September 27, 2015

இந்திய- சிறிலங்கா அரசுகளின் கூட்டுசதியை முறியடிக்குமா தமிழக அரசு?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு, ஏற்கனவே கைது செய்து வைத்திருந்த 16 தமிழக மீனவர்களை சிறிலங்கா அரசு விடுவித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களில் 21 தமிழக
மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாகபட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இத்தாக்குதலில் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு படகிற்கும் இருபதாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கிடையே, இரண்டு படகுகளில் இருந்த 15 மீனவர்களை கைதுசெய்துள்ளது சிறிலங்கா கடற்படை. அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழக மீனவர்களது கைது சம்பவங்கள் தொடராதிருக்கு நிரந்தரத் தீர்வுகாணப்பட வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில்,
புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 6 பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளார்கள்.
கடந்த அட்சிக்காலத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடுகள் மேற்கொள்ளப்பட்டு பலர் உயிரிழக்க நேர்ந்த சம்பவங்கள் தற்போது நடைபெறாததற்கு மோடி அரசே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறிவரும் நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதல்களும் கைதுகளும் தொடரத்தான் செய்கிறது.
ராஜபக்ச- சோனியா தலைமை மைத்திரி-மோடி என்று மாறினாலும் தமிழக மீனவர்களது துயரம் தொடரத்தான் செய்கின்றது.
இதற்கு அண்மையில் இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு செயலர்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாடு வழியேற்படுத்துகின்றது. எல்லை தாண்டும் மீனவர்கள் மீது அந்தந்த நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க இவ் ஒப்பந்தத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக ஓய்வுநிலை கொடுக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும் கைதுகளும் ஜெனீவாவை மையப்படுத்தியே மீண்டும் வேகம்பெற்றுள்ளது.
இனப்படுகொலை குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணையை தடுக்கும் முயற்சியில் அமெரிக்காவுடன் இந்தியாவும் இணைந்து ஈடுபட்டுவருகையில்,
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கொண்டுவந்த தீர்மானம் மற்றும் ஈழ ஆதரவு கட்சிகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் மீதான தாக்குதல்கள் கைதுகள் தொடர்வதன் மூலம் அதன் பின்னால் தமிழக முதல்வரையும் தமிழக கட்சிகளையும் ஓடவிட்டு பிரச்சினையை திசைதிருப்பவே இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறிலங்கா மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் வரும் நாட்களில் நடந்தேறும். எல்லைதாண்டிவரும் அவர்களை நாங்கள் கைது செய்வது போன்று அவர்களும் இவர்களைக் கைது செய்கிறார்கள் என்று தமிழக மீனவர்களது கைதினை நியாயப்படுத்த இந்த உக்தி கையாளப்படும்.
இது ஒருபுறமிருக்க, கடல்வளத்தை அழிக்கும் மீன்பிடி முறையை தமிழக மீனவர்கள் பின்பற்றிவருவதாலேயே தமிழக கடலோரப் பகுதிகள் மலடாக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்தும் அனுமதிதால் இன்று மீன்வளம் கொழிக்கும் ஈழத்தின் கடலோரப் பகுதிகளும் விரைவில் மலடாக்கப்படும்.
வாழ்வாதாரமன கடல் வளத்தை பாதுகாக்கும் விதத்திலான பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பின்பற்றிவரும் ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் கொள்ளை லாபம் பெறும் ஒரே நோக்கத்தில் கடலை மலடாக்கும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பின்பற்றும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் இருக்கும் இந்த வேறுபாடே அனைத்திற்கும் அடிப்படையாகும்.
இதனை இந்திய-சிறிலங்கா அரசுகள் தத்தமது உறவினை பலப்படுத்திக் கொள்வதற்கான பகடையாகப் பயன்படுத்தி வருகின்றன.
தமிழக அரசு சரியாகச் செயற்பட்டால், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்தவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதை தடுக்கவும் முடியும்.
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் துயரத்திற்கான தீர்வு தமிழக அரசின் ஆட்சி எல்லைக்குட்பட்ட தமிழக கரையிலேயே காணப்படுகையில் அதனை எல்லைதாண்டித் தேடுவது பொறுப்பைத் தட்டிக்களிக்கும் செயற்பாடாகவே அமையும்.
தமிழக அரசு தனது கடமையை செய்வதன் மூலம் இந்திய-சிறிலங்கா அரசுகளின் நலன்சார் நகர்வுகளுக்குள் நசுக்கப்படும் தமிழக மீனவர்களது வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், பாக்கு நீரிணைப் பகுதியின் கடல் வளத்தையும் காப்பாற்ற முடியும்.
mythrn@yahoo.com

No comments:

Post a Comment