநாள் காலை முடிவுக்கு வரும்வரை அந்த ராங்கியை மீட்க இராணுவத்தால்
முடியவில்லை.
முடியவில்லை.
மலையான மலையெ, பெரும் பலமெனப் படையினரால் நம்பப்படுகின்ற ராங்கியொன்று, தனித்து நின்ற இரு பெண் புலிகளால் அன்று வெற்றிகொள்ளப்பட்டது.
ஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக மாறியதில் சிங்கள அரசு சினத்தோடு இருந்தது.
ஆனையிறவைப் பிடிக்கும் அவாவில் மறுபடியும் சிறிலங்காப் படையினர் முன்னேற முயல்வர் என்பதை உய்த்துணர்ந்த தலைவர் அவர்கள், திட்டமொன்றைத் தீட்டினார். எழுதுமட்டுவாள், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என நீண்டுகிடக்கும் போராளிகளின் முன்னரங்குகளைப் பாதுகாக்கும், பலப்படுத்தும் திட்டம் அது.
திட்டத்தைச் சுமந்தபடி லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு களமிறங்கியது. காப்பரண்களில் நின்ற 2ம் லெப்.மாலதி படையணிப் போராளிகளும், மேஜர் சோதியா படையணிப் போராளிகளும், வேலைசெய்து கொண்டிருந்த பெண் போராளிகளுக்கு (லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி படைப்பிரிவு பெண் போராளிகளை மட்டுமே கொண்டது) காப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். வேலை முடிந்தது. 2001.04.24 காலை விடிந்தது. 5.30 மணியளவிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உடைப்பை ஏற்படுத்திய சிறிலங்காப் படையினர், வேகமாக உள்நுழைந்து ஒரு கிலோமீற்றர் தூரம்வரை போய், பெட்டிவடிவில் போராளிகளைச் சுற்றி
வளைத்தனர்.
வளைத்தனர்.
தொடங்கியது கடும் சண்டை. படையினரின் கைகளில் விழுந்த காப்பரண்களைப் போராளிகள் கைப்பற்றியபடியே போக, பின்னாலேயே படையினரும் வந்து புகுந்துவிடுவர். மறுபடியும் காப்பரண்களை மீட்டபடி போராளிகள் போக, பின்னால் வேறு படையினர் வந்து புகுந்துவிடுவர். பதினான்கு தடவைகளுக்கு மேல் படையினரிடமும் போராளிகளிடமும் காப்பரண்கள் கைமாறிக்கொண்டிருந்தன.
லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் மகளிர் படையணியின் எறிகணை செலுத்திகள், முன்னரங்கக் காப்பரணில் நின்று சமராடியபடியே ஆதரவுச் சூடுகளைக் கேட்கும் போராளிகள் சொல்கின்ற ஆள்கூறுகளுக்கு அமைவாக, எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தன. முன்னேறிய சிங்களப் படையினர் இப்போது எறிகணை செலுத்தியை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
சாதாரணமாக, சமர்க்களத்திலிருந்து பாதுகாப்பான தூரத்துக்கு அப்பால்தான் எறிகணை செலுத்தி இடம் மாற்றப்படும். எறிகணை செலுத்தும் குழுவினர், தமது போர் உத்தியில் மாற்றம் செய்தனர். முன்னரங்கப் போராளிகளுக்கான ஆதரவுச்சூடு வழங்குவதை இடைநிறுத்தாமல் தொடர்ந்து செய்யும்படியே, சூழவந்த படையினரைத் தமது சுடுகலன்களால் தாக்கத் தொடங்கினர். எறிகணைகளை ஏவி, ஏவி பீரங்கிவாய் சிவந்தது. பீரங்கியைப் பகைவரிடமிருந்து பாதுகாக்க சுடுகலன்களும் சிவந்தன. பின்னரங்கில் போர் தீச்சுவாலை கக்கியது. மூன்றாம் நாளின் முடிவில், இழப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இராணுவம், முற்றுகை வளையத்தை விலக்கிக்கொண்டு தப்பியோடத் தொடங்கியது. பகைவர் உள்நுழைந்த பாதைகள் யாவற்றையும் எஞ்சிய போராளிகளும் எல்லைப்படை வீரர்களும் இணைந்து மூடிவிட, உள்நிற்கும் இராணுவத்துக்கு முன்புறமும் போராளிகளின் தாக்குதல், முதுகுப்புறமாகவும் தாக்குதல்.
கலைந்து செல்லும் பட்டிபோல கண்ணில் பட்ட திசைகளாலெல்லாம் முன்னரங்க காப்பரண் வரிசையைக் கடந்து ஓட முற்பட்ட இராணுவத்தினரின் கால்கள் பறந்தன. விழுந்தவரின் உயிர்களும் பறந்தன. தப்பியோடும் திசையெல்லாம் வௌ;வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள், பொறிவெடிகள், சூழ்ச்சியமைப்புகள் எல்லாம் வெடிக்க, லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி கூட தமிழீழத்தையே நினைக்கும் தலைவனின் உழைப்புத் தெரிந்தது.
குறிப்புகள்
(அ) 1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் இதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டன,
(ஆ) கபட் ன் அஜிதத்தா வீரசச்சாவு 1990.12.22 கட்டுவனில்,
(இ) லெப்.கேணல் ஜொனி வீரச்சாவு 1988.03.13 தேவிபுரத்தில்,
(ஈ) மேஜர் சஞ்சிகா வீரச்சாவு 1990.11.03 மாவிட்டபுரத்தில்,
(உ) 2ம் லெப். நிலா வீரச்சாவு,
(ஊ) வேவுப் புலிகள் வீரச்சாவு
கப்டன் தேனுஜா 1992.07.14 கறுக்காய்தீவில்…..
கப்டன் துளசிராம் 1993.11.11 பூநகரியில்…
லெப்.கேணல் முகுந்தா 1997.06.19 குறிசுட்டானில்,
கப்டன் தேனுஜா 1992.07.14 கறுக்காய்தீவில்…..
கப்டன் துளசிராம் 1993.11.11 பூநகரியில்…
லெப்.கேணல் முகுந்தா 1997.06.19 குறிசுட்டானில்,
(எ) இரண்டு சுப்படோராக்கள் தாக்கப்பட்டது 1995.08.29 அன்று,
(ஏ) 2ம் லெப் இன்குறிஞ்சி வீரச்சாவு 1998.06.16 அம்பகாமத்தில்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
No comments:
Post a Comment